``அந்த விஷம் இந்த உடம்பில் ஏறக்கூடாது!" - தொண்டர்களுக்கு கமல்ஹாசன் சொன்ன அட்வைஸ் | "No one should participate in the parties by major parties!" - Kamal

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (13/05/2019)

கடைசி தொடர்பு:12:10 (13/05/2019)

``அந்த விஷம் இந்த உடம்பில் ஏறக்கூடாது!" - தொண்டர்களுக்கு கமல்ஹாசன் சொன்ன அட்வைஸ்

 

 கமல்ஹாசன் பிரசாரம்

``அரவக்குறிச்சி பகுதியில் முக்கிய அரசியல் கட்சிகள் சார்பில் விருந்து அளிப்பதாக கேள்விப்பட்டேன் அவற்றில் நீங்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்பது என்னுடைய அறிவுரை. காரணம், இது என் குடும்பம். நீங்களெல்லாம் என் குடும்ப உறுப்பினர்கள்" என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.


 கமல்ஹாசன் பிரசாரம்.

தமிழகத்தில் காலியாகவுள்ள அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மோகன்ராஜ் என்பவரை களமிறக்கி இருக்கிறார் கமல். அவரை ஆதரித்து, அவருக்காக வாக்குகள் கேட்டு, பிரசாரம் மேற்கொள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கரூர் வருகைதந்தார். அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சின்னதாராபுரம், அரவக்குறிச்சி கடைவீதி , ஈசநத்தம், பள்ளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு, டார்ச் லைட் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அதற்கு முன்னதாக, பாடலாசிரியர் சினேகன் பொதுமக்களிடம், ``மக்கள் நீதி மய்யம் மாற்றத்துக்கான மையம். எனவே, மக்கள் ஆதரவளிக்க வேண்டும்" எனப் பேசினார். பின்னர், அரவக்குறிச்சி கடைவீதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசிகையில்,


 கமல்ஹாசன் பிரசாரம்..

``நம்மை ஆளும் அரசு நிலத்துக்குக் கீழே மண், மணல், பொன் ஆகியவற்றைத் தோண்டி விற்பதைப்போல, தற்போது ஹைட்ரோகார்பனையும் தோண்டி விற்று வருகிறார்கள். எதை விட்டுக் கொடுத்தாலும், நம் மண்ணைச் சுரண்டுவதை நாம் அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொருவரும் அதை எதிர்த்துப் போராட முன் வர வேண்டும். அரவக்குறிச்சிப் பகுதியில் முக்கிய அரசியல் கட்சிகள் சார்பில் விருந்து அளிப்பதாக கேள்விப்பட்டேன். அவற்றில் நீங்கள் யாரும் கலந்துகொள்ளக் கூடாது என்பது என்னுடைய அறிவுரை. காரணம், இது என் குடும்பம். நீங்களெல்லாம் என் குடும்ப உறுப்பினர்கள். அந்த விஷம் இந்த உடம்பில் ஏறக்கூடாது என்பதுதான் என்னுடைய ஆசை.

உங்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். தமிழ்நாடும் நமக்கு ஓர் அன்னைதான். அந்ததாய் தற்பொழுது உடல் நலமற்று கிடக்கிறாள் என்பதை அனைவரும் உணர்ந்து, அதற்கு அவசர உதவி மேற்கொள்ள வேண்டும். நிச்சயமாக அரசியல் மாற்றம் தமிழகத்தில் ஏற்பட உள்ளது. அந்த வாய்ப்பை நீங்கள் தற்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் உங்கள் வெற்றி வேட்பாளர் மோகன்ராஜுக்கு டார்ச் லைட் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். நாங்கள் இந்தச் சின்னத்தை உங்களிடம் கொண்டு சேர்க்கும் முன்னால், நீங்களே இந்தச் சின்னத்தை தத்து எடுத்துக்கொண்டீர்கள். இந்தச் சின்னம் தமிழகத்தின் ஒளிவிளக்காக மாறும் நாள் வெகுவிரைவில் உள்ளது என்பதை நாங்கள் உணர்ந்துவிட்டோம். நீங்களும் உணர்ந்தால், நிச்சயம் நாளை நமதே" என்றார்.