‘மாமூல் கொடுத்துதான் மணல் கடத்துகிறோம்!’ -கிராம மக்களை வீடுபுகுந்து மிரட்டிய கும்பல் | Sand robbers threaten to kill

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (13/05/2019)

கடைசி தொடர்பு:19:20 (13/05/2019)

‘மாமூல் கொடுத்துதான் மணல் கடத்துகிறோம்!’ -கிராம மக்களை வீடுபுகுந்து மிரட்டிய கும்பல்

குடியாத்தம் அருகே மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற கிராம மக்களை, மணல் கொள்ளையர்கள் வீடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அச்சமடைந்த கிராம மக்கள், ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியாத்தம் கிராம மக்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், மணல் கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினருக்கு மாமூல் கொடுத்து, மணலை லோடு லோடாக அள்ளிச்செல்வதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். குடிநீர் மற்றும் விவசாய பாசனத் தேவையை பூர்த்திசெய்யும் கௌண்டன்ய மகாநதி ஆறு, மணல் கொள்ளையர்களால் முற்றிலும் நாசமாகியிருக்கிறது. 50 அடி ஆழத்துக்கும் அதிகமாக மணல் அள்ளப்பட்டுவருவதால், நீர்வளம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்திருக்கிறது. குறிப்பாக, குடியாத்தத்தை அடுத்துள்ள அக்ராவரம், பட்டு, ஒலக்காசி, அனங்காநல்லூர், இந்திரா நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் முகாமிட்டு, மணல் கொள்ளையர்கள் கௌண்டன்ய மகாநதி ஆற்றைச் சுரண்டிவருகிறார்கள்.

இரவு பகல் பாராமல் மாட்டு வண்டி, டிராக்டர், லாரிகளில் மணலை அள்ளிச்செல்கிறார்கள். இந்த நிலையில், அக்ராவரம் பகுதியில் மணல் கடத்தலை கிராம மக்கள் சிலர் நேற்று தடுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த கொள்ளையர்கள், இன்று காலை அந்த கிராமத்திற்குள் வீடு வீடாகச் சென்று மிரட்டியிருக்கிறார்கள். தனியாக இருந்த பெண்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். ‘‘போலீஸ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு மாமூல் கொடுத்துதான் மணல் அள்ளுகிறோம், இன்னொரு முறை மணல்  வெட்டுவதைத் தடுத்தால் கொன்னு புதைச்சிடுவோம்’’ என்று பகிரங்கமாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், அச்சமடைந்த கிராம மக்கள் 50-க்கு மேற்பட்டோர், கௌண்டன்ய மகாநதி ஆற்றில் இறங்கி போராட்டம் செய்தனர். மணல் கடத்தலை தடுக்கக்கோரியும், பாதுகாப்பு வழங்கக்கோரியும் வலியுறுத்தினர். 

கிராம மக்கள் போராட்டம்

இதுபற்றி கிராம மக்கள் கூறுகையில், ‘‘மணல் கடத்தலால் ராட்சதப் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. ஆற்றில் தண்ணீர் வரும்போது, அந்தப் பள்ளங்களிலேயே தண்ணீர் நிரம்பி நின்றுவிடும். கடைமடைப் பகுதிவரை தண்ணீர் செல்லாது. அதுமட்டுமல்ல, தண்ணீர் வரும் நேரத்தில் நாங்கள் ஆற்றைக் கடக்க நேரிட்டால், ராட்சத பள்ளங்களில் தவறிவிழுந்து உயிரிழப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. இந்தப் பகுதி, குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்துக்குட்பட்டது. புகாரளித்தாலும் பிரயோஜனம் இல்லை. போலீஸ்காரர்கள், எங்களைத்தான் மிரட்டுகிறார்கள். நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. விவசாயம் பொய்த்துப் போய்விட்டது. மணல் கடத்தலைத் தடுத்து, கௌண்டன்ய ஆற்றை மீட்க வருவாய்த் துறை மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தனர்.