மன்னார் வளைகுடா தீவுகளைக் கண்டுமகிழ கண்ணாடிப் படகுகள்... வனத்துறையின் 'வாவ்' முயற்சி! | Forest department arranged glass boats for tourists to visit Gulf of Mannar Islands

வெளியிடப்பட்ட நேரம்: 18:29 (10/05/2019)

கடைசி தொடர்பு:18:29 (10/05/2019)

மன்னார் வளைகுடா தீவுகளைக் கண்டுமகிழ கண்ணாடிப் படகுகள்... வனத்துறையின் 'வாவ்' முயற்சி!

வனத்துறையின் இந்த முயற்சியால் ராமேஸ்வரம் வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள தீவுகளையும் அரியவகை கடல்வாழ் உயிரினங்களையும் நேரில் சென்று காணும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது. 

மன்னார் வளைகுடா தீவுகளைக் கண்டுமகிழ கண்ணாடிப் படகுகள்... வனத்துறையின் 'வாவ்' முயற்சி!

ரிய வகை கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்கமாகத் திகழும் மன்னார் வளைகுடா தீவுகளைக் கண்ணாடிப் படகுகளில் சென்று காண்பதற்கான பணிகளை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் 21 குட்டித் தீவுகள் உள்ளன. இந்தக் கடல் பகுதியில் 3,600-க்கும் மேற்பட்ட அரிய கடல்வாழ் உயிரினங்கள், பவளப்பாறைகள் உள்ளன. உலகிலேயே வேறு எங்கும் இல்லாத அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் வாழும் இந்தப் பகுதியைப் பாதுகாக்கும் வகையில் தேசிய கடல்பூங்காவாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. பாதுகாக்கப்பட்ட இந்தப் பகுதிக்குள் மீனவர்களோ மற்றவர்களோ செல்ல தடை உள்ளது. இந்தத் தீவுகளில் முக்கியமானது குருசடை தீவாகும். பல ஆண்டுகளுக்கு முன் இங்கு ஆய்வுக்கூடங்கள் இயங்கி வந்தன. கடல்சார்ந்த அறிவியலாளர்கள், அலுவலர்கள், மாணவர்கள் எனப் பலரும் இங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வந்தனர். காலப்போக்கில் இங்கிருந்த ஆய்வுக்கூடங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டதால் குருசடை தீவு முடங்கிப் போனது. இதனால் மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள தீவுகளுக்குச் செல்ல முடியாத ஏமாற்றமும் நிலவி வந்தது.

பயணிகளுக்கான கண்ணாடி இழை படகுகள்

இந்நிலையில் பாம்பன் ரோடு பாலத்திலிருந்து கடலில் அமைந்துள்ள குட்டித் தீவுகளைச் சுற்றுலாப் பயணிகள் கண்டு சென்றனர். தற்போது சுற்றுலாப் பயணிகளின் இயற்கை ஆர்வத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் தீவுகளுக்கு அழைத்துச் சென்று கடல்வாழ் உயிரினங்களைக் கண்டுகளிக்க வனத்துறையினர் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதற்கேற்ப மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள குருசடைதீவு, புள்ளிவாசல்தீவு, சிங்கிலி தீவு, பூமரிச்சான் தீவு ஆகிய 4 தீவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.

இதன் முதல்கட்டமாகத் தீவுகளைச் சுற்றிய பகுதிகள் மறு எல்லை வரையறை செய்யப்பட்டு புதிய மிதவைகள் போடப்பட உள்ளன. ஏற்கெனவே போடப்பட்டுள்ள மிதவைகள் சரியான எடை அளவில் இல்லாததால், சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தின் நிபுணர்கள், இந்தப் பகுதியின் கடல் மற்றும் அலைகளின் வேகத்தின் தன்மைக்கேற்ப, மிதவைகள் மற்றும் கடலுக்கடியில் இறக்கப்படும் கான்கிரீட் கட்டமைப்புகளை வடிவமைத்துத் தயாரித்துவருகின்றனர். பாம்பன் குந்துகால் பகுதியில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

குருசடை தீவு நுழைவு வாயில்

இந்த மிதவைகள் தலா 500 மீட்டர் இடைவெளியில் 4 தீவுகளைச் சுற்றிலும் அமைக்கப்படும். இவ்வாறு மொத்தம் 28 மிதவைகள் 4 தீவுகளைச் சுற்றிலும் அமைக்கப்பட உள்ளன. இந்தச்சூழல் சுற்றுலாத் திட்டத்தின்கீழ் 4 தீவுகளையும் சுற்றுலாப் பயணிகள் நேரில் சென்று பார்வையிட்டு கடல் அழகையும், அதில் உள்ள அபூர்வ கடல்வாழ் உயிரினங்களையும் பவளப்பாறை உள்ளிட்டவற்றையும் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காகப் பயணிகள் படகு ரூ.15 லட்சத்திலும் 2 கண்ணாடிப் படகுகள் தலா ரூ.10 லட்சத்திலும் வாங்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளன. இந்தப் படகு சவாரிக்காகப் பாம்பன் குந்துகால் பகுதியில் ரூ.5 லட்சத்தில் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. குருசடை தீவுப் பகுதியில் ஏற்கெனவே உள்ள ஜெட்டி ரூ.2 லட்சத்தில் மராமத்து செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாம்பன் குந்துகால் ஜெட்டியிலிருந்து ஒரு படகில் 20 பேரை அழைத்துச் சென்று குருசடை தீவு பகுதியில் இறக்கிவிடப்படும். அந்தத் தீவின் அழகைக் கண்டுகளித்த பின்னர், அங்கிருந்து கண்ணாடிப் படகில் மற்ற 3 தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அப்போது கடலுக்கடியில் உள்ள உயிரினங்கள், தாவரங்கள், பவளப்பாறைகள் உள்ளிட்டவற்றைச் சுற்றுலாப் பயணிகள் நேரடியாகக் கண்டுகளிக்கலாம்.

மன்னார் வளைகுடா தீவுகளுக்கு செல்ல தயாராகும் படகு

இதன்பின்னர் மீண்டும் குருசடை தீவு பகுதிக்குக் கொண்டுவந்து இறக்கிவிட்டு அங்கிருந்து பயணிகள் படகு மூலம் குந்துகாலுக்கு திருப்பி அழைத்து வரப்படுவார்கள். ஒரு நாளைக்கு 5 சுற்றுகள் இதுபோன்று அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படகு சவாரி காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறும். இதற்கான சீட்டுகள் முழுமையாக ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்யப்படும். இந்தப் பணிகள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் முடிவடைந்துவிடும். அதிகபட்சமாக ஜூன் மாத தொடக்கத்தில் படகு சவாரி தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயணிகளுக்கான கண்ணாடி இழை படகுகள்

வனத்துறையின் இந்த முயற்சியால் ராமேஸ்வரம் வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள தீவுகளையும் அரியவகை கடல்வாழ் உயிரினங்களையும் நேரில் சென்று காணும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது. 


டிரெண்டிங் @ விகடன்