தீராத மர்மங்களைச் சுமந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை உச்சி கண்ணகி கோயில் #MyVikatan | Mystery behind kannagi temple in theni

வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (13/05/2019)

கடைசி தொடர்பு:14:30 (13/05/2019)

தீராத மர்மங்களைச் சுமந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை உச்சி கண்ணகி கோயில் #MyVikatan

இப்போது இருப்பது கண்ணகி கோயில் அல்ல… அதில் இருந்தது சேரன் செங்குட்டுவன் செய்த கண்ணகி சிலை இல்லை… என்றெல்லாம் பல விவாதங்கள் முன்வைத்தாலும். இது கண்ணகி கோயில், அதில் இருந்தது கண்ணகி சிலைதான் என அதிகாரபூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் நிரூபிக்கும் பல சான்றுகள் கிடைத்துள்ளன.

கண்ணகி சிலை

கண்ணகி கோயில் 1963 நவம்பர் 17அன்று தஞ்சைப் புலவர் கோவிந்தராசனாரால் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது கருவறையில் தலைவிரி கோலத்தில் பெண் தெய்வத்தின் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று பகுதிகளாகக் கிடந்த அந்தச் சிலையை எடுத்து பொருத்திப் பார்த்திருக்கிறார் புலவர். பின்னர் கோயிலில் நடைபெற்ற தொடர் ஆராய்ச்சிகளின்போது, உடைந்த மூன்று பகுதிகளில் தலைப்பகுதியை தன்னுடன் எடுத்துச் சென்ற அவர், பெங்களூரில் இருக்கும் ஆராய்ச்சி நிலையத்துக்கும், அதைத் தொடர்ந்து டெல்லி ஐஐடி'க்கும் அனுப்பி அக்கல்லின் வயது மற்றும் அதன் தன்மைகளை ஆராய்ந்தார். அதன் முடிவில், இமயமலைப் பகுதியில் இருக்கும் கல்லின் தன்மையிலும், அதன் வயது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் ஆய்வு அறிக்கை கிடைக்கப்பெற்றது. பின்னரே, இது சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்ட கண்ணகி கோட்டம் எனவும், அதனுள் இருப்பது கண்ணகி சிலை என்றும் முடிவுக்கு வருகிறார் புலவர் கோவிந்தராசனார். அதை அப்போதைய கருணாநிதி அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கிறது. சிலையில் தலைப்பகுதியை அரசிடம் ஒப்படைக்கிறார் கோவிந்தராசனார். அன்று முதல் இன்று வரை சிலையின் தலைப்பகுதி எங்கு இருக்கிறது என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை.

கண்ணகி கோயில்

இது ஒருபுறம் என்றால், மூன்று பகுதியாக உடைந்திருந்த சிலையின் இடைப்பகுதியும் தற்போது எங்குள்ளது என்ற விவரம் இல்லை. 1976-ல் கண்ணகி கோயிலில் கேரளா சார்பில் அத்துமீறி வைக்கப்பட்ட துர்கை சிலையை அப்புறப்படுத்தத் தமிழக பக்தர்கள் முற்படும்போது, கேரள வனத்துறையோடு மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கோயிலுக்குச் சென்ற தமிழக பக்தர்கள் 28 பேரை, கேரள வனப்பகுதியில் மரம் வெட்ட வந்ததாகக் கூறி கேரள வனத்துறை கைது செய்தது. அப்போது, கண்ணகி கோயில் இப்பகுதியில் இருப்பதால்தான் நம் வனத்துக்குள் இவர்கள் நுழைகிறார்கள் என்று கூறி, அதற்கான ஆதாரம் திரட்டுவதற்காக கண்ணகி சிலையின் இடைப்பகுதியை எடுத்துச் சென்றனர். கைது செய்யப்பட்டவர்களோடு, கண்ணகி சிலையின் இடைப்பகுதியும் இடுக்கி மாவட்டம் பீர்மேடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது. கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டாலும், கொண்டு செல்லப்பட்ட கண்ணகி சிலை இன்று வரை மீட்கப்படவில்லை.

தற்போது பீர்மேடு நீதிமன்றத்தில்தான் சிலை இருக்கிறதா என்றுகூட தெரியவில்லை. இடது காலை மடித்து அமர்ந்திருக்கும் கண்ணகி சிலையின் அடிப்பகுதி இன்றும் கருவறையிலேயே இருக்கிறது. அதன் மேல் ஐம்பொன்னால் ஆன கண்ணகி சிலையை வைத்துதான் வழிபாடு நடத்திக்கொண்டிருக்கிறோம். காணாமல் போனது கண்ணகி சிலை மட்டுமல்ல… அதன் பின்னால் இருக்கும் வரலாறும் தான். கண்ணகி சிலையானது எங்கே என்ற மர்மம் எப்போது விலகும் என்றுதான் தெரியவில்லை… தீராத மர்மங்களை இன்றளவும் சுமந்துகொண்டிருக்கிறது மேற்குத்தொடர்ச்சிமலை உச்சியில் அமைந்திருக்கும் கண்ணகி கோயில்.