`தமிழகம் தலைகுனிய நீங்கள்தான் காரணம்!' - ஸ்டாலினை விமர்சிக்கும் தமிழிசை | Vellore election was canceled due to DMK. That's why Tamilnadu has shattered, says Tamilisai Soundararajan

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (10/05/2019)

கடைசி தொடர்பு:21:40 (10/05/2019)

`தமிழகம் தலைகுனிய நீங்கள்தான் காரணம்!' - ஸ்டாலினை விமர்சிக்கும் தமிழிசை

வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதுக்குக் காரணம் தி.மு.கதான். இதனால் தமிழகம் தலைகுனிந்துள்ளது என்று பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழிசை

வேலூரில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் தி.மு.க வேட்பாளராக போட்டியிட்டார். இந்த நிலையில், துரைமுருகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் துரைமுருகன் வீட்டிலிருந்து கணக்கில் வராத பணம் 10.5 கோடி ரூபாய் மீட்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இதனால், வேலூரில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு, வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

துரைமுருகன்

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை, ``அகில இந்திய அளவில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட ஒரே தொகுதி வேலூர்தான். அதற்குக் காரணம் அங்கே தி.மு.க பொருளாளராக உள்ள துரைமுருகன் தொடர்புடன் பிடிபட்ட கோடிக்கணக்கான கறுப்பு பணம் என்பது ஊரறிந்த உண்மை. தமிழகத்தை வெட்கித் தலைகுனிய வைத்திருக்கிறது தி.மு.க. இதற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் என்ன பதில் சொல்வார்?'' என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.