'மகள் இறுதிச்சடங்கில் சபதம் எடுத்த தந்தை!' - கழுத்தறுத்து கொல்லப்பட்ட பஸ் கண்டக்டர் | Bus Conductor Murdered in viruthachalam

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (13/05/2019)

கடைசி தொடர்பு:16:40 (13/05/2019)

'மகள் இறுதிச்சடங்கில் சபதம் எடுத்த தந்தை!' - கழுத்தறுத்து கொல்லப்பட்ட பஸ் கண்டக்டர்

செந்துறையில், மகள் தற்கொலைக்குக் காரணமானவனை அவரது தந்தை கழுத்தை அறுத்து கொலைசெய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

                                                  

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கீழத்தெருவைச்  சேர்ந்தவர் குமரவேல். அவரது மனைவி சுமதி  இறந்துவிட்டார். இவர் திட்டக்குடி டிப்போவில் அரசு பேருந்து நடத்துநராக வேலைசெய்துவருகிறார். இந்த நிலையில், விருத்தாசலத்தில் குமரவேலும் ஏழுமலை என்பவரும் நேற்று இரவு மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் இருந்த குமரவேலை தனது வீட்டுக்கு ஏழுமலை அழைத்துச்சென்றுள்ளார். முன்விரோதம் காரணமாக, குமரவேலை  கொலைசெய்ய திட்டமிட்ட ஏழுமலை, தனது வீட்டில் வைத்து திட்டத்தை நிறைவேற்றியுள்ளார். அவரது வீட்டில் இருந்த மருமகன் சண்முகம், மனைவி வசந்தி மூவரும் குமரவேலின் கழுத்தைக் கத்தியால் அறுத்துக்கொலைசெய்துள்ளனர்.  குமரவேலின் உடலை  பெரியா குறிச்சி சிமென்ட் ஆலைக்குச் சொந்தமான சுரங்கத்தில் போட்டுவிட்டால் யாருக்கும் தெரியாது  என எண்ணிய ஏழுமலை, ஒரு ஆட்டோவில் உடலை ஏற்றிச்சென்றுள்ளார். 

  கொலை

நள்ளிரவு நேரம் என்பதால், தனது திட்டத்தை வெற்றிகரமாக முடித்த ஏழுமலை, ஆட்டோவில் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது வாகனச்சோதனயில் ஈடுபட்டிருந்த போலீஸார், ஆட்டோவை மறித்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  வண்டியில் இருந்த ரத்தக்கறையைக் கண்ட போலீஸார், ஏழுமலையிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குமரவேலை கொலைசெய்ததுகுறித்து காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, செந்துறை போலீஸார் ஏழுமலையைக் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.

                                                ஏழுமலை

என்ன நடந்தது என்று போலீஸாரிடம் பேசினோம். “ஏழுமலையின் மகள் ஆனந்த வள்ளிக்கும் குமரவேலுக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது. கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, இலைக்கடம்பூரில் இருவருக்கும் ஏற்பட்ட தகராற்றில் ஆனந்தவள்ளி தற்கொலை செய்து கொண்டார். இறுதிச்சடங்கின்போது, எனது மகளின் சாவுக்குக் காரணமானவனைக் கொலைசெய்வதாக சபதம் செய்திருக்கிறார் ஏழுமலை. இதனை மனதில் வைத்துக்கொண்டு, குமரவேலை  கொலைசெய்திருக்கிறார். தற்போது விசாரணை செய்துகொண்டிருக்கிறோம், பிறகு பேசுகிறோம் என்று முடித்துக்கொண்டார்.