தலையில் குப்பையைக் கொட்டிய இளைஞர் - கொதித்தெழுந்த நீலகிரி மாவட்ட தூய்மைப் பணியாளர்கள்! | Ooty Sanitary workers protest

வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (10/05/2019)

கடைசி தொடர்பு:09:20 (10/05/2019)

தலையில் குப்பையைக் கொட்டிய இளைஞர் - கொதித்தெழுந்த நீலகிரி மாவட்ட தூய்மைப் பணியாளர்கள்!

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. தற்போது `உன்னத உதகை' திட்டத்தின் கீழ் பொது இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படுவதில்லை. மாறாக, அனைத்து வீடுகளுக்கும் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சென்று குப்பைகளை சேகரித்துவருகின்றனர். வாகனங்கள் செல்லும் இடங்களில், ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு விசில் அடிப்பது வழக்கம். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் குப்பைகளை எடுத்துவந்து ஊழியர்களிடம் கொடுத்தால், அவர்கள் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளைத் தனித்தனியாக வாங்கி லாரிகளில் கொட்டுவது வழக்கம். இந்த நிலையில்,  வழக்கம் போல், தூய்மைப் பணியாளர்கள் சிலர் ஊட்டி  பாம்பேகேசில் பகுதிக்குச் சென்றுள்ளனர். 

தூய்மை பணியாளர்கள்


அப்போது, அங்கு நெடுஞ்சாலைத் துறை அலுவலக கேட் முன் வாகனத்தை நிறுத்திவிட்டு விசில் அடித்துள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் குப்பைகளை பை மற்றும் தொட்டிகளில் கொண்டுவந்து தூய்மைப் பணியாளர்களிடம் கொடுத்துள்ளனர். இருவர் அந்த குப்பைகளை வாங்கி மினி லாரிகளில் கொட்டிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது  சேட் என்ற இளைஞர், குப்பைகளை எடுத்துவந்து நேரடியாக லாரியில் கொட்டியுள்ளார். அந்தக் குப்பை அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் தலை மற்றும் உடல் மீது விழுந்துள்ளது. அப்போது, ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள். நாங்களும் மனிதர்கள்தானே எனக்  கூற, அதற்கு சேட் தகாத வார்த்தைகளில்  பேசியுள்ளதாகத் தெரிகிறது.  இதனால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். 

மேலும், சில ஊழியர்கள் மார்க்கெட்டிற்குச் சென்று, சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, மீண்டும் அந்த இளைஞர் மற்றும் அவருடன் இருந்த சிலர் தூய்மைப் பணியாளர்களைத் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த நபரைக் கண்டித்து ஊட்டி நகராட்சி அலுவலகத்தை தூய்மைப் பணியாளர்கள் முற்றுகையிட்டனர். அவர்கள், விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளனர். எனினும் தொழிலாளர்கள், சேட் பணியாற்றும் மார்க்கெட் கடைக்கு  சுமார் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சென்று, சம்பந்தப்பட்ட கடையை முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து, அவர், தூய்மைப் பணியாளர்களிடம் தான் தகாத வார்த்தை பேசியதற்கும், பணியாளர்கள் மீது குப்பையைக் கொட்டியதற்கும் வருத்தம் தெரிவித்தார்.

 முற்றுகை


இதனைத் தொடர்ந்து,  தூய்மைப் பணியாளர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்தப் பிரச்னையால் ஊட்டியில் சுமார் இரண்டு மணி நேரம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. வாகனங்களும் குப்பைகளை சேகரிக்கச் செல்லவில்லை. ஊட்டியில் தற்போது கோடை சீஸன்  என்பதால், நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்தவண்ணம் உள்ளது. நகர்ப் பகுதிகள், தங்கும் விடுதிகள் என அலைந்து திரிந்து தூய்மைப் பணியாளர்கள் இரவு பகல் பாராது உழைத்துக்கொண்டிருக்கும் சமயத்தில்,  இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது அனைத்து தரப்பு மக்களிடமும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.