பிறந்தநாள் விழாவை தவிர்த்த முதல்வர் - செந்தில்பாலாஜியை வீழ்த்த மாஸ்டர் பிளான்  | CM palanisami master plan to beat senthil balaji in by-election

வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (13/05/2019)

கடைசி தொடர்பு:13:25 (13/05/2019)

பிறந்தநாள் விழாவை தவிர்த்த முதல்வர் - செந்தில்பாலாஜியை வீழ்த்த மாஸ்டர் பிளான் 

செந்தில்பாலாஜி

அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜியை வீழ்த்துவது குறித்து தேர்தல் பொறுப்பாளர்களிடம் முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்காக அவர் பிறந்தநாளையும் கொண்டாடவில்லை. 

தமிழகத்தில் நடைபெற உள்ள 4 சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியைக் கைப்பற்றிவிட வேண்டும் என முழுவீச்சில் அ.தி.மு.க-வினர் செயல்பட்டுவருகின்றனர். ஆனால், களநிலவரத்தைப் பார்த்து அ.தி.மு.க-வினர் தேர்தல் வியூகத்தை மாற்றியமைத்துள்ளனர். 

கரூர்மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த 1980-ம் ஆண்டு முதல் தி.மு.க. 4 தடவையும் அ.தி.மு.க 5 தடவையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2016-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட செந்தில்பாலாஜி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கே.சி.பழனிசாமி தோல்வியடைந்தார். 2011 -ல் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் கே.சி.பழனிசாமியிடம் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன் தோல்வியடைந்தார். தற்போது அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் காட்சிகள் மாறியுள்ளன. 

செந்தில்பாலாஜி

அதாவது, தி.மு.க-வில் செந்தில்பாலாஜி இணைந்ததால் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், செந்தில்பாலாஜியின் வெற்றிக்காக கே.சி.பழனிசாமி பாடுபட்டுவருகிறார். அ.தி.மு.க. சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அரவக்குறிச்சியில் சாகுல் ஹமீது களமிறங்கியுள்ளார். டி.டி.வி. தினகரனின் விசுவாசியாக இருந்த செந்தில்பாலாஜி, தி.மு.க-வில் இணைந்ததால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் அவரை தோற்கடிக்கும் வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் அரவக்குறிச்சியைப் பொறுத்தவரை செந்தில்பாலாஜியை தோற்கடிக்க அ.தி.மு.க-வினரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரும் போட்டிபோட்டு வேலைபார்த்துவருகின்றனர். ஆனால், உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட், செந்தில்பாலாஜிக்கு சாதகமாக இருப்பதால் அ.தி.மு.க-வினரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரும் தீவிர ஆலோசனையில் உள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் முழுக்கவனம் செலுத்திய அ.தி.மு.க-வினர் தொகுதியில் உள்ள ப்ளஸ், மைனஸ் குறித்து விவாதித்துள்ளனர். அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள பள்ளப்பட்டியில் உள்ள முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற பலவகையில் முயற்சி செய்துவருகின்றனர். முஸ்லிம்களின் நோன்பு காலத்தையொட்டி பள்ளப்பட்டியில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை அ.தி.மு.க சார்பில் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், உள்ளூர் முஸ்லிம் முக்கியஸ்தர்கள் யாரும் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. 

 செந்தில்பாலாஜியை வீழ்த்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சியில் பேசிய அன்வர்ராஜா, `நீங்கள் எல்லோரும் அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது அங்குள்ளவர்கள் உள்ளூர் முஸ்லிம்கள் ஒருசிலரே பங்கேற்றுள்ளனர். மற்றவர்கள் அனைவரும் வெளியூரைச் சேர்ந்தவர்கள். அதனால் அவர்களுக்கு இங்கு ஓட்டு இல்லை என்று கூறியுள்ளனர். அமைச்சர் நிலோபர் கபில், அன்வர்ராஜா, தமிழ்மகன் உசேன், ஜெ.எம்.பஷீர் ஆகியோரை பள்ளப்பட்டியில் உள்ள முஸ்லிம் ஓட்டுக்களை எப்படியாவது பெற ஏற்பாடு செய்யுங்கள் என முதல்வரும் துணை முதல்வரும் தெரிவித்துள்ளனர். அதனால், பள்ளப்பட்டியிலேயே முகாமிட்டுள்ள இவர்கள் குட்டிக்கரணம் போட்டு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். 

அரவக்குறிச்சி தொகுதியில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிக்க உள்ளார். இதற்காக அவர் ஓட்டப்பிடாராம் தொகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டு மதுரையில் இன்று அதிகாலை வந்தார். அங்குள்ள ஹோட்டலில் தங்கியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று 65வது வயது பிறந்தநாள். இதனால் முதல்வரைச் சந்திக்க அமைச்சர்களும், கட்சியினரும் அனுமதி கேட்டனர். ஆனால், முதல்வரோ, தேர்தல் நேரத்தில் என்னுடைய பிறந்தநாள் விழா வேண்டாம். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வெற்றி பெறுங்கள் என்று பிறந்தநாள் விழாவை தவிர்த்துள்ளார். 

 செந்தில்பாலாஜியை வீழ்த்த எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

அரவக்குறிச்சி தேர்தல் பொறுப்பாளர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், நல்லவேளை செந்தில்பாலாஜி, டி.டி.வி.தினகரனிடமிருந்து தி.மு.க-வுக்குச் சென்றுள்ளார். செந்தில்பாலாஜி மட்டும் தி.மு.க-வுக்கு செல்லாமல் இருந்திருந்தால் ஆர்.கே.நகரைப் போல அரவக்குறிச்சியிலும் அ.ம.மு.க வெற்ற பெற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். தி.மு.க சார்பில் செந்தில்பாலாஜி போட்டியிடுவதால் ஒருவேளை அவர் வெற்றி பெற்றாலும் மக்கள் எடுத்த முடிவு என்று சொல்லிவிடலாம் என்று கூறியிருக்கிறார். அதைக்கேட்டவர்கள், வெளிப்படையாக இப்படி பேசாதீர்கள், உங்கள் கருத்தை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செந்தில்பாலாஜியை வீழ்த்த நம்மிடம் மாஸ்டர் பிளான் இருக்கிறது. அதை செயல்படுத்தினாலே செந்தில்பாலாஜியை எளிதில் வீழ்த்திவிட முடியும் என்று சூசகமாக கூறியுள்ளார். 

 அரவக்குறிச்சி தொகுதியின் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. இதனால் ஓட்டுக்களை அறுவடைச் செய்ய தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க-வினர் அதிரடி திட்டங்களை அள்ளி வீசிவருகின்றனர். அதோடு அரவக்குறிச்சி தொகுதி வாக்காளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க அ.தி.மு.க-வினர் திட்டமிட்டு செயல்பட்டுவருகின்றனர். இதனால் அரவக்குறிச்சி தொகுதியில் கடைசி நேர களநிலவரம் மாற வாய்ப்புள்ளது.