`அதிகாரம் பறிப்புக்குத் தடை விதிக்க முடியாது!'– கிரண் பேடிக்கு `ஷாக்' கொடுத்த உச்ச நீதிமன்றம் | SC refuses to stay Madras HC order over Puducherry tussle

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (10/05/2019)

கடைசி தொடர்பு:15:40 (10/05/2019)

`அதிகாரம் பறிப்புக்குத் தடை விதிக்க முடியாது!'– கிரண் பேடிக்கு `ஷாக்' கொடுத்த உச்ச நீதிமன்றம்

``ஆளுநர் கிரண் பேடியின் அதிகாரத்தைப் பறித்து சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புக்குத் தடை விதிக்க முடியாது” என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாகக் கூறியிருப்பதோடு, வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து `ஷாக்' கொடுத்துள்ளது.

கிரண் பேடி

புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் கடந்த 3 வருடங்களாக அதிகார மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் தன்னிச்சையான நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், ``அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளின்படிதான் யூனியன் பிரதேச அரசின் நிர்வாகியான துணைநிலை ஆளுநரால் செயல்பட முடியுமே தவிர, அவருக்கென பிரத்தியேகமான சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை. சட்டப்பேரவையைத் தாண்டிய உயர்ந்த அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. சட்டப்பேரவையில் அதிகாரத்தைக் குறைத்து மதிப்பீடு செய்து, ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தை உயர்த்தி அவருக்கு சிறப்பு அதிகாரம் அளித்து, மத்திய அரசு 2017-ல் பிறப்பித்த 2 உத்தரவுகளும் செல்லாது” என்று அதிரடியாகத் தீர்ப்பளித்தார்.

நாராயணசாமி

அந்தத் தீர்ப்பை எதிர்த்தும், அதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தை அணுகியது மத்திய உள்துறை அமைச்சகம். மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ``சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் புதுச்சேரி அரசு செயல்பட முடியாமல் ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. அதனால் இந்த மேல் முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ``இதை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று நிராகரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்க முடியாது என்று கூறியதோடு, தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைப்பதாக அதிரடியாகக் கூறியிருக்கிறது. மேலும், அதுவரை சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமலில் இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

லட்சுமி நாராயணன்

உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடியைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ``அரசு நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநர் தலையிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கமுடியாது என்றும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியான தீர்ப்பு என்பதைக் காட்டுகிறது. அரசு நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், தொடர்ந்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அவர் செயல்பட்டு வருகிறார். அதனால் கிரண் பேடி நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க நேரிடும். இனிமேலாவது அவர் நீதிமன்ற தீர்ப்பை மதித்து செயல்பட வேண்டும். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அவர், ``ராஜீவ்காந்தி கொலை வழக்குக் குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வதில் எனக்குத் தனிப்பட்ட கருத்து வேறுபாடு இருந்தாலும், ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் அவர்களை மன்னித்து விட்டதால், கட்சியின் முடிவுக்கு நான் ஒத்துப்போகிறேன். பா.ஜ.க ஆட்சி வெளியேறும் நேரம் வந்துவிட்டது. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு முற்றிலும் ரத்து செய்யப்படும்” என்றார்.

நாராயணசாமி

அதேபோல, ``சரியான நேரத்தில் தலையிட்டு புதுச்சேரி அரசு நிர்வாகத்தை சீரான முறையில் வழிநடத்திச் செல்ல உதவிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மத்திய உள்துறைச் செயலாளர் ராஜிவ் கௌபா, கூடுதல் செயலர் கோவிந்த் மோகன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல செழிப்பான புதுச்சேரிக்காகக் கூட்டு நிர்வாகத்தையும் எதிர்பார்க்கிறேன்” என்று வாட்ஸ்அப் மூலம் பத்திரிகையாளர்களுக்கு செய்தியைத் தட்டிவிட்டிருக்கிறார் ஆளுநர் கிரண் பேடி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க