‘லேடீஸ் ஃபர்ஸ்ட்!’ - பெண்களுக்காகப் பிரத்தியேக திட்டத்தைத் துவக்கிய ஈரோடு எஸ்.பி | erode sp starts new scheme for womens

வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (12/05/2019)

கடைசி தொடர்பு:10:40 (12/05/2019)

‘லேடீஸ் ஃபர்ஸ்ட்!’ - பெண்களுக்காகப் பிரத்தியேக திட்டத்தைத் துவக்கிய ஈரோடு எஸ்.பி

காவல் நிலையத்திற்கு வரத் தயங்கும் பெண்களுடைய பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக ‘லேடீஸ் ஃபர்ஸ்ட்’ என்ற பெயரில் அசத்தலான புதிய திட்டம் ஒன்றைத் தொடங்கி வைத்திருக்கிறார் ஈரோடு எஸ்.பி சக்தி கணேசன்.

போலீஸ்

ஈரோடு எஸ்.பியாக சக்தி கணேசன்  பொறுப்பேற்றதிலிருந்து ஆம்புலன்ஸ்களை விரைவாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ‘எக்ஸ்பிரஸ் காரிடர்’ என்னும் திட்டம், முதியோர்களுக்காக ‘ஹலோ சீனியர்ஸ்’ என்னும் திட்டம் போன்றவற்றைத் தனிப்பட்ட ஆர்வத்தால் ஆரம்பித்து வைத்தார். அந்த வரிசையில் நேற்று பெண்களுக்காகப் பிரத்தியேகமாக ‘லேடீஸ் ஃபர்ஸ்ட்’ எனும் புதிய திட்டம் ஒன்றைத் துவக்கி வைத்திருக்கிறார்.

பெண்கள் தங்களுக்கோ அல்லது தங்களைச் சார்ந்தவர்களுக்கோ ஏற்படும் பிரச்னைகள் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கவும், காவல் நிலையத்திற்கு வரத் தயங்கும் பெண்களுடைய பிரச்னைகளை தீர்ப்பதற்கும் இத்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பெண்கள் தங்களுடைய பிரச்னைகளை 9655220100 என்ற எண்ணிற்குப் போன் மூலமாகத் தெரிவித்தால், அருகிலுள்ள போலீஸார் சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்த எண் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, மாவட்ட காவல் கண்காளிப்பாளர் அவர்களின் நேரடிப் பார்வையில் செயல்படும். புகார் செய்பவர்களின் பெயர் மற்றும் விபரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். 24 மணி நேரமும் இந்த தொலைப்பேசி எண் பயன்பாட்டில் இருப்பதோடு, புகார் தெரித்த 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்டவர்களுடைய பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படுமாம். 

எஸ்.பி

இதுகுறித்து ஈரோடு எஸ்.பி சக்தி கணேசன் அவர்களிடம் பேசினோம். “ஈரோடு மாவட்டத்தில் முதியவர்களுக்கு உதவும் நோக்கில் ‘ஹலோ சீனியர்ஸ்’ எனும் திட்டம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு, வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அது கொடுத்த உற்சாகத்தில் தான் பெண்களுடைய பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக ‘லேடீஸ் ஃபர்ஸ்ட்’ எனும் புதிய திட்டத்தை ஆரம்பித்திருக்கிறேன். எத்தனையோ பெண்கள் போலீஸ் ஸ்டேஷனிற்கு வரப் பயப்பட்டு, வீட்டிற்குள்ளேயே தங்களுடைய பிரச்னைகளுடன் முடங்கிப் போய்விடுகிறார்கள்.

அவர்களுடைய பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும். அதற்காகத் தான் பிரத்தியேகமான போன் நம்பர் ஒன்றைக் கொடுத்திருக்கிறோம். இந்த எண்ணிற்கு வரும் புகார்கள் ரிஜிஸ்டர்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் தீர்க்கப்படும். முதல் நாளே இந்த எண்ணிற்கு ஆறு அழைப்புகள் வந்திருக்கிறது. அதில் மூன்று பேர் இத்திட்டத்தை பாராட்டுவதற்காகவே ஃபோன் செய்திருக்கிறார்கள்” என்றார்.