`செந்தில் பாலாஜிக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது?’ - கேள்வி கேட்கும் ஓ.பி.எஸ் | Aravakurichi Election Campaign OPS Slams DMK Candidate Senthilbalaji

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (13/05/2019)

கடைசி தொடர்பு:15:40 (13/05/2019)

`செந்தில் பாலாஜிக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது?’ - கேள்வி கேட்கும் ஓ.பி.எஸ்

``புயல் வந்தாலும் சரி, பூகம்பம் வந்தாலும் சரி அ.தி.மு.க இயக்கத்தை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது" என்று அரவக்குறிச்சித் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

 ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரம்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 19 ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து, அ.தி.மு.க கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பி.எஸ் இரண்டாவது கட்ட பிரசாரம் மேற்கொண்டார். கரூரை அடுத்த புகளூர் நான்குரோடு, நொய்யல் குறுக்குச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
 

செந்தில் பாலாஜியை சாடும் ஓபிஎஸ்

அப்போது பேசியவர், இதே தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளரை பற்றி நான் கூற தேவையில்லை. ஏனென்றால், சென்றமுறை வந்த போது, ஏதோ அமாவாசை என்று பொதுமக்கள் கூறினார்கள். அப்போதுதான், அமைதிப்படை, படத்தில் சத்யராஜ், அமாவாசை கதாபாத்திரத்தில் நடித்தார். அதேபோலதான், தற்போது செந்தில்பாலாஜி இருக்கிறார். அ.தி.மு.க இயக்கத்தை பூகம்பமோ, சுனாமியோ வந்தாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. அ.தி.மு.கவை அழிக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தந்தையால் முடியாமல் போனது. தற்போது ஸ்டாலினும் முயற்சி செய்கிறார். அவர் தந்தையாலேயே முடியாதது, வேறு எவராலும் முடியாது. ஏனெனில், இந்த இயக்கம் தொண்டர்களால் தாங்கிப் பிடிக்கக்கூடிய இயக்கமாக இருக்கிறது.

தேர்தல் பிரசாரத்தில் துணை முதல்வர்

அ.தி.மு.கவை தொட்டுப் பார்க்கக் கூட முடியாது. அந்த வேட்பாளர் பல்வேறு கட்சிகளிலிருந்து சென்று, தற்போது தி.மு.க விற்குச் சென்றுள்ளார். எப்படி உடனடியாக மாவட்டச் செயலாளர் ஆனார் என்பதுதான் தெரியவில்லை. துரோகம் செய்தவர்கள் யாரும் தனிக்கட்சி, ஜாதிக்கட்சி உருவாக்கி நிலைத்ததாக வரலாறு இல்லை. அதே போலதான், செந்தில் பாலாஜியின் நிலைமையும். விரைவில் தி.மு.க விலிருந்து அடித்து விலக்கப்படுவார் அவர். அதற்காக, அவருக்கு தக்க பாடத்தினை பொதுமக்கள் தருவார்கள்.

உலகளவில் பணம் கொடுத்து கூட்டத்திற்கு வாருங்கள் என்று பலரும் அழைப்பதை பார்த்திருப்போம். ஆனால், தானாக வரும் நமது கூட்டத்திற்கு மக்களை வரக் கூடாது என்று பணம் கொடுக்கும் ஒரே வேட்பாளர் செந்தில் பாலாஜிதான். அவரிடம் எவ்வளவு பணம் உள்ளது, அவ்வளவு பணமும் எப்படி வந்தது என்பதை மக்கள் யோசித்துப் பார்க்கவேண்டும். ஆகவே, இந்த முறை மக்கள் கொடுக்கும் அதிரடி முடிவினால், இனிமேல் அமாவாசைக்கு அடிமேல் அடி விழும். அரசியலில் இது ஒரு பாடமாக செந்தில் பாலாஜிக்கு அமையும். அளவிற்கு பொதுமக்கள் டெபாசிட் இழக்கும் வகையில், அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்" என்றார்.