`இடைத்தேர்தலை நடத்துவது ஆளும் அரசுதான்; தேர்தல் ஆணையமல்ல!' - கே.பாலகிருஷ்ணன் | K Balakrishnan slams EC

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (12/05/2019)

கடைசி தொடர்பு:07:17 (13/05/2019)

`இடைத்தேர்தலை நடத்துவது ஆளும் அரசுதான்; தேர்தல் ஆணையமல்ல!' - கே.பாலகிருஷ்ணன்

`தேர்தல் ஆணையக் குளறுபடிகளைப் பார்க்கையில், வாக்கு எண்ணிக்கை முறையாக நடத்தப்படுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கே.பாலகிருஷ்ணன்

அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜிக்கு வாக்குகள் கேட்டு, பிரசாரம் செய்ய கரூருக்கு வருகை தந்தார் பாலகிருஷ்ணன். அதற்கு முன்பாக, செய்தியாளர்களைச் சந்தித்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ``வரும் 19-ம் தேதி 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்திய மற்றும் தமிழக தேர்தல் ஆணையங்கள் ஏகப்பட்ட குளறுபடிகளை உருவாக்கி இருக்கின்றன. 4 தொகுதிகளுக்கு தனியே இடைத்தேர்தல் நடத்தாமல், ஏப். 18-ம் தேதி தேர்தல் நடத்தி முடித்திருக்கலாம். தி.மு.க உச்சநீதிமன்றத்துக்குச் சென்றே பிறகே, தேர்தலை நடத்துகிறது. 4 தொகுதி தேர்தலை தள்ளி வைத்ததற்கு தகுந்த காரணங்களை தேர்தல் ஆணையம் சொல்லவில்லை. மாநில தேர்தல் ஆணையர், சில நாள்களுக்கு முன் 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு என்றார். அதன்பின், 13 வாக்குச்சாவடிகளில் மட்டுமே மறுவாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. 44 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டு மட்டுமே எண்ணப்படும் என்கின்றனர். இப்படி தொடர்ந்து முன்னுக்குபின் முரணாக தேர்தல் ஆணையம் குழப்பக்கூடிய சூழல் ஏற்படுகிறது. 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு எடுத்து செல்லப்பட்டன. மதுரை மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் நடந்த குளறுபடிகள் அறிவோம். 

கே.பாலகிருஷ்ணன்

தினந்தோறும் மாற்றி, மாற்றி பேசி தேர்தல் ஆணையம் குளறுபடி செய்து வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கை முறையாக நடத்தப்படுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. துணை முதல்வரும், முதல்வரும் தேர்தல் ஆணையத்துக்கு வக்காலத்து வாங்குவது, ஆளுங்கட்சி அதன் பின்னணியில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஆளுங்கட்சி உத்தரவுப்படி, அவர்கள் செயல்படுவதாக எண்ணத் தொன்றுகிறது. இப்படி குழப்பங்களை ஏற்படுத்தும் தலைமைத் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் அல்லது சிறப்பு பார்வையாளரை நியமித்து, வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த வேண்டும்.

மோடி ஆட்சியில் பதற்றம் உள்ளதுபோலவே, அ.தி.மு.க ஆட்சியிடமும் பதற்றம் உள்ளது. 22 தொகுதிகளில் தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெற்றுவிட்டால், எப்படியாவது ஆட்சியைக் காப்பாற்றவேண்டும் என 3 எம்.எல்.ஏ-க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கையை தொடங்கியது. அதற்கு நீதிமன்றம் தடைவிதித்துவிட்டது. வரும் மே 23-ம் தேதி வெளியாவது இடைத்தேர்தல் முடிவு மட்டுமல்ல, ஆட்சி மாற்றத்துக்கான முடிவும்தான். தமிழக மக்கள் மத்திய, மாநில அரசுகள் மீது கோபத்தில் உள்ளனர்.

ஏரி, குளங்களைத் தூர்வாராமல், மழைக்காக அரசு யாகம் வளர்க்கச் சொல்கிறது. அப்படி என்றால், அரசு எதற்கு இருக்கிறது, சம்பாதிக்க மட்டும்தானா?. திருமங்கலத்தில் ஒரே வழித்தடத்தில் வந்த இரு ரயில்களால் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதற்கு, தமிழகத்தில் மத்திய அரசுப்பணிகளில் வடமாநிலத்தவர் இருப்பதால், மொழி பிரச்னையால் ஏற்பட்டது என்கின்றனர். தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணிகளில் வடமாநிலத்தவர் நியமிக்கப்படுவதால், தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது.

விருத்தாசலத்தில் நடந்த பெண் கொலையை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதில், பல்வேறு குளறுபடியான தகவல்கள் வெளியாவதால், சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்த வேண்டும். அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வழங்கப்பட்டுள்ள பயண திட்டத்துக்கு அனுமதி மறுத்து திடீரென காவல்துறை நான்கு இடங்களில் பிரசாரம் மேற்கொள்வதற்குப் பதிலாக, ஒரு இடத்தில் பிரசாரம் மேற்கொள்ளுங்கள் என கூறுவது சரியான நடவடிக்கையாகத் தோன்றவில்லை. இடைத்தேர்தலில் ஒவ்வொரு கட்சி சார்பிலும் மாநிலப் பொறுப்பாளர்கள் பிரசாரம் மேற்கொள்வது நடைமுறைதான். அதற்கு தகுந்தாற்போல் இடங்களை ஒதுக்கித் தரவேண்டும். மாறாக, குறிப்பிட்ட இடங்களில் பேசக்கூடாது ஏதேனும் ஓரிடத்தில் பிரசாரம் மேற்கொள்ளுங்கள் எனக் கூறுவது சரியல்ல. இடைத்தேர்தலை நடத்துவது ஆளும் அரசாங்கம்தான், தேர்தல் ஆணையம் அல்ல" என்றார்.