`வாக்குப்பெட்டி கட்டடத்தில் விழுந்தது இடி; கேமராக்கள் அவுட்!- பரபர கிருஷ்ணகிரி | Lightning Strikes security Cameras, Are Voting Boxes Safe in krishnagiri

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (11/05/2019)

கடைசி தொடர்பு:14:01 (11/05/2019)

`வாக்குப்பெட்டி கட்டடத்தில் விழுந்தது இடி; கேமராக்கள் அவுட்!- பரபர கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள தொழில் நுட்பக் கல்லூரி கட்டடத்தில், நேற்று இரவு மின்னல் தாக்கி இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகியுள்ளன. அந்த இரண்டு கேமராக்களையும் பிறகு சரிசெய்துள்ளனர். மின்னல் தாக்கியதால் வாக்குப் பெட்டிகள் ஏதேனும் பாதிப்படைந்திருக்குமா? என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

மின்னல் தாக்கிய வாக்குப்பெட்டி உள்ள கட்டடம்

கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி, ஓசூர் மற்றும் தளி என 6 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பெட்டிகளும் ஓசூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்குப் பெட்டிகளும் கிருஷ்ணகிரி தொழில்நுட்பக் கல்லூரி கட்டடத்தில் சீல் வைக்கப்பட்ட அறையில் வைத்துப் பாதுகாத்தும், கண்காணிப்பு கேமராக்களைக்கொண்டு கண்காணித்துவருகின்றனர். 

கிருஷ்ணகிரியில் நேற்று இரவு பெய்த மழையால், இடியும் மின்னல் ஏற்பட்டது. அப்போது, பர்கூர் சட்டமன்றத் தொகுதி வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை கண்காணிப்பு கேமரா இரண்டு மின்னல் தாக்கி பழுதாகியுள்ளது. அதைக் கவனித்த அதிகாரிகள், இரண்டு கேமராக்களை சரிசெய்துள்ளனர். மின்னல் தாக்கியதால் கேமராக்கள் மட்டும் பழுதானதா, வாக்குப் பெட்டிகளும் பாதிப்பு அடைந்து இருக்குமா... என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, ``மின்னல் தாக்கியதால் கேமராக்கள் மட்டுமே பழுதாகின. அதை உடனே சரி செய்துவிட்டோம். வாக்குப் பெட்டிகள் உள்ள அறைகள் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்குப் பெட்டியில் உள்ள பேட்டரிகளை ஆஃப் செய்துதான் வைக்கப்பட்டிருக்கிறது. எனவே, எந்த விதமான பாதிப்பும் வாக்குப் பெட்டிகளுக்கு ஏற்பட வாய்ப்பே இல்லை'' என்று தெரிவித்துள்ளனர்.