இறந்துபோன அம்மா...குடிக்கு அடிமையான அப்பா...வாட்டிய நோய்! -சாதித்த மாணவியின் நெகிழ்ச்சிக் கதை | People helps girl with heart problem

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (11/05/2019)

கடைசி தொடர்பு:15:30 (11/05/2019)

இறந்துபோன அம்மா...குடிக்கு அடிமையான அப்பா...வாட்டிய நோய்! -சாதித்த மாணவியின் நெகிழ்ச்சிக் கதை

தஞ்சாவூரில் மாணவி ஒருவர், சர்க்கரை நோய் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர். மாணவியின் தந்தை மதுவுக்கு அடிமையானவர். இந்த நிலையில், கவனிக்கப்படாமல் இருந்த மாணவியை பட்ட மேற்படிப்பு படிக்கும் டாக்டர் ஒருவர் அறிந்து, அந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறார். இதில், அந்த டாக்டருக்கு பலர் உதவியாகச் செயல்பட்டுள்ளனர். ஏழை மாணவியின் மறுவாழ்விற்கு அக்கறையோடு உதவிய ஈர மனம் படைத்தவர்களை அனைவரும் நெகிழ்ச்சியோடு பாராட்டி வருகின்றனர்.

மாணவி சாயிரா பானு

கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் அலி. இவரது மனைவி, நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவருக்கு சாயிராபானு (பெயர் மாற்றம்) என்கிற ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மனைவி இறந்த பிறகு, சாதிக் அலி அளவிற்கு அதிகமாக தினமும் மது குடித்து வந்திருக்கிறார். இதனால், குழந்தைகளைச் சரியாக கவனித்துக் கொள்வதில்லை. இந்த நிலையில், கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் வந்த சாதிக் அலி, மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள டீ கடை ஒன்றில் வேலைக்குச் சேர்கிறார். தனது பிள்ளைகளையும் உடன் அழைத்துவந்து அங்கேயே தங்கிவிடுகிறார். காலை முழுவதும் வேலைபார்க்கும் சாகித் அலி, இரவு சம்பளம் வாங்கியதும் பிள்ளைகளுக்கு உணவு வாங்கி கொடுத்ததுபோக மீதி காசுக்கு மது குடித்துவிடுகிறார். காலையில் டீ கடையில் வேலை, இரவு மருத்துவக்கல்லூரி பஸ் ஸ்டாப்பிலேயே பிள்ளைகளுடன் வசிக்கத் தொடங்குகிறார். இப்படியே நாள்கள் நகர்ந்து கொண்டே இருந்திருக்கின்றன.

டாக்டர் அஸ்வின்மருத்துவக்கல்லூரியில் பட்டமேற்படிப்பு படித்துவரும் டாக்டர் அஸ்வின், தினமும் காலை நேரத்தில் இவர்களைக் கடந்து செல்லும்போது, சாயிரா பானுவை கவனித்துவந்துள்ளார். ஒரு நாள், டாக்டர் அஸ்வின் செல்லும்போது சாயிரா பானு மயங்கிவிழுந்திருக்கிறார். பதறிய அஸ்வின், சாயிராபானுவை அழைத்துக்கொண்டு சென்று சோதனைசெய்து சிகிச்சை அளித்திருக்கிறார். இதில், சாயிராபானுவிற்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனே, மருத்துவக் கல்லூரியிலேயே தங்கவைத்து, அதற்கான சிகிச்சையை மேற்கொண்டுவருகின்றனர். இந்த நிலையில், சாயிரா பானுவின் நிலைகுறித்து தஞ்சை மாவட்ட குழந்தைகள் நல குழுவின் தலைவர் திலகவதியிடம் தெரிவிக்கிறார். உடனே அவர், சாயிராபானுவை நன்றாக கவனித்துக்கொள்ளக்கூடிய ஹோமில் தங்க வைப்பதுடன், தஞ்சை அருகே  உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு சேர்த்துவிடுகிறார்.

சர்க்கரை நோய்க்காக தினமும் மூன்று வேளை இன்சுலின் போட்டுக்கொண்டே நாள்களை நகர்த்தக் கூடிய சூழ்நிலையில், சாயிரா பானு இருந்தாலும் படிப்பில் படு சுட்டியாக விளங்கியிருக்கிறாள். சுகருக்கான ஊசி போடும் போது, எப்படி போட்டுக்கொள்வது என சொல்லுங்க டாக்டர், என கேட்டு ஆழ்ந்து கவனிப்பாள். பின்னர், தானே இன்சுலின் ஊசியை போட்டுக்கொள்ளத் தொடங்கினாள். அந்த அளவிற்கு எல்லாத்துலையும் கெட்டிக்காரியாக இருந்தாள். இப்படி இரண்டு ஆண்டுகள் ஓடியது. சாயிரா பானுவின் உடல்நிலை சரியில்லாமல்போனது. டாக்டர் அஸ்வின் மற்றும் மருத்துவர்கள் அவர் உடலை பரிசோதித்துப் பார்த்ததில், சாயிராபானுவின் இதயத்தில் ஓட்டை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அஸ்வின் உட்பட அனைவரும் அதிர்ந்துபோனார்கள். இறைவன் ஒரு பிள்ளைக்கு சோதனையை கொடுக்கலாம். ஆனால், சாயிராவிற்கு வாழ்க்கையையே சோதனையாக கொடுத்திருக்கிறான் என வேதனைப்பட்டனர்.
 

மாணவி

பின்னர் டாக்டர்கள், சாயிரா பானுவை அதிக அக்கறையுடன் கவனித்துவந்தனர். அஸ்வின், சாயிராவை தன் சகோதரியாகவே நினைத்து பரிவுகாட்டினார். படிப்பில் சுட்டியான சாயிரா, சிகிச்சையைத் தொடர்ந்துகொண்டே பத்தாம் வகுப்பு படித்தார். அதில் நல்ல மார்க் எடுத்தே தீர வேண்டும் எனக் கூறிவந்தார். இந்த நிலையில், அவருக்கு இதயத்திற்கான சிகிச்சை அளிக்கவேண்டியிருந்தது. முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவைசிகிச்சை செய்துகொள்ளலாம் என்றால், அதற்கான கார்டு இல்லை. புதிதாக பெறுவதற்கும் ரேஷன், ஆதார் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை. சாயிரா பானு, திலகவதியிடம், மேடம் நான் பத்தாம் வகுப்பிற்கான பரீட்சை எழுதிவிடுகிறேன். அதன் பிறகு சிகிச்சைக்கு சேர்த்துவிடுங்க என கண்களில் நீர் கசிய சன்னமான குரலில் கூறுகிறார். மருத்துவக்குழுவும் சாயிராவின் ஆசைக்கு பச்சைக்கொடி காட்ட, பத்தாம் வகுப்பு தேர்வை எழுதி முடிக்கிறாள்.

இதற்கிடையில் திலகவதி, கலெக்டர் அண்ணாதுரையிடம் சாயிராவின் நிலைகுறித்து எடுத்துக் கூற, கலெக்டர்  உடனே சாயிராவிற்கு முதல்வர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கார்டு கிடைப்பதற்கு ஏற்பாடுசெய்கிறார். இதனையடுத்து, சென்னையில் இதய சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் சேர  திலகவதி உடன் இருந்து கவனித்துக்கொள்கிறார். இந்தச் சமயத்தில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவருகிறது. இதில், சாயிரா 386 மார்க் எடுக்க, `400 மார்க்குக்கு மேல் எதிர்பார்த்தேன். ஆனால், குறைந்து விட்டதே' என வருத்தப்பட்டிருக்கிறார். `இது, நல்ல மார்க் தான். இந்த நிலையில் நீ அதிகமான மார்க் எடுத்திருக்க தெரியுமா' என எல்லோரும் பாராட்ட, `இல்ல, நான் டாக்டருக்கு படிக்கணும். இப்ப எனக்கு என் வயதை தாண்டி உடலில் பிரச்னை. என் அருகில் இருப்பவர்கள் எல்லாம் காட்டுகிற அன்பே என்னை அதில் இருந்து விடுபட வைக்கிறது. என்னை டாக்டர் அஸ்வின் போன்றவர்கள் பார்க்கவில்லை என்றா,ல் என்நிலை என்னவாகியிருக்கும் எனத் தெரியாது. இதேபோல் நானும் டாக்டருக்கு படித்து, என்னைபோல முடியாமல் இருப்பவர்களுக்கு உதவி செய்யணும்'' என கண்களில் ஈரம் கசிந்தபடி சொல்லியிருக்கிறார்.

தஞ்சை மாவட்ட குழந்தைகள் நல குழுவின் தலைவர் திலகவதி

இதனையடுத்து, கடந்த புதன்கிழமை  அப்போலோவில் நவீன தொழில்நுட்பம் மூலம் இதய அறுவைசிகிச்சை நடந்து முடிந்திருக்கிறது. இப்போ, சாயிரா நன்றாக இருக்கிறாள். ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் சொல்லியிருக்கின்றனர். ``சுகரும் கட்டுக்குள் இருக்கு. ஆனாலும், இன்சுலின் பயன்படுத்தவேண்டிய நிலையில்தான் இருக்கிறார். அதோடு மட்டும் இல்லாமல் மருந்து, மாத்திரை என மாதம் ஒரு பெரிய தொகை செலவாகும். அந்தப் பணத்துக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வேறு ஏதும் வழிமுறை இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். ஆனால் இவர், எதைப் பற்றியுமே நினைக்காமல் ஸ்கூல் திறந்ததுமே நான் போகலாமா. படிப்புதான் எனக்கு முக்கியம் எனப் புன்னகைத்தபடி வெள்ளந்தியாக கேட்கிறாள் சாயிரா. அவள் ஆசைகளை அக்கறையாக நிறைவேற்றிவைக்க முயற்சிசெய்துவருகிறோம்'' என உடன் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க