``கமல் சார், நீங்க நல்ல நடிகர்.. ஆனால்.....!” - கமலின் சர்ச்சை பேச்சுக்கு விவேக் ஓபராய் பதில் | Independent India's first terrorist a Hindu kamal says

வெளியிடப்பட்ட நேரம்: 13:38 (13/05/2019)

கடைசி தொடர்பு:14:39 (13/05/2019)

``கமல் சார், நீங்க நல்ல நடிகர்.. ஆனால்.....!” - கமலின் சர்ச்சை பேச்சுக்கு விவேக் ஓபராய் பதில்

தமிழகத்தில் காலியாக உள்ள ஓட்டப்பிராடம், அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு சேகரிக்கும் பணியில் தமிழக அரசியல் தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதல்முறையாக இந்த வருடம் தேர்தலை எதிர்கொள்ளும் மக்கள் நீதி மய்யமும் நான்கு தொகுதிகளிலும் அனல் பறக்க பிரசாரம் செய்து வருகிறது.

கமல்ஹாசன்

PC : Twitter/@maiamofficial

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மோகன் ராஜ் என்பவர் போட்டியிடுகிறார். அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று அவரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அதில் பேசிய கமல், ``பெருமை மிக்க இந்தியர்கள் சமத்துவம் மிக்க இந்தியாவைத்தான் விரும்புவார்கள். இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதி என்பதால், நான் இதைச் சொல்லவில்லை. காந்தியார் சிலை இருக்கும் இடம் என்பதால், அந்தச் சிலைக்கு முன்பாக நின்று சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி, ஒரு இந்து. அவர் பெயர் நாத்துராம் கோட்சே. அங்குத் தொடங்குகிறது அது.


மக்கள் நீதி மய்யம் பிரசாரம்

நான் காந்தியின் மானசிக கொள்ளுப்பேரன். அந்தக் கொலைக்கு கேள்விகேட்க வந்துள்ளேன். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக, நான் முன்னர் கூறியதுபோல் அந்த மூவர்ண கொடியில் உள்ள அனைத்து வண்ணங்களும் அப்படியே இருக்கும் இந்தியாவாகத் திகழ வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் மார்தட்டிச் சொல்வேன்’ எனப் பேசியுள்ளார். இவரின் பேச்சு தற்போது சர்ச்சையாகியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் பிரசாரம்

இதற்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் கண்டனம் மற்றும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது பற்றி கருத்து பதிவிட்டுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, ``மகாத்மாவின் படுகொலையைக் கண்டித்து நாடே பதறியது. கொலையாளி தூக்கிலிடப்பட்டார். ஆனால், அதை இந்து தீவிரவாதம் எனத் தேர்தல் பிரசாரத்தில் பேசுவது விசமத்தனமானது ஆபத்தானதும்கூட. புதிய அரசியலை முன்னெடுப்பதாகக் கூறும் கமல் பழையதை கையில் எடுப்பது மத விஷம் பரப்பி வரும் ஓட்டுக்காகத்தானே? 

தமிழிசை ட்வீட்

இந்து தீவரவாதம் என்று தேர்தல் பிரசாரத்தில் பேசும் கமல்ஹாசனைக் கண்டிக்கிறோம்.பள்ளபட்டியில் சிறுபான்மை மக்கள் நடுவில் நின்றுகொண்டு மத உணர்வுகளைத்தூண்டி கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் இவர்மீது தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழிசை ட்வீட்

இதற்கிடையில் இதே சர்ச்சை பற்றி கருத்து தெரிவித்துள்ள பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், `` அன்புள்ள கமல்சார் நீங்கள் சிறந்த நடிகர். கலையைப் போலவே தீவிரவாதத்துக்கும் மதம் கிடையாது. கோட்சேவை நீங்கள் தீவிரவாதி எனக் கூறலாம். ஆனால், ஏன் இந்து என்று குறிப்பிடுகிறீர்கள். இஸ்லாமிய மக்கள் நிறைந்த பகுதியில் நிற்பதால் ஓட்டுக்காக அவ்வாறு குறிப்பிட்டீர்களா? சிறிய நடிகனான நான் பெரிய கலைஞரிடம் கேட்டுக்கொள்கிறேன் தயவு செய்து இந்தியாவைப் பிரிக்காதீர்கள். நாம் அனைவரும் ஒன்றுதான்” என தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

விவேக் ஓபராய் ட்வீட்

கமல் கூறிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. இன்று அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், `` கோட்சே ஆர்.எஸ்.எஸ்ஸில் பயிற்சி எடுத்தார். அதுமட்டுமல்ல மத்தியப் பிரதேசத்தில் தேர்தலில் நிற்கும் ஒருவர் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்து போட்டியிடுகிறார். இதில் முதல் கடைசி என்பதெல்லாம் கிடையாது. முழுவதும் அவர்கள்தான். அதைதான் கமல் கூறியுள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார்.