`வேதாந்தா குழுமத்திற்கு அனுமதி... தமிழக மக்களின் நெற்றிப்பொட்டில் உதைப்பதற்கு சமம்!' - வைகோ | MDMK supremo Vaiko slams BJP government

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (12/05/2019)

கடைசி தொடர்பு:07:46 (13/05/2019)

`வேதாந்தா குழுமத்திற்கு அனுமதி... தமிழக மக்களின் நெற்றிப்பொட்டில் உதைப்பதற்கு சமம்!' - வைகோ

``விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு லைசன்ஸ் அனுமதி வழங்கியது தமிழகத்தினரை நெற்றிப்பொட்டில் எட்டி உதைப்பதற்கு சமம்" என்று கரூரில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக பேட்டியளித்துள்ளார்.

வைகோ

 கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளதையடுத்து, தி.மு.க வேட்பாளர் வி.செந்தில் பாலாஜியை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கரூர் வருகைதந்தார்.

அப்போது முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது; ``இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு, தியாகராய நகரில் உள்ள அரசுக் குடியிருப்பு வாடகை வீட்டில் இருந்து வெளியேறி கே.கே.நகர் பகுதியில் குடியேறினார். மறுபுறம் முன்னாள் அமைச்சர் கக்கனின் குடும்பத்தினரையும் வெளியேற அரசு வற்புறுத்தி வருவதால், அவர்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். வீடுகளை இழந்து தற்போது வாழ்ந்து வரும் கம்னியூஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தினருக்கு இந்த அரசு அவமரியாதையைச் செய்திருக்கிறது. நேர்மையின் சிகரமாக விளங்கிய கக்கன் அவர்களது குடும்பமும், அதே குடியிருப்பில் வசித்து வந்தது தெரிந்தும் மாற்று ஏற்பாடு செய்து கொடுத்த பின்புதான் வீடு காலி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்; பின்புதான் நோட்டீஸ் வழங்கி இருக்க வேண்டும். 

வைகோ

ஆனால், இந்த அரசு அப்படிச் செய்யவில்லை. இந்தச் சம்பவங்களால் அரசுமீது இன்று தமிழகத்தில் அனைவரும் கொந்தளித்து உள்ள நிலையில், அவர்களிடத்தில் ஆறுதல் சொல்லிப் பயனில்லை. நல்லகண்ணு பொது வாழ்க்கையில் பலவருடம் சிறை வாசம் அனுபவித்தவர், கட்சி கொடுத்த ரூ.1 கோடி பணத்தை கட்சிக்கே நிதியாக அளித்தவர். அப்படி உன்னதமான பண்பு படைத்த, தமிழகமே, போற்றக்கூடிய ஒரு தலைவருக்கு இழைக்கப்பட்ட அவமானமாகவும், இந்த அரசு ஒரு மனிதாபிமானமற்ற அரசாகவும் மாறி இருக்கிறது. இதெல்லாம் முன்கூட்டியே தெரிந்தும் அதிகாரிகள் கூறியதை அலட்சியமாக எடுத்துக்கொண்ட அரசு என்று குற்றம்சாட்டுகிறேன்.

மத்திய அரசு விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வேதாந்தா குழுமத்துக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்தச் செயல் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல உள்ளது. விவசாய நிலங்களை அடியோடு அழிப்பதற்கும், விவசாயிகளை அடியோடு அழிப்பதற்கும் தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்ற அதே ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தா நிறுவனத்துக்கு லைசன்ஸ் கொடுத்திருப்பது, தமிழகத்தின் நெற்றிப்பொற்றில் எட்டி உதைப்பதற்கு சமம் ஆகும்" என்றார் காட்டமாக.