`எல்லோரையும் போலத்தான் நான்..; கக்கன் வாரிசுகளுக்கு வீடு கொடுங்கள்!' - நல்லகண்ணு | Senior political Leader Nallakannu speaks about housing board house issue

வெளியிடப்பட்ட நேரம்: 20:16 (11/05/2019)

கடைசி தொடர்பு:20:16 (11/05/2019)

`எல்லோரையும் போலத்தான் நான்..; கக்கன் வாரிசுகளுக்கு வீடு கொடுங்கள்!' - நல்லகண்ணு

`எல்லோரைப்போலத்தானே நானும். அவர்கள் அங்கிருந்து வெளியேறச்சொன்னார்கள் வெளியேறினேன். கக்கன் குடும்பத்தை வெளியேற்றக்கூடாது என அதிகாரிகளிடம் வலியுறுத்தினேன்' என்கிறார் நல்லக்கண்ணு.

நல்லகண்ணு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, கடந்த 12 ஆண்டுகளாக தியாகராய நகரில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தார். அரசு அவருக்கு இலவசமாக வழங்கிய வீட்டை, `இது கொள்கைக்கு எதிரானது’ என்று கூறி, இலவசமாக கொடுத்த வீட்டுக்கு வாடகை கொடுத்து வந்தார். `அப்பகுதியில் மற்றொரு திட்டத்தைக் கொண்டுவரப்போகிறோம்' என்று கூறி நல்லகண்ணு உள்ளிட்ட அங்கிருந்தவர்களை உடனே வெளியேறுமாறு அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி நல்லகண்ணு அங்கிருந்து வெளியேறினார். மூத்த அரசியல் தலைவர், நல்லக்கண்ணுவை அங்கிருந்து வெளியேற்றியது தவறு என பல்வேறு தரப்பினர் கண்டனங்கள் தெரிவித்தனர். நடந்த சம்பவம் குறித்து அவரிடம் பேசினோம்.

``கடந்த 2007ல் கருணாநிதி ஆட்சிகாலத்தில் ஒதுக்கப்பட்ட வீடு அது. புதிய திட்டம் வருவதாகக் கூறி, அப்பகுதியில் சில வீடுகளை இடித்துவிட்டனர். எங்களுக்கு நோட்டீஸ் எதுவும் முறையாகக் கொடுக்கவில்லை. வாய் மொழியாகக் கூறினர். அவர்கள் கூறும்போது, நான் சொன்னேன்.

நல்லக்கண்ணு

`எங்களுக்கு பரவாயில்லை. காமராஜர் காலத்தில் அமைச்சராக இருந்த கக்கனுக்கு, எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் வீடு கொடுத்தனர். வாடகை இல்லாமலே இருந்தார். அங்கேதான் இருந்தார். இப்போது அவர்கள் குடும்பத்தினர் அங்கு உள்ளனர். அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டாம்' என கேட்டுக்கொண்டேன். `அவர்கள் ஏழ்மையில் உள்ளனர். எம்.ஜி.ஆர் காலத்தில் கொடுத்த வீட்டை இடிப்பது நியாயமில்லை. அவர்களுக்கு எந்தவித காலக்கெடுவும் இல்லாமல் வெளியேற்றுவதில் நியாயமில்லை' என்றேன்.

மற்றபடி. அங்கிருந்த எல்லோரையும் வெளியேற்றிவிட்டனர். சில பேர் அங்கே இருக்கின்றனர். அவர்களும் விரைவில் வெளியேறிவிடுவர். எல்லோரைப்போலத்தானே நானும், தற்போது கே.கே.நகரில் வாடகைக்கு வீடு ஒன்று எடுத்து குடிபெயர்ந்துள்ளேன்'' என்றார்.