``மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த அடுத்த நாளே தமிழகத்தில் தி.மு.க ஆட்சி!' - ப.சிதம்பரம் | Congress Leader p. chidambaram speech in campaign

வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (10/05/2019)

கடைசி தொடர்பு:08:40 (10/05/2019)

``மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த அடுத்த நாளே தமிழகத்தில் தி.மு.க ஆட்சி!' - ப.சிதம்பரம்

``அ.தி.மு.க 100 உறுப்பினர்களை வைத்திருந்தாலும் சரி, 103 உறுப்பினர்களை வைத்திருந்தாலும் சரி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், அடுத்த நாளே தமிழத்தில் தி.மு.க ஆட்சிதான்" என்று ப.சிதம்பரம் அதிரடியாகப் பேசியுள்ளார்.

ப.சிதம்பரம் சூலூர் இடைத்தேர்தல் பிரசாரம்

சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரான தி.மு.க-வைச் சேர்ந்த் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து, காங்கிரஸ் கட்சியின் சார்பாக கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அந்தக் கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம், " காலியாக இருந்த சட்டமன்றத் தொகுதிகளில், இடைத்தேர்தலே நடக்கக்கூடாது என்று அ.தி.மு.க  பிரம்ம பிரயத்னம் செய்தது. எத்தனையோ கோயிலுக்குப் போனார்கள், நீதி மன்றப் படி ஏறினார்கள், தேர்தல் ஆணையத்திற்குச் சென்றார்கள்  ஆனால், கடைசியில் அந்தத் தேர்தல் வந்துவிட்டது. எங்கள் பகுதிக்குக் கிடைக்காத வாய்ப்பு சூலூர் பகுதி மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. எதிரியை வீழ்த்த ஒரு தோட்டாவைப் பயன்படுத்தினால், எதிரி குற்றுயிரும் குலை உயிருமாக இருப்பான். அதனால், எதிரியை வீழ்த்த உங்களுக்கு இரண்டு தோட்டாக்கள் கிடைத்திருக்கிறது.

சூலூர் இடைத்தேர்தல் காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டம் ப.சிதம்பரம் மற்றும் பொங்கலூர் பழனிசாமி

எங்களுடைய கூட்டணி  மூன்று மணி நேரத்தில் நிகழ்ந்த கூட்டணி அல்ல. மூன்று நிமிடத்தில் முடிந்த கூட்டணி. காரணம், இரண்டு கட்சிகளுக்கும் வரலாறு தெரியும். இதுவரை 6 முறை இந்தக் கூட்டணி அமைந்தது. அந்த 6 முறையும் வெற்றிபெற்றுள்ளது என்பதுதான்  முக்கியமான விஷயம். தி.மு.க-வும் காங்கிரஸும் எப்போதெல்லாம் கூட்டணியில் இருக்கிறதோ அப்போதெல்லாம் வெற்றிபெறுவது உறுதி. நாட்டிற்குத் தேர்தல் நடக்கிறபோது, மாநிலங்களின் உணர்வுகளை காங்கிரஸ் மதிக்கிறது. மத்தியில் நமக்கு அணுக்கமான அரசு வேண்டுமென்று தி.மு.க நினைக்கிறது. இதுதான் இந்தக் கூட்டணியின் வெற்றிக்கான காரணம்.

இந்த முறையும் இந்தக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை அடையும்.  இன்று உள்ள மத்திய அரசு, உங்களுக்கு உடன்படாத அரசு.  இந்திய அளவில் மோடி எதிர்ப்பில்  தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. ஏன்? 'தமிழர் என்று ஒரு இனமுண்டு அவருக்கென்று ஒரு குணமுண்டு.' சுயமரியாதை இல்லாதவன் தமிழனாக இருக்க முடியாது. சுயமரியாதை, சாதி ஒழிப்பு, பெண் இழிவுக்கு முற்றுப்புள்ளி இவற்றையெல்லாம் பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் ஆகிய மாபெரும் தலைவர்கள் நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். பெரியார் காங்கிரஸில் இருந்தவர். அவர் எங்கள் பாட்டன். அந்தப் பாட்டன் கற்றுக்கொடுத்த பாடங்களை நாம் மறக்காமல் இருப்பதால்தான் மோடி அரசை வலுவாக எதிர்க்க முடிகிறது.

சூலூர் இடைத்தேர்தல் காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டம்

வடக்கில் உள்ள செல்வாக்கை வைத்துக்கொண்டு ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே உடை என்று சனாதன போக்கை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தும் நோக்கில் நமக்கு சவால்விடும் பி.ஜே.பி-யை நாம் வீழ்த்த வேண்டும். 60 வருடமாக ஆட்சி செய்த காங்கிரஸ் வறுமையை ஒழிக்கவில்லை என்கிறார் தமிழிசை. அவருக்கு 70 -க்கும் 20-க்கும் வித்தியாசம் தெரியவில்லை. அப்படியிருக்கையில் அவருக்கு நாம் எந்தக் கணக்கை சொல்லித் தர முடியும்?  இப்போது காங்கிரஸ் அறிவித்திருக்கும் மாதம் 6.000 ரூபாய் திட்டத்தை நிறைவேற்றவே முடியாது என்று இன்றைய பி.ஜே.பி-யின் நிதி அமைச்சர் சொல்கிறார். நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இந்தத் திட்டத்தை ஒருபோதும் பி.ஜே.பி-யால் நிறைவேற்றவே முடியாது. அதனால்தான் காங்கிரஸ் அறிவித்துள்ளது. நாங்கள் கொண்டு வந்த எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றவே முடியாது என்று சொன்னார்கள். ஆனால், நாங்கள் நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம். 

நாங்கள்  சொல்வது பெரிய திட்டங்கள்தான். அதை மறுக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் மிகப்பெரிய கட்சி. புதிய பெரிய திட்டங்களை அறிவிக்கும்போது, அதை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அதற்கு,  மாநில அரசுகளின் ஒத்துழைப்பு தேவை. மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இல்லையென்றால், எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. மாநிலத்தில் உள்ள அரசு  கான்ட்ராக்ட்டுகள், கமிஷன்கள் பற்றிய  எண்ணத்தில் மட்டுமே இருக்குமானால், எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. ஜிஎஸ்டி பூமாலைதான்.  உலகத்தில் பல நாடுகளில் ஜிஎஸ்டி சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், பி.ஜே.பி-யினால் அது குரங்கு கையில் மாட்டிய பூ மாலையாகிவிட்டது. பி.ஜே.பி-யால் ஜிஎஸ்டி -க்கு கெட்ட பெயர் வந்துவிட்டது.

சூலூர் இடைத் தேர்தல் காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டம்

மத்திய அரசின் மாற்றத்திற்கு வாக்களித்ததோடு நின்றுவிடாதீர்கள். மாநில அரசின் மாற்றத்திற்கு வாக்களியுங்கள். மத்தியில் மாற்று அரசு அமைத்தால், அடுத்த நாளே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறும். இவர்கள் 100 உறுப்பினர்களை வைத்திருந்தாலும் சரி, 103 உறுப்பினர்களை வைத்திருந்தாலும் சரி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த அடுத்த நாளே தமிழத்தில் தி.மு.க ஆட்சிதான். இன்று இருக்கும் அ.தி.மு.க-வுக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் என்கிற இரு ஜோடிகள் போடுகின்ற நாடகம். மோடிக்காக இந்த ஜோடிகள்  ஆடுகிறார்கள். அவ்வளவுதான். இதை ஆட்சி என்று சொல்லவே வெட்கப்படுகிறேன். இவர்களுக்கென்று கொள்கையும் கிடையாது, கத்தரிக்காயும் கிடையாது.

நீட் தேர்வு ரத்து என்பதை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சேர்க்கும்போது யோசித்து யோசித்துதான் சேர்த்தேன்.  ஏனென்றால், அதை செயல்படுத்தவில்லை என்றால், தமிழக மக்கள் நம்மை மன்னிக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். அந்த  அறிவிப்பை ராகுல் காந்தி அறிவித்த அன்றைக்கே, நீட் தேர்வு ரத்து செய்யப்படாது தொடரும் என்று அறிவிக்கிறது பி.ஜே.பி. பியூஷ் கோயல், நீட் தேர்வு தொடரும்;அதை தமிழக அரசை ஏற்க வைப்போம் என்று அடித்துச் சொல்கிறார். சுயமரியாதை, தன்மானம் இருந்தால் பியூஷ் கோயல் சொல்வதை ஏற்க முடியாது என்று இவர்கள் சொல்லியிருக்க வேண்டுமா இல்லையா? ஆனால், எதுவுமே சொல்லவில்லை. அதிலிருந்தே  இவர்கள் தமிழ்நாட்டு மக்கள் பக்கமா பி.ஜே.பி-யின் பக்கமா என்பது தெரியவில்லையா? மோடியை மீறி இந்த ஜோடியால் எதுவும் செய்ய முடியாது. இவர்கள் பி.ஜே.பி-யின் அடிவருடிகளாகச் செயல்படுகிறார்கள்.

தமிழக அரசு என்றால் இப்போது என்ன நினைவுக்கு வருகிறது? தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்  நினைவுக்கு வருகிறது.பொள்ளாச்சி பாலியல் வழக்கு நினைவுக்கு வருகிறது. தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்ட சோதனை நினைவுக்கு வருகிறது. அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா பட்டியல் கைப்பற்றப்பட்டது நினைவுக்கு வருகிறது. மணல் கொள்ளை நினைவுக்கு வருகிறது. ஏதாவது ஒரு நல்ல திட்டம் நினைவுக்கு வருகிறதா? இந்த ஆட்சி தமிழகத்திற்கு மிகப்பெரிய கேவலம். இதற்கு முன்பும் ஆட்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால், இப்படி ஒரு கேலிக்கூத்தான  கைப்பாவை அரசு இதுவரை இருந்ததில்லை" என்று முகம் சுளித்துச் சொன்னவர். இந்த அரசை அப்புறப்படுத்த பொங்கலூர் பழனிச்சாமிக்கு வாக்களித்து வெற்றிபெற வையுங்கள் என்று முடித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க