`50 வாக்குப்பெட்டி இயந்திரம் தேனிக்கு வந்தது எப்படி?!'-எடப்பாடி மீது சந்தேகம் கிளப்பும் முத்தரசன் | CPI Mutharasan slams EPS

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (10/05/2019)

கடைசி தொடர்பு:18:30 (10/05/2019)

`50 வாக்குப்பெட்டி இயந்திரம் தேனிக்கு வந்தது எப்படி?!'-எடப்பாடி மீது சந்தேகம் கிளப்பும் முத்தரசன்

முத்தரசன்

``மத்திய அரசோடு உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு விடுதலை வாங்கித் தர முடியாதா?'' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முத்தரசன்

விருதுநகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தேர்தல் முடிந்த பின் தமிழ்நாட்டில் 10 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக மாநிலத் தேர்தல் அலுவலர் தெரிவித்தார். தற்போது திடீரென 43 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடத்த கடிதம் எழுதியிருப்பதாக அவர் கூறுவது வியப்பாக உள்ளது. 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீரென கோயம்புத்தூரில் இருந்து தேனிக்கு வந்திருப்பது சந்தேகமாக உள்ளது. எதிர்க்கட்சியினர் தோற்றுப்போய்விடுவோம் என்ற காரணத்தால் தேர்தல் ஆணையத்தின் மீது பழிபோடுவதாக முதல்வர் கூறுகிறார். அவர் கூறுவதைப் பார்த்தால் தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய மற்றும் மாநில ஆட்சியில் உள்ள கட்சிகளுக்கும் இடையே ஏதேனும் உறவு உள்ளதோ என சந்தேகம் ஏற்படுகிறது.

தேர்தல் ஆணையத்தில் பல குளறுபடிகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. எனவே, 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமா... வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, 4 தொகுதி இடைத்தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு சிறப்பு தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும்.

சென்னையில் உள்ள வாக்காளர்களுக்கு முழுமையாக பூத் சிலிப் கொடுக்காததால் அங்கே வாக்குப்பதிவு குறைந்துவிட்டது. வாக்காளர்களை ஓட்டு போடவிடாமல் தேர்தல் ஆணையம் தடுத்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு முழுமையாக இன்னும் தபால் ஓட்டுகள் கிடைக்கவில்லை. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படாமல் ஒரு சார்பாக செயல்படுகிறது. இது ஜனநாயக விரோதச் செயல்.

முத்தரசன் பேட்டி

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை மன்னித்துவிட்டதாக ராஜீவ்காந்தி குடும்பத்தினரே தெரிவித்துவிட்டனர். 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை அவர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஏறத்தாழ கால் நூற்றாண்டுகளாக அவர்கள் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளனர். மோடியுடன் தமிழக அரசுக்கு உள்ள நல்லுணர்வை பயன்படுத்தி அவர்களுக்கு விடுதலை வாங்கித் தரலாம். தர்மபுரியில் பேருந்தை எரித்து 3 மாணவிகளைக் கொலை செய்து தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கு விடுதலை பெற்றுத் தந்த தமிழக அரசால் 7 பேருக்கு ஏன் விடுதலை வாங்கித் தர முடியவில்லை?

அண்ணா பல்கலைக் கழகம் பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை ரூ.20,000-மாக அதிகரித்துள்ளது அதிர்ச்சியளித்துள்ளது. கல்விக்கட்டணத்தை எக்காரணம் கொண்டும் அதிகரிக்கக் கூடாது. ஊராட்சித் தேர்தல் நடத்தாததால் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படவில்லை. எனவே, உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும். மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் நடந்த உயிரிழப்பு சம்பவம் என்பது படுகொலை. அங்கே ஜெனரேட்டர் வேலை செய்யவில்லை எனக் கூறுவது அருவருப்பாக உள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அரசு மருத்துவமனையில் இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது'' எனத் தெரிவித்தார்.