ஓ.பி.எஸ்ஸை டென்ஷனாக்கிய கேள்வி! - பிரசாரத்துக்கு பாதியிலேயே குட்பை | OPS quits the campaign in half way

வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (11/05/2019)

கடைசி தொடர்பு:14:45 (11/05/2019)

ஓ.பி.எஸ்ஸை டென்ஷனாக்கிய கேள்வி! - பிரசாரத்துக்கு பாதியிலேயே குட்பை

ஓட்டப்பிடாரம் தொகுதியில் பிரசாரத்தின்போது, “எங்களுக்கு இட ஒதுக்கீடு அரசாணை என்னாச்சு” என பட்டியலின மக்கள் கேள்வி எழுப்பியதால், “தனிப்பட்ட முறையில் என்னைச் சந்தியுங்கள் பதில் சொல்கிறேன்” என டென்ஷனுடன் சொல்லிவிட்டு, பிரசாரத்தை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார் ஓ.பி.எஸ். 

ஓபிஎஸ் பிரசாரம்

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், அ.தி.மு.க வேட்பாளர் மோகனை ஆதரித்து துணை முதல்வர் பன்னீர்செல்வம், வசவப்பபுரம், வல்லநாடு, தெய்வச்செயல்புரம், முடிவைத்தானேந்தல் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.  அப்போது அவர், “தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எப்படியாவது தமிழக முதல்வராகிவிட வேண்டும் என்று தீராத ஆசை உள்ளது. முதல்வர் பதவியை நினைத்து அவர் அதிகமாகக் கனவு காண்கிறார்.

அ.தி.மு.க அரசை குறைசொல்வதுதான் அவருக்கு வேலை. அ.தி.மு.க ஆட்சியில் மக்களுக்கு செய்த திட்டங்கள்குறித்து எங்களால் பட்டியலிட்டுச் சொல்ல முடியும். ஆனால், தி.மு.க ஆட்சியில் மக்களுக்குச் செய்த ஏதாவது ஒரு திட்டத்தை அவர்களால் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா? தி.மு.க-வோடு சேர்ந்து அ.தி.மு.க அரசைக் கவிழ்ப்போம் என தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். தன்னை வளர்த்த கட்சியைக் கவிழ்ப்பேன் என அவர் கூறியுள்ளதில் இருந்து அவரது துரோகத்தையும் ராஜதந்திரத்தையும் தெரிந்துகொள்ளலாம். அ.தி.மு.க அரசை யாராலும் கவிழ்க்க முடியாது” என்று பேசினார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் ஓபிஎஸ் பிரசாரம்

 இறுதியாக, முடிவைத்தானேந்தல் பகுதியில் பரப்புரை மேற்கொண்டபோது, “மெயின் ரோட்டில் தூத்துக்குடி – நெல்லை எக்ஸ்பிரஸ் பஸ் நிற்கவில்லை. பலமுறை சொல்லியும் பஸ் நிற்கலை” என்று கூட்டத்தில் ஒரு பெண் சத்தமாக ஓ.பி.எஸ்ஸிடம் கேட்க, “தேர்தல் முடியட்டும் பஸ் நிற்கும்” எனப் பதில் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, குடிநீர்ப் பிரச்னை, சாலை வசதி என ஒவ்வொறு பிரச்னையாகச்  சொல்ல ஒருகட்டத்தில் டென்ஷனாகிவிட்டார் ஓ.பி.எஸ். சற்று அமைதியாகி மீண்டும் அவர் பேச்சைத் தொடங்கிய போது, “எங்களுக்கு இட ஒதுக்கீடு அரசாணை என்னாச்சு” என கூட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் கேள்வி எழுப்பியதால், மீண்டும் டென்ஷனான ஓ.பி.எஸ், “புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி எங்கள் அணியில்தான் உள்ளார். இந்தக் கோரிக்கையை அரசிடம் முன்வைத்துள்ளார். எனவே, தனிப்பட்ட முறையில் என்னைச் சந்தியுங்கள். இதற்குப் பதில்சொல்கிறேன்” என்று சொன்னதும், “எங்க கோரிக்கை என்ன ஆச்சுனு சொல்லிட்டுத்தான் போகணும்” என மக்கள் மீண்டும் சொல்ல,  பிரசாரத்தை பாதியிலேயே முடித்துவிட்டு கிளம்பிவிட்டார்.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க