`சத்தியமா அசைவம் சாப்பிடமாட்டோம்..' - புதுக்கோட்டையில் ஒரு அதிசய கிராமம் #MyVikatan | Pure vegetarian village Vaadimanaipatti at pudukkotai

வெளியிடப்பட்ட நேரம்: 20:21 (11/05/2019)

கடைசி தொடர்பு:20:21 (11/05/2019)

`சத்தியமா அசைவம் சாப்பிடமாட்டோம்..' - புதுக்கோட்டையில் ஒரு அதிசய கிராமம் #MyVikatan

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே இருக்கிறது வாடிமனைப்பட்டி கிராமம். பெயர் வாடிமனைப்பட்டி தான் ஆனால், "சைவ கிராமம்" என்று தான் அனைவராலும் அறியப்படுகிறது. 

சைவ கிராமம்

கிராமத்தில் உள்ள 45 குடும்பங்களும் வள்ளலாரின் சுத்த சமரச சன்மார்க்க நெறியினைக் கடைப்பிடிக்கின்றனர். தலைமுறை தலைமுறையாக இந்த கிராமத்தினர் யாரும் அசைவ உணவுகளைச் சாப்பிடுவதில்லை. கிராமத்தில் யாரும் ஆடு கோழிகள் வளர்ப்பதில்லை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுகின்றனர். வெளியூரில் இருந்து சைவ கிராமத்திற்குத் திருமணம் செய்து மருமகள்களாக வருபவர்களும் சைவத்தையே கடைப்பிடிப்பதாகக் கூறுகின்றனர். இதேபோல், இங்கிருந்து வெளியூர்களுக்குத் திருமணமாகிச் செல்லும் பெண்கள், மணமகன் வீட்டில் அசைவ உணவு சமைத்தாலும், தங்களுக்காகச் சைவ உணவு சமைத்து மட்டுமே சாப்பிடுவோம் என்று சத்தியம் செய்கின்றனர்.

சைவ கிராமம்

விவசாயம் தான் இவர்களின் பிரதான தொழில் என்றாலும், தற்போது விவசாயம் பொய்த்து போனதால், பலரும் பசுமாடுகளை வளர்க்கின்றனர். பசுமாடுகள் வளர்த்து அதில் கிடைக்கும் பாலை ஒவ்வொரு ஊராகக் கொண்டு சென்று பால் வியாபாரம் செய்கின்றனர். தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகள் இருக்கும் இன்றைய காலகட்டத்திலும், இந்த ஊர் இளைஞர்கள் யாரும் டாஸ்மாக் கடைகளைத் தேடிச் செல்வதில்லை. வெளிநாட்டில் போய் வேலை செய்பவர்கள் பலரும் இதே கொள்கையை கடைப்பிடிப்பதாகக் கூறுவதுதான்  கூடுதல் ஆச்சர்யம்.

சைவ கிராமம்

கருத்து வேறுபாட்டால், சிறிய, சிறிய வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும், அடிதடி வெட்டுக்குத்து சம்பவங்கள் ஏதும் இங்கு நடப்பதில்லை. காவல் நிலையத்தின் படி ஏறி, இறங்குவதில்லை என்று பெருமையுடன் கூறுகின்றனர் இந்த ஊர் இளைஞர்கள். பேண்டு வாத்தியங்கள் முழங்க ஆடம்பரமாக இங்குத் திருமணங்கள் நடைபெறுவதில்லை. திருமணங்களில் ஹோமங்கள், மந்திரங்கள் போன்ற சடங்குகளுக்கு இடமில்லை. சன்மார்க்க முறைப்படி சன்மார்க்க தலைவர்கள் திருப்புகழ் பாடுகின்றனர்.எளிய முறையில் திருமணங்கள் நடக்கிறது.