`சீரியலைப் பார்த்தேன்... லவ் பண்ணினேன்!' - நடிகையைத் தேடி வந்த ஈரோடு இன்ஜினீயர்  | Engineer came to tv actress house says he loves her

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (10/05/2019)

கடைசி தொடர்பு:11:44 (15/05/2019)

`சீரியலைப் பார்த்தேன்... லவ் பண்ணினேன்!' - நடிகையைத் தேடி வந்த ஈரோடு இன்ஜினீயர் 

`சீரியலில்தான் அவரைப் பார்த்தேன், பார்த்ததும் எனக்குப்பிடித்துவிட்டது. அவரை காதலிக்கிறேன். எனக்கு நடிகை ரித்திகாவைத் திருமணம் செய்துவையுங்கள்' என்று ஈரோட்டிலிருந்து வந்த இன்ஜினீயர், நடிகை ஒருவரின் பெயரைச் சொல்லி அடம் பிடித்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வடபழனி போலீஸ் நிலையம்

சென்னை வடபழனி 100 அடி சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வாலிபர் ஒருவர் வந்தார். அடுக்குமாடி குடியிருப்பிலிருந்த காவலாளியிடம் சீரியல் நடிகை ரித்திகாவின் வீடு குறித்து விசாரித்துள்ளார். அதற்கு காவலாளி, நடிகை ரித்திகா இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால், ரித்திகாவைத் தேடிவந்த வாலிபர் அங்கிருந்து செல்லவில்லை. இதையடுத்து அடுக்குமாடிக் குடியிருப்பு காவலாளி, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்தனர். அவர்கள் வாலிபரிடம் விசாரித்தனர். அப்போது போலீஸாரிடம் அந்த வாலிபர், `சீரியலில்தான் நடிகை ரித்திகாவைப் பார்த்தேன். பார்த்ததும் பிடித்துவிட்டது. அவரை லவ் பண்ணுகிறேன். எனக்கும் அவருக்கும் திருமணம் செய்து வையுங்கள்' என்று கூறியுள்ளார். அவரின் பேச்சு, நடவடிக்கைகளைப் பார்த்த போலீஸார், வாலிபரை வடபழனி காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனர். 

விசாரணையில் நடிகை ரித்திகாவைத் தேடிவந்த வாலிபரின் பெயர் பரத் ஆகும். இன்ஜினீயரான இவர் கோபி செட்டி பாளையத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. உடனடியாக பரத்தின் பெற்றோருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் காவல் நிலையத்துக்கு வந்தனர். பரத் செய்த தவறுக்காக போலீஸாரிடம் மன்னிப்பு கேட்டனர். இதையடுத்து இதுபோல இனிமேல் தவறு செய்ய மாட்டேன் என்று எழுதிவாங்கிவிட்டு பரத்தை பெற்றோருடன் போலீஸார் அனுப்பிவைத்தனர். 

 

இதுகுறித்து வடபழனி இன்ஸ்பெக்டர் சரவணனிடம் கேட்டதற்கு,  ``வடபழனி காவல் நிலையத்தில் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை. எனக்கு தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புச் சங்கத்தினரிடம் விசாரித்தேன். அவர்கள், தங்களின் அடுக்குமாடிக் குடியிருப்பில் நடிகை ரித்திகா என்று யாரும் குடியிருக்கவில்லை என்று தெரிவித்தனர். மேலும் காவலாளியிடம் விசாரித்தபோது பரத் என்பவர்தான் அடுக்குமாடிக் குடியிருப்பில் பிரச்னை செய்தார் என்று தெரிவித்தார். மாதத்தில் இதுபோல இரண்டு மூன்று சம்பவங்கள் நடக்கும். நடிகை ரித்திகாவின் பெயரைக் கூறியதால் பரபரப்பாகிவிட்டது. மேலும் நடிகை ரித்திகா தரப்பில் காவல் நிலையத்தில் யாரும் புகார் கொடுக்கவில்லை" என்றார். 

இந்தச் சம்பவம் நடந்தது உண்மைதான் என்று வடபழனி காவல் சரக போலீஸார் நம்மிடம் தெரிவித்தனர். ``கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த பரத். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர், செஸ் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க கோவா செல்வதற்காக அதிகாலையில் சென்னை விமான நிலையத்துக்கு வந்துள்ளார். ஆனால், காலதாமதமானதால் விமானத்தை அவர் தவறவிட்டுள்ளார். அதன்பிறகுதான் வடபழனிக்கு நடிகை ரித்திகாவின் முகவரியை ஆன் லைன் மூலம் தெரிந்துகொண்டு வந்துள்ளார். அவரின் பெற்றோரிடம் விசாரித்தபோது பரத்துக்கு மனரீதியாக சில பிரச்னைகள் இருப்பதாகத் தெரிவித்தனர். மேலும் யாரும் புகார் கொடுக்காததால் அவரை பெற்றோருடன் எச்சரித்து அனுப்பிவிட்டோம்'' என்றனர். 

நடிகை ரித்திகா, மேற்கண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் குடியிருக்கிறாரா என்று போலீஸாரிடம் கேட்டதற்கு அவர்கள் பதிலளிக்கவில்லை. ஆனால் ரித்திகா, தந்தை சுப்பிரமணியுடன் சென்னையில் குடியிருந்துவருகிறார். சம்பவம் நடந்தபோது ரித்திகா வீட்டில் இல்லை என்று தெரிவித்தனர் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இதற்கிடையில் பரத் தரப்பில் போலீஸாரிடம் ஒரு தகவல் சொல்லப்பட்டுள்ளது. அதில், `காதலியைத் தேடிதான் பரத் வந்தார். அவரின் காதலியும் நடிகை ரித்திகாவைப் போலவே இருப்பார். இதனால் தவறான முகவரிக்கு அவர் வந்துவிட்டார்' என்று சொல்லியதாக போலீஸார் தெரிவித்தனர். ஆகமொத்தத்தில் பரத்தின் பிடிவாதத்தில் வடபழனி போலீஸாருக்கும் மட்டுமல்ல தேவையில்லாமல் நடிகை ரித்திகாவுக்கும் தேவையில்லாத டென்சன் ஏற்பட்டுள்ளது.  

 நடிகை ரித்திகா தரப்பில் பேச முயற்சி செய்தோம். ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை. அவர்களின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிட தயாராக உள்ளோம். 

நடிகை ரித்திகாவை காதலிப்பதாகவும் திருமணம் செய்து வைக்கும்படி கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த இன்ஜினீயர் பரத் செய்த பிடிவாதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.