`குப்பையில் அமர்ந்திருப்பார்; சாப்பாட்டுக்கு பணம் கொடுப்பேன்!'- முதியவரை ஸ்டைலிஷ் மனிதராக்கிய டிராஃபிக் காவலர் | Virudhunagar police man helps homeless man

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (11/05/2019)

கடைசி தொடர்பு:17:10 (11/05/2019)

`குப்பையில் அமர்ந்திருப்பார்; சாப்பாட்டுக்கு பணம் கொடுப்பேன்!'- முதியவரை ஸ்டைலிஷ் மனிதராக்கிய டிராஃபிக் காவலர்

விருதுநகரில், குப்பைகளுக்கு அருகே இருந்த ஆதரவற்ற முதியவரை அழைத்துச்சென்ற காவலர் ஒருவர், முதியவருக்கு முடிவெட்டிவிட்டு, புத்தாடை வாங்கிக் கொடுத்த சம்பவத்தைப் பொதுமக்கள் பாராட்டிச்சென்றனர்.

முதியவர்

காவலர்கள் என்றாலே சாதாரண மக்களை அடித்துத் துன்புறுத்துவார்கள்... அவர்களுக்கு நல்லதுகெட்டதே தெரியாது, மனிதாபிமானவற்றவர்கள் என்ற மனநிலைதான் நம்மில் பெரும்பாலானோரிடம் உள்ளது. ஆனால், அப்படிப்பட்ட காவலர்களுக்கும் இதயம் உண்டு. மனிதாபிமானம் உண்டு என்பதற்கு எடுத்துக்காட்டுதான், விருதுநகர் போக்குவரத்துக் காவலர் ரெங்கராஜன். ஆதரவற்ற முதியவர் ஒருவரை சலூன் கடைக்கு அழைத்துச்சென்றதுடன், புத்தாடையும் வாங்கிக்கொடுத்த அவர், நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர் தான்.

முதியவர்

``தினந்தோறும் நான் செல்லும் வழியில்தான் அவர் குப்பையிலேயே அமர்ந்திருப்பார். அவரைப் பார்த்துக்கொண்டே செல்வேன். சாப்பாட்டுக்கு பணம் தருவேன். அவ்வளவுதான். பல நாள்களாக இப்படியேதான் சென்றது. அவரது வெள்ளைச் சட்டைகூட அழுக்குப் பிடித்து கறுப்பாக மாறிவிட்டது. அப்போதெல்லாம் ஒன்றும் தெரியவில்லை. ஆனால், அன்று மட்டும் அவரது தலைமுடியையும், முகம் முழுவதும் இருந்த தாடியையும் வெட்ட வேண்டும் எனத் தோன்றியது. அய்யா முடிவெட்டிக்கொள்கிறீர்களா... என்றேன். அவரும் சரி என்றார். உடனே அருகே இருந்த சலூன் கடைக்கு அழைத்துச்சென்று முடிவெட்டி, முகச்சவரம் செய்ய வைத்தேன். அதற்கான பணத்தையும் கொடுத்துவிட்டு, அருகே இருந்த சுமைப்பணியாளர் ஒருவரிடம் பணம் கொடுத்து, புதுச் சட்டை, வேட்டி வாங்கி வரச் சொன்னோன். அந்த புத்தாடையை அவருக்குக் கொடுத்தேன். அப்போதுதான் எனக்கு நிம்மதியாக இருந்தது.

காவலர்

ஆதரவற்றவர்களுக்கு தினமும் குறைந்தது 10 ரூபாயாவது கொடுத்துவிடுவேன். வெள்ளிக்கிழமை என்றால் அதிகம் பேர் வருவார்கள். எனவே, அன்று மட்டும் கூடுதலாகப் பணம் ஒதுக்கி வைத்துக்கொள்வேன். சிலர் என்னை அடையாளம் கண்டுகொண்டு, தேடிவந்து காசு வாங்கிச்செல்வார்கள். எனக்கு அன்றைய பொழுது நிம்மதியாக இருக்கும். கண்பார்வையற்ற நபர்கூட என் பேச்சைக் கேட்டு வந்துவிடுவார். இவர்களுக்கு அன்றாடம் உதவிசெய்தால்தான் அன்றைய பொழுதே நிம்மதியாக இருக்கும். இவர்களுக்குச் செய்யாமல் வேறு யாருக்கு செய்யப்போகிறோம்'' என்றார்.