`அறிவியல் அனைவருக்குமானதாக இருக்க வேண்டும்!' - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை | science should be for all, says scientist Mylswamy Annadurai

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (12/05/2019)

கடைசி தொடர்பு:19:14 (13/05/2019)

`அறிவியல் அனைவருக்குமானதாக இருக்க வேண்டும்!' - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

`செவ்வாய்க் கிரகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதா என்ற மிகப்பெரிய கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது. அதை நோக்கிய ஆய்வு இப்போது நடக்கிறது' என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

மயில்சாமி அண்ணாத்துரை


இஸ்ரோ முன்னாள் சேர்மன் மாதவன் நாயர், சந்திராயன்-1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் கன்னியாகுமரியில் கல்லூரி நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அப்போது விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறுகையில், ``ஜூலை மாதம் நிலவுக்கு செயற்கைகோள் அனுப்ப வாய்ப்பு உள்ளது. துணை செயற்கைக்கோள் நிலவைச் சுற்றிவரும். நான்குசக்கர வண்டி ஒன்று நிலவில் இறங்கி ஆய்வு செய்யும். வருங்காலத்தில் மனிதர்கள் நிலவுக்குச் செல்லும்போது இறங்கும் இடம் மற்றும் நீர் இருக்கும் இடங்களை சந்திராயன் செயற்கைக்கோள்கள் நமக்குக் காட்டுகின்றன. செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருப்பது ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது.

நமது மங்கள்யான் செயற்கைக்கோள் கடந்த ஐந்து ஆண்டுகளாக செவ்வாய் கோளின் பருவநிலை மாற்றத்தைக் கண்டறிந்துள்ளது. நீரோட்டங்கள் இருந்ததற்கான வாய்ப்புகள் குறித்தும்,  மேகக்கூட்டங்கள் உருவாவது போன்றவை செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. எனவே, செவ்வாய்க் கிரகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதா என்ற மிகப்பெரிய கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது. அதை நோக்கிய ஆய்வு இப்போது நடக்கிறது. சீனாவில் இனி நடக்கப்போகும் மூன்றாவது ஒலிம்பிக் போட்டிக்கான வீரரை இப்போது உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதுபோல அறிவியல் துறையிலும் சிறு வயதுமுதலே கொண்டுவர வேண்டும். அதற்காக 16 திட்டங்கள் வைத்துள்ளோம்.

மயில்சாமி அண்ணாதுரை

அனைத்துப் பள்ளிகளிலும் அறிவியல் ஆய்வுக்கூடம் அமைத்து மாணவர்களை விஞ்ஞானிகளாக உருவாக்க வேண்டும். டாக்டர் படிப்பவர்கள் டாக்டராக வெளியே வருவதுபோன்று, இன்ஜினீயரிங் படித்து வெளியே வருபவர்கள் புராஜெக்ட்கள் செய்து இன்ஜினீயராக வெளியே வரவேண்டும். மாணவர்கள் வெளியில் இருந்து புராஜெக்ட்டுகளை வாங்குவதாக தகவல் வருகிறது.

எனவே, தமிழ்நாடு அளவில் ஆயிரம் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கும் மாணவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கும் திட்டம் உள்ளது. இதுபோன்று 16 திட்டங்கள் வைத்துள்ளோம். விண்வெளித் திட்டங்கள் விவசாயிகளுக்குச் சென்று சேர வேண்டும். அறிவியல் தொழில்நுட்பம் ஆய்வுக்கூடங்களைத் தாண்டி அனைவருக்குமானதாக ஆக வேண்டும். பொறியியல் கல்லூரிகள் அருகில் உள்ள சில பள்ளிகளைத் தத்தெடுத்து, விஞ்ஞானம் குறித்து மாணவர்களுக்குச் சொல்ல வேண்டும். செயற்கைக்கோள் அனுப்புவதால் ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட வாய்ப்பு இல்லை. ஓசோனில் ஓட்டை இருப்பதைக் கண்டுபிடித்ததே செயற்கைக்கோள் மூலமாகத்தான். விண்வெளி துகள்கள் பெரும்பாலும் பூமியில் விழ வாய்ப்பு இல்லை. துகள்கள் வேகமாக பூமிக்கு வரும்போது காற்றில் உராய்வு ஏற்பட்டு அனைத்தும் எரிந்துபோகும்'' என்றார்.