`ரூ.25 கோடி சொத்துக்காக என் மகனை கடத்திவிட்டார்!' - செந்தில் பாலாஜி மீது கரூர் பெண் அதிர்ச்சிப் புகார் | "Senthil Balaji has kidnapped my son for 25 crore worth of property!" - Karur woman

வெளியிடப்பட்ட நேரம்: 11:14 (11/05/2019)

கடைசி தொடர்பு:11:14 (11/05/2019)

`ரூ.25 கோடி சொத்துக்காக என் மகனை கடத்திவிட்டார்!' - செந்தில் பாலாஜி மீது கரூர் பெண் அதிர்ச்சிப் புகார்

 "என் மகனை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது ஆட்களும்தான் கடத்திச் சென்றிருப்பார்கள். அவர்களிடமிருந்து என் மகனை மீட்டுத் தரவேண்டும்" என்று கரூரைச் சேர்ந்த தெய்வானை என்ற பெண் கூறும் குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குளத்துபாளையம்

வரும் மே 19-ம் தேதி, அரவக்குறிச்சி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தி.மு.க சார்பில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். இந்நிலையில், அவர்மீது தெய்வானை கூறும் அதிரடிக் குற்றச்சாட்டால், செந்தில் பாலாஜி தரப்பு ஆடிப்போய்கிடக்கிறது. கரூர் நகராட்சிக்கு உட்பட்ட குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், ராமலிங்கம். இவரது மனைவி தெய்வானை (62). இவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால், கோகுல் என்ற ஆண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்துவந்தனர். இந்நிலையில், ராமலிங்கம் கடந்த 16 வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். இவர்களுக்கு  சொந்தமாக விவசாயத் தோட்டம், காலியிடம் என 25 கோடிக்கும் மேலாக சொத்து உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் சேர்ந்து கோகுலை கடத்திச்சென்று, குடும்பச் சொத்தை எழுதி வாங்கியதாக அப்போது புகார் எழுந்தது. இது தொடர்பாக, கரூர் குற்றவியல் நீதிமன்றம் எண் ஒன்றில் வழக்கு நடைபெற்றுவருகிறது. தற்போது, இவ்வழக்கின் விசாரணை நடந்துவருகிறது.

செந்தில் பாலாஜி

விசாரணையின்போது கோகுல் வாக்குமூலம் அளித்தால், அது செந்தில் பாலாஜிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. கோகுல், கடந்த சில வருடங்களாக கோவையில் தங்கி பணியாற்றிவருகிறார். அவரது மனைவியும் மகனும் அங்கேயே உடன் உள்ளனர். இதனிடையே, தனது தாயாரைப் பார்க்க கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி கரூருக்கு வந்துவிட்டுச் சென்றவர், அதன்பின் மாயமாகி விட்டதாகச் சொல்லப்படுகிறது. கோவை வீட்டிலும் இல்லை. இதுதொடர்பாக கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில், 'என் மகனை காணவில்லை' என தெய்வானை புகார் அளித்துள்ளார். 'இந்தப் புகாரின்மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை' என்று கடந்த 6-ம் தேதி ஆட்கொணர்வு மனு ஒன்றையும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெய்வானை தாக்கல்செய்துள்ளார். வழக்கு விசாரணையின்போது, 'தனக்கு எதிராக சாட்சியமளித்தால் பாதிப்பு ஏற்படும் எனக் கருதி, செந்தில் பாலாஜியும் அவரது அடியாட்களும் தான் தனது மகனை கடத்தி வைத்திருக்கக்கூடும். எனவே, எனது மகனையும் எனது சொத்தையும் மீட்டுத்தர வேண்டும்' என தெரிவித்தார்.

தெய்வானை

இந்நிலையில், பத்திரிகையாளர்களிடம் பேசிய தெய்வானை, "கடந்த 2011-ம் ஆண்டு என் மகனை கடத்திச்சென்றதோடு, எங்களது பூர்விகச் சொத்தை எழுதிவாங்கினர். அதுபற்றிய எனது புகார்மீது இதுவரை நடவடிக்கை இல்லை. அதனால், ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல்செய்தேன்" என்றார். ஏற்கெனவே, இதுசம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சூழலில், தற்போது செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க சார்பில் போட்டியிடுவதால், இந்தப் பிரச்னை ஆளுங்கட்சியினர் தூண்டுதலின்பேரில் பெரிதாக்கப்படுவதாக செந்தில் பாலாஜி தரப்பு புலம்பிவருகிறது.

இந்த குற்றச்சாட்டு குறித்து செந்தில் பாலாஜி தரப்பில் பேசினாேம். "இது பாேக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அரங்கேற்றும் நாடகம். அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜியின் வெற்றி பிரகாசமாவிட்டது. அதனால், 'அதை எப்படி தடுக்கலாம்' என்று யாேசித்து, தெய்வானையை மிரட்டி, இப்படி பரபரப்பு பேட்டி காெடுக்க வச்சுருக்காங்க. காேர்ட்டில் ஆட்காெணர்வு மனு பாேட வச்சுருக்காங்க. ஆரம்பத்தில் செந்தில் பாலாஜி மீது பாேடப்பட்ட அந்த வழக்கே பாெய்வழக்கு. நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் அந்த வழக்கின் தீர்ப்பு செந்தில் பாலாஜிக்கு சாதகமாக வர்றமாதிரி இருக்கு. இதற்கிடையில், களத்தில் நின்று செந்தில் பாலாஜியை ஜெயிக்கமுடியாத அமைச்சர், இப்படி குறுக்குவழியில் அவரை சாய்ச்சுடலாம்ன்னு நினைக்கிறார். அந்த முயற்சி புஸ்வானமாகதான் பாேகும்" என்றார்கள்.