கடந்த வருடம் காணாமல் போனவர் எலும்புக் கூடாகக் கண்டெடுப்பு - தலைமறைவான நண்பன் கைது | missing person after one year rescue the body

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (13/05/2019)

கடைசி தொடர்பு:18:20 (13/05/2019)

கடந்த வருடம் காணாமல் போனவர் எலும்புக் கூடாகக் கண்டெடுப்பு - தலைமறைவான நண்பன் கைது

விருதுநகரில் கடந்த ஓராண்டுக்கு முன் காணாமல் போனவரை காவல்துறையினர் தற்போது தூத்துக்குடியில் எலும்புக் கூடுகளாகக்  கண்டெடுத்துள்ளனர்.

விருதுநகர்

விருதுநகர் பாண்டியன்நகரைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (35). பிளம்பராகப் பணியாற்றி வந்த இவரை 28.02.2018-ம் தேதி முதல் காணவில்லை என அவரது தாய் சரோஜா விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராசராசன், உதவி காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் அறிவுறுத்தலின் பேரில் விருதுநகர் ஊரக காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் காணாமல் போய் ஓராண்டுக்குப் பின் இசக்கிமுத்துவை எலும்புக் கூடுகளாகக் கண்டெடுத்த காவல்துறையினர் அவரது நண்பரான கார் ஓட்டுநர் சந்திரனைக் கைது செய்தனர்.

 

இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, இறந்துபோன இசக்கிமுத்துவும் கைது செய்யப்பட்டுள்ள சந்திரனும் நண்பர்கள். இசக்கிமுத்து காணாமல் போன அடுத்தநாளிலிருந்து சந்திரனும் தலைமறைவாக இருந்தார். ஏற்கெனவே சந்திரன் மீது அடிதடி, கொலை வழக்குகள் உள்ளன. எனவே அவரது மொபைல் எண்ணை வைத்து விசாரணை நடத்தியபோது நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பாலபாளையத்தில் இருந்தது தெரியவந்தது. சந்திரனிடம் விசாரித்தபோது சம்பவம் நடந்த அன்று மதியம் இசக்கிமுத்துவும், சந்திரனும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். பின்னர் இருவரும் காரில் சந்திரன் வீட்டுக்குச் சென்றனர். அப்போது சந்திரன் கீழே இறங்கிய பின்பும் இசக்கிமுத்து கீழே இறங்காமல் அதிக போதையில் காருக்குள்ளேயே இருந்துள்ளார். ஆனால் கார் கண்ணாடி மற்றும் கதவை இசக்கிமுத்து பூட்டிவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

கைது செய்யப்பட்ட  சந்திரன்

அன்று இரவு சந்திரன் மீண்டும் வந்து காரை திறந்து பார்த்தபோது இசக்கிமுத்து இறந்துவிட்டார். ஏற்கெனவே தன் மீது கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளதால் பயந்துபோன சந்திரன், இசக்கிமுத்துவின் உடலை காரில் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி மாவட்டம் சிவலார்பட்டி அருகே உள்ள ராம்கோ சிமென்ட் நிறுவனம் அருகே உள்ள ஆட்கள் நடமாட்டம் இல்லாத முட்புதரில் வீசிவிட்டு சென்றுள்ளார். எனவே சந்திரனை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று இசக்கிமுத்துவின் 2 தொடை எலும்புகள், 5 சிறிய எலும்புகள் மற்றும் அவர் அணிந்திருந்த கைலி, பனியனைக் கைப்பற்றியுள்ளோம். மேலும், சந்திரனையும் கைது செய்துள்ளோம் எனத் தெரிவித்தனர்.