தனியார் பள்ளியின் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் விண்ணபிப்பவர்கள் கவனத்துக்கு! #EducationalTips | News regarding 25% reservation seats for kids in private schools

வெளியிடப்பட்ட நேரம்: 16:59 (11/05/2019)

கடைசி தொடர்பு:16:59 (11/05/2019)

தனியார் பள்ளியின் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் விண்ணபிப்பவர்கள் கவனத்துக்கு! #EducationalTips

தனியார் பள்ளியின் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் விண்ணபிப்பவர்கள் கவனத்துக்கு! #EducationalTips

ங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளியின் படிக்க வைப்பதற்கான காரணங்கள் ஒவ்வொரு பெற்றோருக்கும் மாறக்கூடும். ஆங்கில மொழி மீதான விருப்பம், வீட்டுக்கு மிக அருகில் அந்தப் பள்ளி இருக்கிறது போன்றவை. ஆனால், அவர்களில் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தும் அளவுக்கு சிலருக்குப் பொருளாதார வசதி இருக்காது. அவர்களாகவே கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருக்கிறது. அது குறித்து, மதுரையைச் சேர்ந்த ஆசிரியர் பாண்டியராஜனிடம் கேட்டோம். 

குழந்தைகள்

"கல்வி உரிமைச் சட்டத்தில் 32 வகையான செயற்பாடுகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தனியார் பள்ளியின் இருக்கைகளில் 25 சதவிகித இடங்கள் அளிக்கப்படுவது. எஸ்.சி., எஸ்.டி, எம்.பி.சி உள்ளிட்ட சில சாதியைச் சேர்ந்தவர்களும், ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர்கள் இந்தப் பயன்பாட்டில் வருவார்கள். வருமான அடிப்படையில் எனும்போது ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். இந்த வரம்புக்குள் வரும் எவரும் தம் குழந்தையைக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் சேர்க்க முடியும். 

ஆசிரியர் பாண்டியராஜன் அப்படிச் சேர்க்கப்படும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் முற்றிலும் கிடையாது. வாகனக் கட்டணம், சீருடைக் கட்டணம் உள்ளிட்டவை இதில் சேராது. அவற்றை மாணவரின் பெற்றோர்தான் ஏற்க வேண்டும். ஒரு பள்ளியின் தொடக்க வகுப்பில் மட்டுமே மாணவர்களைச் சேர்க்கமுடியும். உதாரணமாக, ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள தனியார் பள்ளி என்றால், ஒன்றாம் வகுப்பில் மட்டுமே கல்வி உரிமைச் சட்டத்தின்படி இடஒதுக்கீட்டில் மாணவர்களைச் சேர்க்க முடியும். LKG மற்றும் ஒன்றாம் வகுப்பில் மட்டுமே இந்தச் சட்டத்தின்படி சேர்க்க முடியும். அப்படிச் சேர்க்கப்படும் மாணவன் அல்லது மாணவி அந்தப் பள்ளியில் தொடர்ந்து படிக்கையில் இந்தப் பயன் தொடரும். அந்த மாணவரை வேறு பள்ளிக்கு மாற்றினால், இந்தப் பயன் தொடராது. இந்தச் சட்டப்படி எல்.கே.ஜியில் சேரும் குழந்தையை ஒன்றாம் வகுப்பு வேறு பள்ளியில் சேர்த்தால், எல்லாப் பெற்றோர்களையும்போல கட்டணம் செலுத்த வேண்டும்.

ஒரு செக்‌ஷனுக்கு 30 மாணவர்கள் எனும் நிலையில் அதில் 8 மாணவர்கள் இந்த இடஒதுக்கீட்டில் நுழைவார்கள். ஒரு பள்ளியில் அதிகபட்சம் 5 செக்‌ஷன்கள் வரை அனுமதிக்கப்படும். ஆக, 40 மாணவர்கள் இதன்மூலம் பலன் பெறலாம். 

பிரைவேட் பள்ளியின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மாணவர்களே இந்த இடஒதுக்கீட்டில் அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு வரையறுத்துள்ளது. ஆனால், அப்படிச் சேரும் அளவுக்கான மாணவர்கள் இல்லையெனில் மூன்று கிலோமீட்டர் அளவுக்கு எல்லையை விரிவுபடுத்திக்கொள்ளலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால், கூடுதலான மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

கல்வி உரிமைச் சட்டத்தின்படி இந்த இடஒதுக்கீட்டில் நீங்கள் விண்ணப்பிக்க, நேரிடையாகப் பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இணையத்தளத்தில் இதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தால் போதும். http://rte.tnschools.gov.in/tamil-nadu/student-registration என்ற இணைப்பில் சென்றால் எளிதாக விண்ணப்பிக்க முடியும். கடந்த மாதம் (ஏப்ரல்) 22ந்தேதி விண்ணப்பிக்கத் தொடங்கிய கால அளவு, வரும் 18ம் தேதி (மே 18) முடிவடைகிறது. எப்படி விண்ணப்பிப்பது என்பதை யூடியூப் வீடியோ மூலம் காண்பதற்கான வசதியும் உள்ளது. அதைப் பார்க்கையில் நமக்கு எழும் சந்தேகங்கள் விலகும். 

தனியார் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க அரசு அளிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்." என்றார். 


டிரெண்டிங் @ விகடன்