பச்சைக்கிளிகளும்  இலுப்பை மரங்களும் எங்கே போனது? - நாகை `மெசபடோமியா’ பொலிவிழந்த கதை #MyVikatan |  Nalladai village in Nagapattinam now became dull 

வெளியிடப்பட்ட நேரம்: 21:23 (10/05/2019)

கடைசி தொடர்பு:11:59 (11/05/2019)

பச்சைக்கிளிகளும்  இலுப்பை மரங்களும் எங்கே போனது? - நாகை `மெசபடோமியா’ பொலிவிழந்த கதை #MyVikatan

மேற்கு ஆசியாவில் யூக்ரட்டீஸ் - டைக்ரட்டீஸ்  ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடையே உள்ள பகுதியை மெசபடோமியா என்பர். அதுபோல் நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள நல்லாடை கிராமமும் காவிரியின் கிளை நதிகளான வீரசோழன் - நண்டலாறு  ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட  மெசபடோமியா பகுதிதான். 

இலுப்பை மரம்


சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் இக்கிராமம் இலுப்பை மரங்கள் சூழ்ந்த அடர்ந்த வனமாக இருந்தது. அந்த இலுப்பை மரங்களில் ஆயிரக்கணக்கான பச்சைக்கிளிகள் வசித்து வந்தன. அதனால் எப்போதும் கிளிகளின் ஓசை ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அந்த மரங்களில் உள்ள பழங்களை கிளிகள் சுவைத்து உணவாகக் கொண்டு விதைகளைக் கீழே போடும். அதைப்  பொறுக்கி எடுக்க மரங்களைச் சுற்றி காலை மாலையென இரண்டு வேளைகளிலும் மக்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். இந்த விதைகளைக் கொண்டு சிறுவர்கள் எத்துக்காய் விளையாடியும் சேகரிப்பார்கள்.

இலுப்பை மரம்

ஒவ்வொரு வீட்டின் முன்பும் இலுப்பை விதைகள் வட்ட வடிவில் வெயிலில் காய வைத்திருப்பார்கள். விளையாடுவதற்காகச் சிலர் அந்த விதைகளைத் திருடுவதும் உண்டு. இப்படிக் காயவைக்கும் விதைகளைத் தீபாவளிக்கு முன்பு செக்கிலிட்டு எண்ணெய்யாக மாற்றுவார்கள். அந்த இலுப்பை எண்ணெய்யில்தான் தீபாவளிப் பலகாரமே தயார் செய்வார்கள். இதில் தயாரிக்கும் பலகாரங்கள் நீண்ட நாள்கள் கெடாமல் இருப்பதோடு, சுவையும் நன்றாக இருக்கும். உடல் நலத்துக்கும் தீங்கு தராது. தற்போது மருந்துக்குக்கூட இலுப்பை  மரங்களும் இல்லை. அதில் அமர்ந்து இசைபாடும் பச்சைக்கிளிகளும் இல்லை. இலுப்பை எண்ணெய் பயன்பாடு முற்றிலும் மறக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. இவை யாவும் மலரும் நினைவுகள் ஆகிப் போனது வருத்தமே!