`30 குழந்தைகள் விற்பனை; இதில் 24 பெண்கள், 6 ஆண்கள்!'- அதிரடி காட்டும் சிபிசிஐடி | Child kidnapping case at namakkal

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (11/05/2019)

கடைசி தொடர்பு:12:40 (11/05/2019)

`30 குழந்தைகள் விற்பனை; இதில் 24 பெண்கள், 6 ஆண்கள்!'- அதிரடி காட்டும் சிபிசிஐடி

குழந்தைகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வெளியான ‘வாட்ஸ்அப்’ உரையாடல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோ வைரலாக, இதனைத் தொடர்ந்து ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ராசிபுரத்தைச் சேர்ந்த விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஈரோடு தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த செவிலியர் பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டு, தற்போது விசாரணை வளையத்தில் உள்ளனர். 

 ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி

தனியார் கருத்தரிப்பு மைய செவிலியரான பர்வீன், கருத்தரிப்பு மையத்தில் கருமுட்டைகளைப் பெற்றுத்தரும் பொறுப்பில் இருந்துள்ளார். இதைப் பயன்படுத்தி, கருத்தரிக்கும் வாய்ப்பில்லாத தம்பதிகளை, வாடிக்கையாளர்களாக மாற்றியுள்ளார். நாமக்கல், திருச்சி, மதுரை எனப் பல மாவட்டங்களில் 4 குழந்தைகளை விற்றதாக பர்வீன் கூறியுள்ளார். மேலும், பலரைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர் காவல் துறையினர். 

சிபிசிஐடி சார்பில் இந்த வழக்கை விசாரிக்க, விசாரணை அதிகாரிகளாக சேலம் துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் சாரதா, பிருந்தா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் அமுதவள்ளி மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், புரோக்கர் அருள்சாமி ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில், சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய ஊழியரான  சாந்தியை நேற்று சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்தனர். இவரும் அமுதாவைப் போல, குழந்தைகளை விற்கும்  பெரிய ஏஜென்ட். இவர், சேலம் எஸ்.கொல்லப்பட்டி  ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸ் உதவியாளராகப் பணிபுரிந்துவந்துள்ளார். இந்த வழக்கில், சாந்தி கைது செய்யப்பட்டதை அடுத்து, சுகாதாரத்துறை  துணை இயக்குநர் பூங்கொடி, இவரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார். அவரை நேற்றிரவு நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். வரும் 24-ம் தேதி வரை  காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, சிபிசிஐடி போலீஸ்  சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

குழந்தை விற்பனையில் கைதானவர்

இந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட சுகாதாரத்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில், பிறந்த குழந்தைகளின் விவரங்கள் குறித்த அறிக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தை கடத்தல் சிபிசிஐடி  விசாரணையில்  நாளுக்கு நாள் குழந்தைகள் விற்பனை எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதுவரை 24 பெண் குழந்தைகள், 6 ஆண் குழந்தைகள் என 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இன்னும் பல பூதாகரமான  தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளது. கொல்லிமலையில் மட்டும் கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்ட குழந்தைகளை வாங்கியுள்ளனர் என்று தெரிகிறது.

இதுகுறித்துப் பேசிய சுகாதார நலத்துறை துணை இயக்குநர் ரமேஷ்குமார், ''கொல்லிமலை,சேந்தமங்கலம் 
ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் எடுக்கப்பட்ட விவரங்கள்குறித்த அறிக்கையை சிபிசிஐடி-க்கு அனுப்பியுள்ளோம். மற்ற இடங்களிலும்  விசாரித்துவருகிறோம்'' என்றார். 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க