எர்ணாகுளத்தில் நீர்நிலைகளின் அருகே உள்ள காஸ்ட்லி அடுக்குமாடிக் கட்டடங்கள் - ஒரு மாதத்தில் இடிக்க உத்தரவு! | SC orders to demolish the buildings near the water

வெளியிடப்பட்ட நேரம்: 10:25 (10/05/2019)

கடைசி தொடர்பு:10:25 (10/05/2019)

எர்ணாகுளத்தில் நீர்நிலைகளின் அருகே உள்ள காஸ்ட்லி அடுக்குமாடிக் கட்டடங்கள் - ஒரு மாதத்தில் இடிக்க உத்தரவு!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ஐந்து அப்பார்ட்மென்டுகளை ஒருமாதத்திற்குள் இடிக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் ஒரு கோடி ரூபாய்க்குமேல் செலவுசெய்து வீடு வாங்கியவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கட்டடங்கள்


கேரள மாநிலம் எர்ணாகுளம் மரட் நகராட்சியில் நீர்நிலைகளையொட்டி, விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள போளி பெய்த் அப்பார்ட்மென்ட், ஜெயின் ஹவுசிங், காயலோரம், ஆல்ஃபா வெஞ்சேழ்ஸ், ஹாலிடே ஹெரிட்டேஜ் ஆகிய ஐந்து அடுக்குமாடிக் குடியிருப்புகளை ஒருமாதத்தில் இடித்து அகற்ற வேண்டும் என சுப்ரீம்கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மரட் பகுதி பஞ்சாயத்தாக இருந்த சமயத்தில் இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஐந்து அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் சுமார் 350 குடியிருப்புகள் உள்ளன. இதில் பல வீடுகள் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் விலைகொடுத்து வாங்கப்பட்டுள்ளன.

குடியிருப்பு

நீர்நிலைகளையொட்டி அமைந்துள்ள இந்தக் கட்டடங்களால் கேரளத்தில் மீண்டும் வெள்ளத்தால் பேரழிவு (கடந்த ஆண்டு மழையால் அழிந்ததுபோன்று) ஏற்பட்டால் கேரளம் தாங்காது என சுப்ரீம்கோர்ட் கருத்து கூறியுள்ளது. ஏற்கெனவே மரட் நகராட்சி தொடுத்த வழக்கில் கேரள ஐகோர்ட் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் சுப்ரீம்கோர்ட் அந்த ஐந்து அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் இடிக்க உத்தரவிட்டுள்ளது. பத்து ஆண்டுகளுக்கும் மேல் குடியிருக்கும் தங்களுக்கு இழப்பீடு தரவேண்டும் என இங்கு குடியிருப்பவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தக் குடியிருப்புக்களில் சினிமா பிரபலங்களும் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.