அதிகரிக்கும் சிறார் மொபைல் திருடர்கள் - மாற்றத்தை உருவாக்கும் சென்னைக் காவல் துறை! | minor age mobile thiefs are concern says chennai police

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (13/05/2019)

கடைசி தொடர்பு:20:30 (13/05/2019)

அதிகரிக்கும் சிறார் மொபைல் திருடர்கள் - மாற்றத்தை உருவாக்கும் சென்னைக் காவல் துறை!

சென்னை தி.நகர் சரகத்தில் மட்டும், நேற்று ஒரே நாளில் மொபைல் திருட்டு வழக்கில் 19 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவல். பில் இல்லாமல் திருட்டு மொபைல்களை வாங்கும் பொதுமக்களும் சிக்கலில் மாட்டிக்கொள்வதாகக் கூறுகிறது சென்னைக் காவல் துறை.

மொபைல் பறிப்பு

சி.சி.டி.வி வருகைக்குப் பிறகு, சென்னை மாநகரில் செயின் பறிப்பு, மொபைல் பறிப்புக் குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளன. இருந்தாலும், எதிர்காலத்தைப் பற்றிய எந்த அச்சமும் இல்லாமல் இருக்கும் இளம் சிறார்கள் சிலர், மொபைல் பறிப்புக் குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவது கவலையளிக்கும் வகையில் உள்ளது. தி.நகர் சரகத்தில் மட்டும், மார்ச் 12-ம் தேதி, மொபைல் திருட்டு வழக்கில் 19 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 12, 13 வயதானவர்கள் என்பதுதான் வருத்தத்திற்குரிய செய்தி.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.நகர் காவல் துறை துணை ஆணையர் டி.அசோக்குமார் ஐபிஎஸ், “மொபைல் திருட்டுக் குற்றங்களில் 17 வயதுக்குக் கீழான இளம் சிறார்கள்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள். இவர்கள் திருடும் போன்களை வாங்குவதற்கு என்றே ரிச்சு தெரு, பர்மா பஜார் போன்ற இடங்களில் இடைத்தரகர்கள் செயல்படுகிறார்கள். லட்சம் ரூபாய் மொபைலாக இருந்தாலும், வெறும் 1000, 2000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. திருடப்பட்ட மொபைல் போன்களிலுள்ள தகவல்களை அழித்துவிட்டு, புது மொபைல்கள் போல விற்றுவிடுகிறார்கள். இதை வாங்கும் பொதுமக்கள் யாராவது ‘சிம் கார்ட்’டை போட்டவுடன், அம்மொபைல் இருக்கும் இடத்தை போலீஸ் கன்ட்ரோல் ரூமிற்குக் காட்டிவிடும். 

நாங்கள் சென்று விசாரிக்கும்பட்சத்தில், ‘இதை பில் இல்லாமல் வாங்கினேன். யாருடையது என்று தெரியாது’ என்ற பதில்தான் கிடைக்கிறது. முதலில், பில் இல்லாமல் மொபைல் போன்களை மக்கள் வாங்கக் கூடாது. முன்புபோல, இப்போதெல்லாம் ஐ.எம்.இ.ஐ நம்பரை அழித்துவிட முடியாது. சிம் கார்ட்டைப் போட்டு சிக்னல் கிடைத்தவுடனேயே, திருடப்பட்ட மொபைல் போன் எங்கேயிருக்கிறது என்பது தெரிந்துவிடும். இது வாங்கியவர்களுக்கும் சிக்கல்தான்.” என்றவரிடம், “இவ்வளவு சிறார்கள் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்றால், அதற்குக் காரணமென்ன? இவர்களைத் திருத்த முடியாதா...” என்றோம். 

மொபைல் போன் பறிப்பு

“நண்பர்களோடு மது அருந்த வேண்டும், சொகுசாக வாழ வேண்டும் என்பதோடு, குடும்பப் பின்னணி அவர்களுக்கு நன்றாக அமையாததும் காரணம். 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்கூட, இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது. அன்றைய பொழுது ஜாலியாகப் போனால் போதும் என்கிற மனநிலைதான் இவர்களிடம் இருக்கிறது. இவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்தால், இச்சமூகம் தன்னை ஒதுக்கிவைத்துவிட்டதாகத்தான் கருதுவார்கள். சிறையிலிருந்து வெளியே வரும்போது, குற்றம் செய்ய வேண்டும் என்கிற மனநிலைதான் அவர்களிடம் மேலோங்கியிருக்கும்.

கடந்த சில மாதங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 28 சிறார்கள், இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு புனர்வாழ்வு அளித்துள்ளோம். இவர்களில் 12 பேர் தற்போது பள்ளிகளில் படிக்கின்றனர். ஐ.டி.ஐ முடித்திருந்த சிலருக்கு, தனியார் நிறுவனத்தில் வேலையும் வாங்கிக் கொடுத்துள்ளோம். இவர்கள் ஒழுங்காக இருக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க, ஐந்து பேருக்கு ஒரு உதவி ஆய்வாளரையும் நியமித்துள்ளோம். கவுன்சலிங் மூலமாகவும் புனர்வாழ்வு அளித்தல் மூலமாகவும் ஆக்கபூர்வ வழியில் அவர்களைக் கொண்டுசெல்ல சென்னைக் காவல் துறை செயல்பட்டுவருகிறது” என்றார். 

ஒரு குற்றச் சமூகம் உருவாவதைத் தடுக்கும் பொறுப்பு காவல் துறைக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் உள்ளது. சில ஆயிரங்கள் குறைவாக கிடைக்கிறதே என ஆசைப்பட்டு, திருட்டு மொபைல்களைப் பொதுமக்கள் சிலர் வாங்குவதால்தான், அது சந்தையாக மாறி, குற்றத்தைச் செய்ய சிறார்களைத் தூண்டுகிறது. 'எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்' என்பது போல, இளம் சமுதாயம் தவறான பாதைக்குச் செல்வதைத் தடுக்க, அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்.