`மத்திய அரசு அமைய ஏப்ரல் 18; மாநில அரசு அமைய மே 19!” - கரூரில் ப.சிதம்பரம் பேச்சு | P. Chidambaram campaign for senthil balaji in karur

வெளியிடப்பட்ட நேரம்: 08:42 (11/05/2019)

கடைசி தொடர்பு:08:42 (11/05/2019)

`மத்திய அரசு அமைய ஏப்ரல் 18; மாநில அரசு அமைய மே 19!” - கரூரில் ப.சிதம்பரம் பேச்சு

``இந்தியாவிலே பி.ஜே.பி எதிர்ப்பு உணர்வு அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்தான்" என்று முன்னாள் மத்திய அமைச்சர்ப.சிதம்பரம் பேசினார்.

 அந்த பொதுக்கூட்டம்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து, அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட க.பரமத்தியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டார். கூடவே, தமிழக மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் அமைச்சர் பொன்முடி, காங்கிரஸ் கட்சி கரூர் மாவட்ட தலைவர் சின்னசாமி, கரூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய ப.சிதம்பரம்,"காங்கிரஸ், தி.மு.க கட்சிகள் 6 முறை கூட்டணி வைத்து, 6 முறையும் வெற்றிப்பெற்றுள்ளது. 7வது முறையாக இம்முறை வைத்துள்ள கூட்டணியும் வெற்றிப்பெறும். அதற்கு காரணமான வாக்களித்த உங்களுக்கும் நன்றி சொல்கிறேன்.  இந்தியாவில் பி.ஜே.பி எதிர்ப்பு உணர்வு அதிகம் உள்ள மாநிலம் தமிழகம். பி.ஜே.பி எதிர்ப்பு உணர்வை வரிசைப்படுத்தினால், நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் வரும்.

மோடி போக வேண்டும் என்பதில் எந்த விவாதமும் தேவையில்லை. கடந்த 5 ஆண்டுகளே அதற்கு சாட்சி. மத்தியில் மோடி ஆட்சி நிறைவடைய வேண்டும். தமிழகத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஜோடி போகவேண்டும். மோடி வேறு, ஈ.பி.எஸ்  மற்றும் ஓ.பி.எஸ் வேறு அல்ல. மோடிதான் சூத்திரதாரி. இவர்கள் பொம்மலாட்ட கைப்பாவைகள். தமிழகத்தில் உள்ளது அரசே கிடையாது. இப்போது உள்ளது எம்.ஜி.ஆர் கண்ட அ.தி.மு.க, ஜெயலலிதா வளர்த்த அ.தி.மு.க கிடையாது. ஒ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவர் ஜோடியால், தமிழகம் சூறையாடப்படுகிறது. 

ப.சிதம்பரம் பேசியபோது....

கடந்த 2, 3 ஆண்டுகளில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. அ.தி.மு.க என்றால், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, பொள்ளாச்சி சம்பவம், தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் அறையை சோதனையிட்டது, மணல், கிரானைட் கொள்ளைதான் நினைவுக்கு வருகிறது. அத்துடன், விவசாய நிலத்தை பாழ்படுத்திய நெடுவாசல் போன்றவையே நினைவுக்கு வருகின்றன.  3 ஆண்டுகளாக தமிழகத்தை ஏமாற்றியது இந்த  ஆட்சி. டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ராகுல்காந்தி பிரதமரான மறுநாள் தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும். மக்களவை, சட்டப்பேரவை இணைந்து, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயலாற்றவேண்டும். நீட் தேர்வால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துக்கொண்டார். 

டெல்லியிருந்து தமிழக மருத்துவக்கல்லூரியில் சேருவது என முடிவு செய்கின்றனர். மத்திய அரசுக்கு, தமிழக அரசு அடிமையாக உள்ளது. மத்திய அரசு வைத்ததுதான் சட்டமா?. நீட் தேர்வு ரத்து செய்ய ஜோடி அரசு குரல் அரசு கொடுக்கவில்லை. மத்திய அமைச்சர்கள் பியூஸ்கோயல் பி.ஜே.பி ஆட்சி வந்தால், நீட் தேர்வு தொடரும். தமிழக அரசு ஏற்றுக்கொண்டது என்கிறார். ஜவடேகர் எந்த மாநிலத்திற்கும் நீட் தேர்வில் விலக்கு இல்லை என்கிறார். இவர்களுக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது?. இது மாநில அதிகாரத்தை பறிக்கும் செயல். இதனை எதிர்த்து தமிழக அரசு எந்த குரலும் கொடுக்கவில்லை. ஒ.பி.எஸ், ஈ.பி.எஸ் அரசு மோடியின் பினாமி அரசு. மத்திய அரசு அமைய ஏப்ரல். 18 வாக்களித்தீர்கள். மாநில அரசு அமைய மே 19-ம் தேதி வாக்களியுங்கள் என்றார்.