`ஆளுநர் அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தமாட்டார் என நம்புகிறேன்!’- 7 பேர் விடுதலைக் குறித்து துரைமுருகன் | Duraimurugan talks about the prisoners in rajiv murder case

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (11/05/2019)

கடைசி தொடர்பு:08:00 (11/05/2019)

`ஆளுநர் அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தமாட்டார் என நம்புகிறேன்!’- 7 பேர் விடுதலைக் குறித்து துரைமுருகன்

``உச்சநீதிமன்றம் பச்சைக் கொடி காட்டிய பிறகும் ஏழு பேரையும் விடுதலை செய்யாவிட்டால் ஆளுநரை ‘இரக்கமில்லா அரக்கர்’ என்று மக்கள் சொல்லும் நிலை ஏற்படும்’’ என்று தி.மு.க பொருளாளர் துரைமுருகன் விமர்சனம் செய்திருக்கிறார்.

தி.மு.க பொருளாளர் துரைமுருகன்

வேலூர் தி.மு.க. எம்.எல்.ஏ கார்த்திகேயனின் புதிய திருமண மண்டப திறப்பு விழாவில், பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர்ஆனந்த், முன்னாள் மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், ‘‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடிக்கொண்டிருப்பவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று நாட்டில் உள்ள சமூக அமைப்புகள் கேட்டன. நல்லோர்கள், மனிதாபிமானம் உள்ளோர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் கேட்டார்கள். ஆனால், இதுவரை ஏழு பேரும் விடுதலை செய்யப்படவில்லை. 

கடைசியாக உச்சநீதிமன்றமே பச்சைக் கொடி காட்டியிருக்கிறது. அதன் பிறகும் ஆளுநர் மௌனம் சாதிப்பது வருத்தத்துக்குரியது. இனிமேலும் அவர்களை விடுதலை செய்யாவிட்டால் இதயத்தில் இரக்கமில்லை என்றுதான் பொருள். ‘இரக்கமில்லா அரக்கர்’ என்று கம்பன், ராவணேஸ்வரரை சொன்னார். அதே போன்று தமிழக மக்களும் சொல்லும் நிலையை நம்முடைய ஆளுநர் ஏற்படுத்த மாட்டார் என்று நினைக்கிறேன். ஆளுநர் பிள்ளைகுட்டி பெற்றவர். அரசியலில் நீண்டகாலம் இருந்தவர். எல்லோரிடத்திலும் அன்போடு பழகக்கூடியவர். எனவே, ஏழு பேரையும் விடுதலை செய்து அவருடைய வாழ்க்கையிலும், வரலாற்றிலும் சிறப்பம்சத்தை பெறவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.