`ஜாமீன் கிடைத்த மறுநாளே குண்டாஸ்!'- பெரம்பலூர் வக்கீலுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி | Perambalur police arrests Lawyer arul under Goondas act

வெளியிடப்பட்ட நேரம்: 17:43 (10/05/2019)

கடைசி தொடர்பு:17:43 (10/05/2019)

`ஜாமீன் கிடைத்த மறுநாளே குண்டாஸ்!'- பெரம்பலூர் வக்கீலுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி

பெரம்பலூரில் வேலை வாங்கித் தருவதாகப் பெண்கள் பலருக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்ட சம்பவத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் அருள் கைது செய்யப்பட்டதோடு தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

பெரம்பலூர் வக்கீல் அருள்

பெரம்பலூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ, வேலைவாங்கி தருவதாகக்கூறிப் பல பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதில் ஒரு பெண்ணை மிரட்டுவதாகவும் கூறிய செய்தியை பெரம்பலூர் நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளரும் வழக்கறிஞருமான அருள் அண்மையில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். அருள் தந்த இந்தப் பேட்டி தமிழக அளவில் மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியது. இந்தச் செய்தி வெளியானது முதல் பெரம்பலூர் காவல்துறைக்கும், வக்கீல் அருளுக்கும் மிகப்பெரிய கருத்து மோதல்கள் உருவாகியது.

கைது செய்யப்பட்ட பெரம்பலூர் வக்கீல் அருளுக்கு குண்டாஸ்

இதையடுத்து, அ.தி.மு.க பிரமுகர் மீது வழக்கு தொடுத்தவர் மீதே தற்போது போலீஸார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். அவர் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்தது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளிலே அவருக்கு ஜாமீன் கிடைத்தது. அப்போது நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அருள், ``தமிழக அரசின் ஒடுக்குமுறையால் வழக்கு போட்டு என்னை முடக்கி விடலாம் என்று நினைக்கிறார்கள். இது ஒருபோதும் நடக்காது. இதற்கு நான் அஞ்சப் போவதுமில்லை. நான் எவ்வளவு வேதனையை எதிர்கொள்கிறோனோ கண்டிப்பாக எம்.எல்.ஏ இளம்பை தமிழ்செல்வன் அனுபவிப்பார்" என்று ஆவேசமாகப் பேசினார். 

பெரம்பலூர் எஸ்பி அலுவலகம்

அடுத்த கனமே தமிழக அரசுக்கும், எம்.எல்.ஏ-வின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டார் என்று மற்றொரு வழக்கில் வக்கீல் அருள் மீண்டும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் அருளுக்கு நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியிருந்தது. 

இந்த நிலையில், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பெரம்பலூர் எஸ்.பி பரிந்துரை செய்தார். இதையடுத்து, கலெக்டர் சாந்தா வக்கீல் அருளைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு ஆணையைப் பெரம்பலூர் போலீஸார் திருச்சி மத்தியச் சிறை அதிகாரிகளிடம் அளித்தனர்.