‘காட்டுக்குள் ஜாலியாக ஒரு ட்ரிப்!’ - சத்தியமங்கலம் `மாயா சூழல் சுற்றுலா’ திட்டம் | maya forest tourisam introduced in sathyamangalam...

வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (12/05/2019)

கடைசி தொடர்பு:10:10 (12/05/2019)

‘காட்டுக்குள் ஜாலியாக ஒரு ட்ரிப்!’ - சத்தியமங்கலம் `மாயா சூழல் சுற்றுலா’ திட்டம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளுக்குள் சென்று வன விலங்குகளைக் காண, ‘மாயா சூழல் சுற்றுலா’ என்னும் திட்டம் விரைவில் துவங்கப்பட இருக்கிறது.

சுற்றுலா

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ‘வண்ணபூரணி சூழல் சுற்றுலா’ என்னும் திட்டம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. ஆன்லைன் மூலம் புக் செய்பவர்களை, வனத்துறைக்குச் சொந்தமான வேனில் காட்டிற்குள் அழைத்துச் சென்று காடுகளையும், அதில் வாழும் வன விலங்குகள் உள்ளிட்டவற்றையும் காட்டுவதற்காக அத்திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டம் பிற இடங்களிலும் செயல்படுவதால் சில புதிய மாற்றங்களுடன், சிறப்பான ஓர் அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை வனத்துறை அதிகாரிகள் உருவாக்கியிருக்கின்றனர்.

சுற்றுலா

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் உயிர்நாடியாக விளங்கும் மோயாறு  நதியை மையமாக வைத்து ‘மாயா சூழல் சுற்றுலா’ என்று வனச் சுற்றுலாவுடன், தங்கும் வசதியும் சேர்த்து ஓர் தொகுப்பாக செயல்படுத்த இருக்கின்றனர்.  இந்த சுற்றுலா திட்டத்தின் கீழ் தற்போது ஹாசனூர்,  ஜீரஹள்ளி,  தலைமலை,  கடம்பூர்,  மாக்கம்பாளையம்  ஆகிய இடங்களில் உள்ள ஓய்வு விடுதிகளில்  தங்கி புலிகள் காப்பகத்தினுள் சென்று வர ஏற்பாடு செய்துவருகின்றனர். பதிவு செய்யும் பார்வையாளர்கள் மாலை 5 மணிக்கு அவர்கள் முன்பதிவு செய்த தங்கும் விடுதிக்கு வந்தடைந்து, பின்னர் மாலை நேரம் புலிகள் காப்பகத்தில் வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

பின்னர், வனம் மற்றும் இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பார்வையாளர்களுக்கு காணொளி காட்சிகள் அல்லது உரையாடலுக்குப் பின் இரவு உணவு அளிக்கப்பட்டு அங்கு தங்க வைக்கப்படுவார்கள்.  காலை தேநீர்க்குப் பின்னர் பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளை காணும் வகையில் இயற்கையோடு ஒன்றி இயற்கையை ரசிக்க வசதியாகப் புலிகள் காப்பகத்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.  தங்குமிடத்தில் காலை உணவுக்குப் பின்னர் பார்வையாளர்கள் வழி அனுப்பப்படுவார்கள்.

சுற்றுலா

‘இந்த சுற்றுலாவிற்கு வருகை புரிய விரும்பும் பார்வையாளர்கள் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணையதளம் https:\\str-tn.org வாயிலாக முன்பதிவு செய்து அவர்கள் தேர்வு செய்த தங்குமிடத்திற்கு வரலாம். மேலும் இது தொடர்பாக ஏதேனும் மேல் விபரங்களுக்கு  +91 7397 502 528 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’ என சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.