கிழக்குத்தொடர்ச்சி மலையில் பெருஞ்சாம்பல் அணில்கள்... உருவாகுமா இரண்டாவது சரணாலயம்? | Ecologists demand to form the second sanctuary for squirrels to protect grizzled giant squirrels

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (10/05/2019)

கடைசி தொடர்பு:11:26 (15/05/2019)

கிழக்குத்தொடர்ச்சி மலையில் பெருஞ்சாம்பல் அணில்கள்... உருவாகுமா இரண்டாவது சரணாலயம்?

ணில் வகைகளில் ஒன்றுதான் பெருஞ்சாம்பல் அணில் (grizzled giant squirrel). இவை அதிகமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளான சின்னாறு வனவிலங்கு சரணாலயம், ஆனைமலை புலிகள் காப்பகம், பழனி மலைத்தொடர் போன்ற பகுதிகளில் இருப்பது மட்டும்தான் நமக்குத் தெரியும். ஆனால், இவை கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலும் வசிப்பதாக புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

சமீபத்தில் சென்னைக்கு அருகேயுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சியில் காணப்படும் பாக்க மலையில் கள ஆய்வு ஒன்றை  பாண்டிச்சேரி பிரெஞ்ச் இன்ஸ்டியூட்டின் டாக்டர் பாலசந்தர் தலைமையில் ஒரு குழுவும் மற்றும் உள்நாட்டு பல்லுயுரி பாதுகாப்பு அமைப்பைச் சார்ந்தவர்களும் நடத்தினர். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள உள்நாட்டு பல்லுயிரி பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த ராமன் மற்றும் விமல் அவர்களிடம் பேசினோம்.

"இப்பகுதியை ஆய்வு செய்யும்போது கிட்டத்தட்ட 363-க்கும் அதிகமான பெருஞ்சாம்பல் அணில்களின் கூடுகள் இருந்தன. அது மட்டுமல்லாமல் ஊர்வனங்கள், பாலூட்டிகள், நீர்நிலவாழ் உயிரினங்கள், காட்டுப்பூனை, புனுகுப் பூனை, சருகு மான், தங்கப் பல்லி ஆகியவையும் இருந்தன. அதையும் நாங்கள் பதிவு செய்தோம். இம்மலையில் உள்ள மூலிகைகள் மிகவும் பழைமை வாய்ந்ததாகவும், சிறப்பு வாய்ந்தவைகவும் இருக்கின்றன. நிறைய பாரம்பர்ய மரங்களும் இங்கு காணப்படுகின்றன.

பெருஞ்சாம்பல் அணில்கள்

மழைப்பொழிவின்போது மலையைச் சுற்றியுள்ள கிராமங்கள் நல்ல வளர்ச்சியைப் பெறுகின்றன. இதற்கு முன்னர் 2014-ம் ஆண்டு திருவண்ணாமலை சரணாலயத்தில் பெருஞ்சாம்பல் அணில்கள் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு வாழும் உயிரிகளின் பழக்கவழக்கம், இடம்பெயருதல், உணவுப்பழக்கம், வலசை செல்லும் பாதைகள் இங்கும் காணப்படுகிறது. இவ்வளவு வன உயிரிகளும், மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழ்கின்ற பெருஞ்சாம்பல் அணில்களும், கிழக்கு தொடர்ச்சி மலையில் இருப்பது காப்பாற்றப்பட வேண்டியதாக உள்ளது. இல்லையென்றால் வேட்டையாடிகளால் வேட்டையாடப்பட்டு உயிரினங்கள் அழியும் சூழ்நிலை உருவாகும். ஶ்ரீவில்லிபுத்தூர் அணில்கள் சரணாலயத்தைப்போல் இந்த இடத்தைக் காப்பாற்றினால் இரண்டாவது அணில்களுக்கான சரணாலயமாக உருவாகும். நாங்கள் பதிவுசெய்த அறிக்கைகள், வனவிலங்குகளின் கணக்கெடுப்பு ஆகியவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளோம். எனவே தமிழக அரசும் வனத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையாக உள்ளது" என்றார்.

பொதுவாக மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை அடிக்கடி இயற்கை ஆர்வலர்கள் எழுப்பி வருகிறார்கள். கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடராக இல்லாமல் குன்றுகளாகவும், ஆங்காங்கே விடுபட்டும் காணப்படுகின்றன. அந்த ஒரே காரணத்தால் வனவிலங்குகளின் வலசையும் இடம்பெயருதலும் இங்கு குறைவாகத்தான் காணப்படுகிறது.