சுற்றுலா வந்த மதுரை பாலிடெக்னிக் மாணவர் குமரி கடலில் மாயம்! | Students missing in kanyakumari

வெளியிடப்பட்ட நேரம்: 21:14 (12/05/2019)

கடைசி தொடர்பு:08:25 (13/05/2019)

சுற்றுலா வந்த மதுரை பாலிடெக்னிக் மாணவர் குமரி கடலில் மாயம்!

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஆயிரங்கால் பொழிமுகம் பகுதியில் கடலில் விளையாடிய மதுரை மாணவர் கடல் அலையில் சிக்கி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயிரங்கால் பொழிமுகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரைப் பகுதிகள் சுற்றுலாத் தலங்களாக விளங்கி வருகிறது. இப்போது கோடை விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரி மற்றும் குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு சூழ்ந்துள்ள கடற்கரை பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். அதுமட்டுமல்லாது அந்திசாயும் நேரம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 14 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாவுக்காக வந்துள்ளனர். அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ஆயிரங்கால் பொழிமுகம் கடற்கரையில் இன்று மாலை விளையாடிக் கொண்டிருந்தனர்.

சுற்றுலா

அலையோடு விளையாடிக்கொண்டிருந்தபோது நாராயண குமார், சிவநாத், சுதர்சன் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகிய நான்கு பேரையும் கடல் அலை இழுத்துச் சென்றுள்ளது. அங்கிருந்தவர்கள் உடனடியாக மூன்றுபேரை மீட்டு கரைக்குக் கொண்டுவந்தனர். மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் கிருஷ்ணகுமார்(19) மட்டும் கடலில் மாயமானார். கிருஷ்ணகுமார் மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்.

கிருஷ்ணகுமார்

பாலிடெக்னிக்கல் இரண்டாம் ஆண்டு மாணவரான கிருஷ்ணகுமாரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாணவர் மாயமானது குறித்து குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.