கடல் கன்னியம்மனுக்கு செம விருந்து! - மாமல்லபுரம் கடற்கரையை அதகளப்படுத்தும் இருளர் விழா #MyVikatan | Tribal people gathers at Mamallapuram for Masi Magam

வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (10/05/2019)

கடைசி தொடர்பு:13:55 (10/05/2019)

கடல் கன்னியம்மனுக்கு செம விருந்து! - மாமல்லபுரம் கடற்கரையை அதகளப்படுத்தும் இருளர் விழா #MyVikatan

மாமல்லபுரத்தில் நடைபெறும் மாசிமக தீர்த்தவாரி இருளர்களால் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும். தங்கள் குலதெய்வமான கடல் கன்னியம்மனை வழிபட வடதமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இருளர்கள் ஒன்றுதிரள்கிறார்கள். இதற்காக மாமல்லபுரத்திற்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

மாசி மகம்
 

தீர்த்தவாரிக்கு நான்கு நாள்களுக்கு முன்பே மாமல்லபுரம் இருளர்கள் அங்குள்ள கடற்கரையில் தங்கிவிடுகிறார்கள். கடற்கரை மணலில் நான்கு பக்கமும் சிறிய கம்புகளை நட்டு, அதில் புடவையைக் கொண்டு தடுப்புச் சுவர் போன்ற அமைப்பை ஏற்படுத்தி குடில்கள் அமைக்கிறார்கள்.

இருளர் விழா

ஒரு குடும்பத்தில் எவ்வளவு பேர் தங்குவார்களோ அதற்கேற்றாற் போலக் குடில்களின் அளவு இருக்கும். தீயசக்திகள் எதுவும் அண்டாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தங்கள் குடிலில் வேம்புக் கிளைகளை ஒடித்துவந்து நட்டு வைப்பார்கள். பக்கீங்காம் கால்வாயில் இறால் பிடிப்பது, குளங்களில் மீன் பிடிப்பது, மரங்களின் சருகுகள், காய்ந்த விறகுகளைப் பொறுக்கி வந்து சமைப்பது எனக் கூட்டம் கூட்டமாகத் தங்கி இருப்பார்கள்.

மாசி மகம்
 

சமீபகாலமாக மாசி மகத்திற்கு முந்தைய நாள் இரவு தொண்டு நிறுவனங்கள் சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கொத்தடிமைகள் மீட்பு, கைத்தொழில் கற்றுக் கொள்ளுதல், இருளர்களுக்கான சட்டங்கள், கல்விச் சலுகைகள், உரிமைகள் எனக் கலை நிகழ்ச்சிகள் இருக்கும்.

மாசி மகம்

இருளர்களின் பாரம்பர்ய ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் என அன்று இரவு முழுவதுமே பௌர்ணமி வெளிச்சத்தில் கடற்கரை கோலாகலமாக இருக்கும். மாசி மகத்தன்று அதிகாலையிலேயே எழுந்து கடலில் குளித்து, மணலில் செய்த கன்னியம்மனை வழிபடுகிறார்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் செய்வது குறித்து கன்னியம்மனிடம் குறிகேட்டு சுபநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார்கள். குழந்தைகளுக்கு மொட்டையடித்தல், காது குத்துதல், திருமண நிச்சயம், திருமணம் என அன்று கடற்கரை விழாக்கோலம் பூண்டிருக்கும்.