``எதிர்க்கட்சியாக இருக்கும்போதே இந்தநிலை.. ஆளும்கட்சியானால்..!” - தி.மு.க வை விமர்சித்த அன்புமணி | anbumani ramadoss slams stalin and dmk

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (13/05/2019)

கடைசி தொடர்பு:16:00 (13/05/2019)

``எதிர்க்கட்சியாக இருக்கும்போதே இந்தநிலை.. ஆளும்கட்சியானால்..!” - தி.மு.க வை விமர்சித்த அன்புமணி

``தமிழகத்தில் காவிரி, டெல்டா பகுதியில் வேதாந்தா நிறுவனத்திற்கு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக முதல்கட்டப் பணிகளைத் தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மாநில அரசு இதற்கு அனுமதி அளிக்கக்கூடாது” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அன்புமணி

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மோகனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்தார் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தமிழகத்தில் காவிரி, டெல்டா பகுதியில் வேதாந்தா நிறுவனத்திற்கு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக முதல்கட்டப் பணிகளைத் தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். 274 ஆழ்த்துளைக் கிணறுகள் மூலம் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மாநில அரசு இதற்கு அனுமதி அளிக்கக்கூடாது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திட வலியுறுத்துவோம். ஹைட்ரோகார்பன், மீத்தேன் என எந்தவித எரிவாயுத் திட்டமும் தமிழகத்தில் செயல்படுத்த மாநில அரசு அனுமதி அளிக்கக் கூடாது. இதுகுறித்து முதல்வரைச் சந்தித்து அழுத்தம் கொடுத்து டெல்டா பகுதி விவசாயத்தைக் காத்திடவும் வலியுறுத்த உள்ளோம். இதுமுடியாத பட்சத்தில் திட்டத்தைக் கைவிடக்கோரி போராட்டம் நடத்துவோம்.

அன்புமணி

தி.மு.க தலைவர் ஸ்டாலினின் முதல்வர் கனவு நனவாகப் போவதில்லை. அவரது பிரசாரம் தமிழகத்தின் வளர்ச்சியைப் பற்றியோ, திட்டங்களைப் பற்றியோ இல்லை. கடந்த ஒருமாதமாகவே மோடி, முதல்வர், துணைமுதல்வரை திட்டும் விதத்திலேயே அவரது பிரசாரம் உள்ளது. ஸ்டாலின் மீது மக்கள் வெறுப்பில் உள்ளார்கள். டி.டி.வி.தினகரன் தி.மு.கவுடன் மறைமுகக் கூட்டணி வைத்துள்ளதாக மக்கள் பேசி வருகிறார்கள்.

தி.மு.க என்றாலே கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு இதுதான் அவர்களது வாடிக்கை. எதிர்க்கட்சியாக இருக்கும்போதே இந்த நிலை என்றால் ஆளும்கட்சியாக இருந்தால் எப்படி இருக்கும்? 89 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும் தமிழகத்தில் மக்கள் நலனுக்காக தி.மு.க எதுவும் செய்யவில்லை. கேரளாவில் காங்கிரஸை எதிர்க்கும் கம்யூனிஸ்ட் தமிழகத்தில் தோழமையாக குழப்பமான கூட்டணியாக உள்ளது. முதலில் ராகுல்காந்திதான் பிரதமர் என்றார்கள். தற்போது மூன்றாவது அணிக்கு விதை போடுகிறார்கள்” என்றார்.

   

நீங்க எப்படி பீல் பண்றீங்க