`எஸ்.பியை மாத்திட்டாங்க... அவரையும் மாத்துவாங்கனு நம்புறேன்!' - ஜோதிமணி அதிரடி | Jyothimani talks about Karur Sp transfer

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (12/05/2019)

கடைசி தொடர்பு:19:05 (13/05/2019)

`எஸ்.பியை மாத்திட்டாங்க... அவரையும் மாத்துவாங்கனு நம்புறேன்!' - ஜோதிமணி அதிரடி

``தேர்தல் ஆணையம், ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுவந்த கரூர் மாவட்ட எஸ்.பியை இடமாற்றம் செஞ்சுட்டாங்க. அதேபோல், ஒருதலைபட்சமாக செயல்படும் மாவட்ட ஆட்சியரும் விரைவில் மாற்றப்படுவார் என நம்புகிறேன்" என்று கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.

 ஜோதிமணி

கரூர் மாவட்ட ஆட்சியராகவும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் இருப்பவர் அன்பழகன். அதேபோல், மாவட்ட எஸ்.பியாக இருந்தவர் ராஜசேகரன். ``மாவட்ட ஆட்சியரும், மாவட்ட எஸ்.பி-யும் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக நடக்கிறார்கள். தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்குமா என்று தெரியவில்லை. இருவரையும் மாநில தேர்தல் ஆணையம் உடனே இடமாற்றம் செய்ய வேண்டும்" என்று ஜோதிமணி தொடர்கோரிக்கை வைத்துவந்தார். தேர்தல் ஆணையம் வரை புகார் அனுப்பி வந்தார். அதேபோல், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, 16-ம் தேதி அதிரடி பேட்டி ஒன்றைக் கொடுத்தார். 

அன்பழகன் (கரூர் மாவட்ட ஆட்சியர்)

அதாவது, 'என்னை செந்தில் பாலாஜியும், ஜோதிமணியும் 100 பேரை நள்ளிரவில் வீட்டுக்கு அனுப்பி, என் குடும்பத்துக்கு கொலைமிரட்டல் விடுத்தார்" என்று அதிரடியாக தெரிவித்தார். அதோடு, ஆட்சியர் கொடுத்த புகாரின்பேரில், செந்தில் பாலாஜி, ஜோதிமணி உள்ளிட்ட 100 பேர் மீது தான்தோன்றிமலை காவல்நிலையத்தில் மூன்றுபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதோடு, அன்பழகன் ஜோதிமணிக்கு போன் செய்து, 'தேர்தலை நிறுத்துவேன்' என்று அதிரடியாக பேசிய ஆடியோவை ஜோதிமணி சமூகவலைதளங்களில் பகிர, அது சர்ச்சையானது

ராஜசேகரன் (கரூர் முன்னாள் எஸ்.பி)

இந்த நிலையில்தான், கரூர் மாவட்ட எஸ்.பி ராஜசேகரன் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக விக்ரமன் என்பவரை மாவட்ட எஸ்.பியாக நியமித்துள்ளார்கள். இந்த அதிரடி மாற்றம் பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஜோதிமணி, ``தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டுவந்த கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்துள்ளதை வரவேற்கிறேன். தேர்தல் ஆணையத்துக்கு நன்றிகள்!. ஒருதலைபட்சமாக செயல்படும் மாவட்டத் தேர்தல் அதிகாரியும் விரைவில் மாற்றப்படுவார் என்று நம்புகிறேன்" என்று பதிவு செய்துள்ளார்.