`அது வதந்திதான், உண்மையில்லை!' - பள்ளிக் கல்வித்துறை விளக்கம் | TN school education department set aside rumors over language selection

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (10/05/2019)

கடைசி தொடர்பு:20:10 (10/05/2019)

`அது வதந்திதான், உண்மையில்லை!' - பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

பள்ளிக்கல்வித் துறை

காலையில் வெளியான ஓர் தகவல் கல்வி வட்டாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. "11 மற்றும் 12-ம் வகுப்புகளில், மாணவர்கள் மொழிப் பாடமாகத் தமிழ் மற்றும் ஆங்கிலம் இருந்து வருகின்றன. ஆனால், இந்த ஆண்டிலிருந்து மாணவர்கள் மொழிப் பாடமாகத் தமிழ், ஆங்கிலம் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஆறு பாடங்கள் 600 மதிப்பெண்கள் என்பது மாற்றப்பட்டு, ஐந்து பாடங்கள் (மொழிப் பாடத்தில் ஒன்று குறைந்ததால்) 500 மதிப்பெண்கள் என்றாகிறது" இந்த அறிவிப்பு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பாக வெளியானது என்று காலையில் பரப்பராகப் பேசப்பட்டது. கல்வியாளர்கள் மத்தியில் இதற்குக் கடும் விமர்சனம் எழுந்தன. இந்நிலையில், 'இந்த அறிவிப்பு பொய்யானது' என்று பள்ளிக் கல்வித்துறை கூறியது. இது பற்றி மேலும் தெரிந்துகொள்ள கல்வி வட்டாரத்தைச் சேர்ந்த ஓர் அதிகாரியிடம் பேசினோம்.

``11 மற்றும் 12-ம் வகுப்புகளில் விரும்பிய மொழிப் பாடத்தை மட்டும் தேர்வு செய்யலாம் என்று பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளதாகச் சொல்வதில் துளியும் உண்மை இல்லை. முழுக்க முழுக்க வதந்திதான் அது. இப்படியான அறிவிப்புகள் சட்டசபைக் கூட்டத்தொடர் நடக்கும்போதுதான் அறிவிக்கப்படும். அப்படியான திட்டங்கள் ஏதும் இல்லை. இந்தச் செய்தியை பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே மறுத்துவிட்டது. எனவே, அந்தச் செய்தியை நம்ப வேண்டாம்" என்றார்.