`ரூ.1 கோடியுடன் கடத்தப்பட்ட கார்’ - தென்சென்னை அ.தி.மு.கவின் திகில் பஞ்சாயத்து | car Kidnapped with one Crore Rupees

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (13/05/2019)

கடைசி தொடர்பு:16:00 (13/05/2019)

`ரூ.1 கோடியுடன் கடத்தப்பட்ட கார்’ - தென்சென்னை அ.தி.மு.கவின் திகில் பஞ்சாயத்து

பஞ்சாயத்து

துரைப்பாக்கம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் நடந்த சம்பவம் இது. அ.தி.மு.க.வைச் சேர்ந்த இரண்டு தரப்பினருக்கு இடையே சில தினங்களுக்கு முன் கொடுக்கல், வாங்கல் பஞ்சாயத்து நடந்தது. அப்போது ஒரு தரப்பைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் ஒரு கோடி ரூபாயுடன் காரை கடத்தினர். இதற்கு இன்னொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடத்தி எங்களை மிரட்ட நினைத்தால் நாங்களும் பதிலடி கொடுப்போம் என அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் பகிரங்கமாகச் சவால் விட்டார். இதனால் காரசாரமாக பஞ்சாயத்து நடந்துள்ளது.

இந்தத் தகவல் துரைப்பாக்கம் காவல் நிலையத்துக்கு தெரியவந்ததும் அவர்கள், அடையாறு சரக காவல் துறை உயரதிகாரிகளிடம் தகவலைத் தெரிவித்துள்ளனர். காரில் ஒரு கோடி ரூபாய் கடத்தப்பட்டது குறித்து எப்.ஐ.ஆர். பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று நேர்மையான அதிகாரி ஒருவர் துரைப்பாக்கம் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டார். அதன்படி நடவடிக்கை எடுக்க முயற்சி செய்தபோது நாங்கள் ஆளுங்கட்சியினர் அடித்தாலும் பிடித்தாலும் அண்ணன் தம்பிகள். எனவே எங்கள் பஞ்சாயத்தை நாங்களை பேசி தீர்த்துக் கொள்கிறோம். அதில் காவல்துறையினர் தலையிட வேண்டாம் என்று கூறியுள்ளனர். மேலும் டி.ஜி.பி. அலுவலகத்திலிருந்தும் எதையும் கண்டுகொள்ள வேண்டாம் என்ற சிக்னல் சம்பந்தப்பட்ட அடையாறு காவல் சரகத்துக்கு வந்துள்ளது. இதனால் நொந்துபோன அடையாறு சரக காவல்துறை உயரதிகாரி, நாட்டாமை போல பஞ்சாயத்து செய்கிறார்கள். சட்டமும் அதிகாரமும் கையில் இருந்தும் அமைதியாக இருக்க வேண்டியுள்ளது என்று சக காவல்துறை அதிகாரிகளிடம் புலம்பியுள்ளார். 

இந்தத் தகவல் கிடைத்ததும் விசாரித்தோம். தென்சென்னை அ.தி.மு.க.வில் முக்கிய பதவியில் இருக்கும் அந்த நபர்தான் பஞ்சாயத்தில் ஈடுபட்டுள்ளார். கொடுக்கல் வாங்கல் பிரச்னையில்தான் ஒரு கோடி ரூபாயுடன் கார் கடத்தப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாயைப் பறிகொடுத்தவர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்மூலம் செய்திகள் வெளியில் தெரிந்தது. இதனால் சுதாரித்த அ.தி.மு.க. பஞ்சாயத்து கோஷ்டியினர் ஒரு கோடி ரூபாயில் தங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு மீதமுள்ளவற்றை காரோடு திரும்பக் கொடுத்துவிட்டார்களாம். இதனால் அ.தி.மு.க.வினர் நடத்திய பஞ்சாயத்து சுபம் என்று முடிந்துள்ளது. ஒரு கோடி ரூபாயில் குறிப்பிட்ட தொகை தமிழகத்தில் நடக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலின் செலவுக் கணக்கில் காட்டப்பட்டுள்ளதாக உள்விவரம் தெரிந்தவர்கள் தெரிவித்தனர்.