இயற்கையில் விளையும் வாழை குலைக்கு தங்க மோதிரம்! - அசத்தும் குமரி கிராம கோயில்! | Different festival held in kanyakumari temple

வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (11/05/2019)

கடைசி தொடர்பு:10:10 (11/05/2019)

இயற்கையில் விளையும் வாழை குலைக்கு தங்க மோதிரம்! - அசத்தும் குமரி கிராம கோயில்!

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகக் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கோயில் விழாவில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட வாழை குலைகளை கட்டும் போட்டி நடத்தப்படுகிறது. அதில் சிறந்த வாழை குலை கட்டும் விவசாயிக்குத் தங்க மோதிரம் வழங்கிக் கவுரவிக்கிறார்கள்.

கோயில்

நாகர்கோவிலை அடுத்த தாராவிளையில்  தேவி முத்தாரம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கோயில் கொடை விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். கோயில் திருவிழாவில் குலைவாழை போட்டி ஆண்டுதோறும் நடத்துகின்றனர். குலைவாழை போட்டியில் இயற்கை விவசாயம் மூலம் விளைந்த வாழைக் குலைகள் மட்டுமே கோயிலில் கட்ட வேண்டும். அப்படிக் கட்டப்படும் குலை வாழைகளில் மிகவும் சிறந்த வாழை குலைக்கு முதற்பரிசாகத் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. இரண்டாவது இடம்பிடிக்கும் வாழை குலைக்கு வெள்ளி பரிசும் வழங்கப்படுகிறது. இன்று தொடங்கிய கோயில் விழாவில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பல்வேறு ரக வாழைக் குலைகள் கட்டப்பட்டுள்ளன.

குலை வாழை

இதுகுறித்து கோயில் நிர்வாகி ஒருவர் கூறுகையில், "வருடம்தோறும் நடக்கும் கோயில் திருவிழாவில் குலைவாழை போட்டி நடத்தப்படும். இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் விதமாக, இயற்கை விளைபொருள்கள் மீது இளைய தலைமுறையினருக்கு ஆர்வத்தை ஏற்படுத்த இந்த போட்டி உறுதுணையாக உள்ளது. இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், மழை வேண்டியும்  நாங்கள் கோயில் திருவிழாவில் குலைவாழை கட்டும் போட்டி நடத்துகிறோம். எங்கள் ஊரிலே இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட வாழைத்தார்கள் கோயில் முகப்புகளில்  கட்டப்பட்டுள்ளது.  இதில் நேர்த்தியான வாழைத்தாரைத் தேர்ந்தெடுத்து அதற்கு முதல் பரிசாக தங்க மோதிரமும், இரண்டாவது இடம் பிடிக்கும் வாழை குலைக்கு வெள்ளியிலும் பரிசுகள் வழங்கிக் கௌரவிக்க உள்ளோம்" என்றார்.