கோவில்பட்டியைக் கலக்கும் சட்டை அணியாத போராளி! - ஐந்தாம் தூண் சங்கரலிங்கம் #MyVikatan | Kovilpatti Old man is known for his battle against social evil

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (13/05/2019)

கடைசி தொடர்பு:19:50 (13/05/2019)

கோவில்பட்டியைக் கலக்கும் சட்டை அணியாத போராளி! - ஐந்தாம் தூண் சங்கரலிங்கம் #MyVikatan

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர், சங்கரலிங்கம். 70 வயதான இவர், கிராம முன்சீப்பாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பிறகு, கடந்த 2008ல் 'ஐந்தாம் தூண்' என்ற அமைப்பைத்  தொடங்கினார்.

சங்கரலிங்கம்

'பணம் பெற்றுக்கொண்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன' என்ற புகார்குறித்து ஆய்வுசெய்யும் விதமாக, கோவில்பட்டி தாலுகா அலுவகத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் சரிபாரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அனுமதிபெற்று ஆவணங்களைச் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டதால், 15 நாள்கள் வரை தாலுகா அலுவலகமே இயங்கவில்லை. கழிவுநீர் ஓடைப் பகுதியில் நாற்காலி போட்டு அமர்ந்து போராட்டம், பல்வேறு வேடமணிந்து மனு அளித்தல், கழுத்தளவு தண்ணீரில் உண்ணாவிரதம், கோயில் உண்டியலில் மனு போடுதல் எனப் பல நூதன போராட்டங்கள் நடத்திய இவர்,  இதுவரை ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்துள்ளார். இதில் தீர்வு கண்டது, ஐந்நூறு மனுக்களுக்குதான்.    

கடந்த 2009ல் கோவில்பட்டி சுற்றுப்பகுதியில் உள்ள நீர்வரத்து, ஊரணிகள், ஓடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற  மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்து,  ஆக்கிரமிப்புகளை அகற்றிட உத்தரவிட்டது  நீதிமன்றம். இதை நகராட்சி நிர்வாகம் செயல்படுத்தாததால், கடந்த 2013ல், காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி, ஆக்கிரமிப்பை அகற்றும் வரையில் சட்டை அணிவதில்லை என்று சொல்லி கோவில்பட்டி கோட்டாட்சியர் முன்பு சட்டையைக் கழற்றியவர், தற்போது வரை வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு, வெள்ளைத் துண்டை உடலில் போர்த்தியபடியே உள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க