`அந்த ரத்தத்துளிகளை நினைவுபடுத்துகிறேன்; வாக்களியுங்கள்!'- வைகோ பிரசாரம் | Remember the gunfire and vote in the election says vaiko

வெளியிடப்பட்ட நேரம்: 14:11 (11/05/2019)

கடைசி தொடர்பு:14:11 (11/05/2019)

`அந்த ரத்தத்துளிகளை நினைவுபடுத்துகிறேன்; வாக்களியுங்கள்!'- வைகோ பிரசாரம்

”ஸ்டெர்லைட் ஆலை போரட்டத்தில் உயிரிழந்த 13 பேரின் ரத்தத்துளிகளை நினைவுபடுத்திக் கேட்கிறேன். அச்சம்பவத்தை நினைவில் வைத்து வாக்களியுங்கள்” என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து வல்லநாடு, தெய்வச்செயல்புரம், மேலத்தட்டப்பாறை, புதியம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.  அப்போது பேசிய அவர், “தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தல்தான் இந்தத் தேர்தல். எடப்பாடி தலைமையிலான அரசு, ஊழல் மலிந்த அரசாக இருப்பதால்தான், மத்திய அரசு செய்யும் தவறுகளைக்கூட எடப்பாடி அரசால் தட்டிக்கேட்க முடியவில்லை. தமிழகத்திற்கு வரக்கூடிய தொழிற்சாலைகள் அனைத்தும், கமிஷன் பிரச்னையால் வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன.

தமிழகத்திற்கு வரவேண்டிய ஃபோர்டு தொழிற்சாலை, எடப்பாடி பழனிசாமி அதிக கமிஷன் கேட்டதால் குஜராத்திற்குச் சென்றுவிட்டது.  இதேபோல ஹோண்டா பைக் தொழிற்சாலை சித்தூருக்கும், சிம்ஸ்கார் தொழிற்சாலை ஆந்திராவுக்கும் சென்றுவிட்டது. இதனால், தமிழகத்தில் படித்துவிட்டு வேலைவாய்ப்பிற்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் திண்டாடுகின்றனர். குஜராத், ஒடிசா, மேற்குவங்கம் போன்ற வட மாநிலங்களில்  ஏதாவது சம்பவம் நடந்துவிட்டது என்றால் நேரடியாகச் செல்லும் மோடி, தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பின் போது நேரடியாக வந்தாரா, ஒரு ஆறுதல் அறிக்கையாவது கூறினாரா? எல்லா வகையிலும் மோடி தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிறார்.

வைகோ பிரசாரம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள்மீது காவல் துறையை ஏவி, இந்த ஆலைக்கு எதிராக இனி யாரும்  போராடக் கூடாது என்ற நிலைப்பாட்டில், 2 பெண்கள் உட்பட 13 அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றது எடப்பாடி அரசு. ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாகத்தான் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. துடிதுடித்து மடிந்துபோன அந்த ரத்ததுளிகளை நினைவுபடுத்திக் கேட்கிறேன். அந்தக் கொடுஞ் சம்பவத்திற்கு இந்தத் தேர்தலில் நீதிபதிகளாக தக்க பாடம் புகட்ட வேண்டும். அச்சம்பவத்தை நினைவில் வைத்து வாக்களியுங்கள்.

 முல்லைப்பெரியாறு அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசுக்கு மன்னிப்பே கிடையாது. இதனை தடுக்கக்கூடிய, எதிர்க்கக்கூடிய துணிச்சல் இந்த அ.தி.மு.க அரசுக்குக் கிடையாது. இதனால் பாதிக்கப்படுவது தமிழகம்தான். தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த அரசைத் தூக்கி எறிய வேண்டும்” என்றார்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க