`அரசு அனுப்பியது நோட்டீஸ்’- 12 ஆண்டுகள் வசித்த வீட்டை விட்டு வெளியேறினார் நல்லகண்ணு! | Nallakannu vacated his rental house

வெளியிடப்பட்ட நேரம்: 15:19 (11/05/2019)

கடைசி தொடர்பு:15:23 (11/05/2019)

`அரசு அனுப்பியது நோட்டீஸ்’- 12 ஆண்டுகள் வசித்த வீட்டை விட்டு வெளியேறினார் நல்லகண்ணு!

12 ஆண்டுகளாக வசித்துவந்த அரசு குடியிருப்பு வாடகை வீட்டிலிருந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வெளியேறினார். 

நல்லக்கண்ணு

`எளிமையான தலைவர்’ `நேர்மையான அரசில்வாதி’ எனப் பலராலும் புகழப்படுபவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. இவர், கடந்த 12 ஆண்டுகளாக சென்னை தியாகராயநகரில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்துவந்தார். அந்தக் குடியிருப்பு வீடு, அரசு அவருக்கு இலவசமாக வழங்கியது. `இது என் கொள்கைக்கு எதிரானது’ என்று கூறி இலவசமாகக் கொடுத்த வீட்டுக்கு, வாடகை கட்டிவந்தார் நல்லகண்ணு. இப்படியிருந்த நிலையில், திடீரென அப்பகுதியில் வேறொரு திட்டத்தை அரசு கொண்டுவர முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக, குடியிருப்பில் வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக, மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

நல்லகண்ணு

இதை ஏற்றுக்கொண்ட நல்லகண்ணு, அங்கிருந்த மற்ற குடியிருப்பு வாசிகளைப் போல தானும் வெளியேறினார். இதையடுத்து, அவர் கே.கே.நகரில் உள்ள வீடு ஒன்றிற்குக் குடிபெயர்ந்துள்ளார்.  இது தொடர்பாக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``சென்னை தியாகராயநகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான குடியிருப்பில், கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவந்த தமிழகத்தின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவை உடனடியாகக் காலிசெய்யும்படி ஆணையிடப்பட்டு, அவரும் வேறு இடத்திற்குக் குடிபெயர்ந்திருக்கிறார்.

94 வயதான தலைவரை அவருடைய தியாகம், தொண்டு ஆகியவற்றை எண்ணிப் பார்க்காமல், அவரை வெளியேற்றியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழக முதலமைச்சர் இந்தப் பிரச்னையில் தலையிட்டு, அவருக்கு அரசு வீடு ஒன்றினை உடனடியாக வழங்க முன் வருமாறு வேண்டிக்கொள்கிறேன்” என்று வலியுறுத்தியுள்ளார். இதேபோல, மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கன் குடும்பத்தை அங்கிருந்து வெளியேற்றக்கூடாது என முத்தரசன் உள்ளிட்டோர் குரல் எழுப்பியுள்ளனர்.