ஏ.கே 47, ஸ்டென் கன்... - தேனி போலீஸாரை அதிரவிட்ட கொள்ளையர்கள்! | Theni police seized AK47 and other guns from robbers

வெளியிடப்பட்ட நேரம்: 19:34 (10/05/2019)

கடைசி தொடர்பு:19:34 (10/05/2019)

ஏ.கே 47, ஸ்டென் கன்... - தேனி போலீஸாரை அதிரவிட்ட கொள்ளையர்கள்!

தேனியில் கொள்ளையடிப்பதற்காக பதுங்கியிருந்த கொள்ளையர்கள் தொடர்பான தகவலை அடுத்து, அவர்கள் இருந்த இடத்தை சுற்றிவளைத்த போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏ.கே 47, ஸ்டென் கன் உட்பட ஐந்து துப்பாக்கிகள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் அவர்கள் வைத்திருந்ததே அதற்கு காரணம்.

கொள்ளையர்கள்

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது பொட்டல்களம். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் கெளர்மோகன் தாஸ் என்பவருக்குச் சொந்தமான இடம் உள்ளது. அங்கு கூட்டாக பத்துக்கு மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களோடு பதுங்கி இருந்து தேனியின் பல்வேறு பகுதிகளில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, போடி தாலுகா உதவி காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான தனிப்படையினர், கெளர்மோகன்தாஸின் இடத்தைச் சுற்றி வளைத்தனர்.

கொள்ளையர்கள்

போலீஸாரைக் கண்டதும் அங்கு பதுங்கியிருந்த கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதில் கெளர்மோகன்தாஸ் போலீஸிடம் சிக்கியுள்ளார். அங்கு சோதனை செய்த போலீஸாருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒரு ஏ.கே 47 துப்பாக்கி, ஒரு ஸ்டென் கன்,  இரண்டு ஏர் பிஸ்டல்கள், ஒரு நாட்டுத்துப்பாக்கி இருந்துள்ளது. மேலும், பட்டாக் கத்திகள், வாள், ஈட்டி போன்ற பயங்கர ஆயுதங்களும், பல மொபைல் போன்களும் கைப்பற்றப்பட்டன. மேலும், கோயில் கலசங்களும், சிலைகளும் இருந்துள்ளன. ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. துப்பாக்கிகளை ஆய்வு செய்த போலீஸார், அவை டம்மி துப்பாக்கிகள் என உறுதிசெய்துள்ளனர். கெளர்மோகன்தாஸ் கைது செய்யப்பட்டார். அவரை போடி தாலுகா காவல்நிலையத்துக்கு அழைத்துவந்து போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள். தப்பி ஓடியவர்களை சிறப்புப்படை அமைத்து போலீஸார் தேடிவருகிறார்கள்.