தேன் போல தித்திக்கும் `அமிர்தம்’ சோடா! - இது தேனி ஸ்பெஷல் #MyVikatan | Dont miss to taste Amirtham soda in theni

வெளியிடப்பட்ட நேரம்: 22:03 (11/05/2019)

கடைசி தொடர்பு:22:03 (11/05/2019)

தேன் போல தித்திக்கும் `அமிர்தம்’ சோடா! - இது தேனி ஸ்பெஷல் #MyVikatan

எல்லா ஊருக்கும் ஒரு அடையாளம் இருக்கும். அப்படியான அடையாளங்களில் ஒன்று தான் அமிர்தம் சோடா… தேனியை தவிர வேற எங்குமே இதனை பார்க்கவோ… சுவைக்கவோ முடியாது. இவ்வளவு ஏன், தேனிக்காரங்களைத் தவிர வேற யாருக்குமே அவ்வளவாகத் தெரியாத அமிர்தம் சோடா… தேனியின் அடையாளங்களில் ஒன்று என்று தான் சொல்ல வேண்டும்.

அமிர்தம் சோடா

அப்படி என்ன அமிர்தம் சோடாவில் சிறப்புனு கேட்கத்தோணும்… எப்படியும் இல்லாமல், புதுமையான ஓர் சுவையில் இருப்பது தான் அமிர்தம் சோடாவின் சிறப்பு. புத்துணர்ச்சி மிக்க புதினா சுவையும், வாழைப்பழ சுவையும் கலந்த ஓர் சுவையில் இருக்கும் அமிர்தம் சோடா… 80களில் விற்பனையில் உச்சத்தில் இருந்திருக்கிறது. நாள்கள் செல்ல செல்ல கோலிசோடா பாட்டில்களில் இருந்த சோடாக்கள், சாதாரண பாட்டில்களுக்கு மாற, அமிர்தம் சோடா மட்டும் இன்னமும் கோலிக்குண்டு உள்ள பாட்டில்களில் மட்டுமே விற்கப்படுகிறது.

அமிர்தம் சோடா

கோலிக்குண்டு பாட்டில்களுக்கு இருக்கும் தட்டுப்பாடு மற்றும் சந்தையில் தினம் தினம் நுழையும் குளிர்பானங்களின் வரவுகளால், வெகு சிலரே அமிர்தம் சோடாவை தயாரிக்கிறார்கள். அதுவும், அமிர்தம் சோடா பிரியர்களுக்காக மட்டுமே என்பதுதான் ஆச்சர்யம். வாரத்திற்கு இவ்வளவு எனச் சோடா கம்பெனிகள் அமிர்தம் சோடாவை தயாரித்து கடைகளுக்கு சப்ளை செய்துவிடுவார்கள். பாட்டில்கள் தீர்ந்தவுடன் அதனை எடுத்துவந்து மீண்டும் சோடா நிரப்பி கடைகளுக்கு சப்ளை செய்கிறார்கள். வாரம் ஒருமுறை சோடா தயாரிப்பு நடக்கிறது. திருவிழா காலங்களில் அது, மூன்று அல்லது நான்கு மடங்காக அதிகரிக்கும். அமிர்தம் சோடா தயாரிக்கும் நிறுவனங்களில், ஒரு நிறுவனம் தான் வி.ஆர் விக்னேஷ்வரன் சோடா கம்பெனி. கை விரலால் உடைக்கக் கூடாது. இது ஒரு குடிசை தொழில் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சோடா பாட்டிலை கையில் பிடித்ததும், அதில் `அமிர்தம்' என்ற வார்த்தை இருக்கிறதா என்று தான் முதலில் பார்க்கிறார்கள் அமிர்தம் பிரியர்கள். 200 மில்லி அளவுள்ள பத்து ரூபாய் சோடாவை குடித்தால், வாழ்க்கையில் தேனியையும், அமிர்தம் சோடாவையும் என்றுமே மறக்க முடியாது. அப்படி ஒரு சுவை. 

அதனைச் சுவைக்க தேனிக்குத் தான் வரவேண்டும் மக்களே…