ஆட்சி மாற்றத்துக்கு அரங்கன் துணை நிற்பார்... தெலங்கானா முதல்வரின் அதீத நம்பிக்கை! | telangana cm chandrasekhar rao visit trichy srirangam kovil

வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (13/05/2019)

கடைசி தொடர்பு:20:50 (13/05/2019)

ஆட்சி மாற்றத்துக்கு அரங்கன் துணை நிற்பார்... தெலங்கானா முதல்வரின் அதீத நம்பிக்கை!

ஆட்சி மாற்றத்துக்கு வித்திடுவார், அரங்கனை நம்பும் தெலங்கானா முதல்வரின் அதீத நம்பிக்கை குறித்து அரசியலில் பெரும்பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

அகில இந்திய அளவில் காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி அல்லாத கட்சிகளை இணைக்கத் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுவரும், தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவின் திருச்சி வருகை பெரும்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இரவு தனிவிமானம் மூலம் திருச்சி வந்த சந்திரசேகரராவ், திருச்சி சங்கம் ஹோட்டலில் தனது நண்பர் மற்றும் உறவினர்கள் சகிதமாக தங்கியிருந்தார். நேற்று இரவு முழுவதும் அங்கு ஓய்வெடுத்த அவர், இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மேளதாளம் முழங்க, திருச்சி ரெங்கா கோபுர நுழைவு வாயிலின் அருகே ஸ்ரீரங்கம் கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்பளித்தனர். அதையடுத்து ரெங்கா கோபுரத்திலிருந்து பேட்டரி கார் மூலம், கோயில் உள்ளே சென்ற சந்திரசேகரராவ் மிகவும் பக்தியாக சாமி தரிசனம் செய்தார். சந்திரசேகரராவ் வருகையையொட்டி ஸ்ரீரங்கம் கோயில், அவர் தங்கியிருந்த சங்கம் ஹோட்டல் மற்றும் திருச்சி விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் தெலங்கானாவில் வந்திருந்த அம்மாநில போலீஸாரும் திருச்சியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து மூலவர் சந்நிதி, தாயார் சந்நிதி, சக்கரத்தாழ்வார் சந்நிதி உள்ளிட்ட கோயில்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்திய சந்திரசேகரராவ், கோயில் உள்பிரகாரம் வெளிப்பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்டதுடன், கோயில் அதிகாரிகளிடம் கோயிலின் தொன்மை குறித்து மிகப் பொறுமையாக விசாரித்துக் கொண்டே வந்தார். சுமார் இரண்டரை மணிக்குமேல்தான் கோயிலிலிருந்து கிளம்பினார். மிகவும் பக்தி மயமாக சுவாமி தரிசனம் செய்த அவர் அங்கிருந்து கிளம்பும் முன், ``மிக நீண்ட காலமாக ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைத்து வந்தேன். அதற்கான வாய்ப்புகள் இப்போதுதான் கிடைத்தது” என்று கூறிவிட்டுச் சென்றார். அந்த வார்த்தைகளில் அர்த்தங்கள் நிறைய உள்ளது எனக் கூறுகிறார்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள். இது குறித்து நம்மிடம் பேசிய அரசியல் கட்சி பிரமுகர்கள், ``இன்று காலை ரங்கநாதரைத் தரிசனம் செய்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் திருச்சி விஜயம் பரபரப்பாகப் பேசப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில் நாடு முழுவதும் தேர்தலுக்கு பிந்தைய அரசியல் பரபரப்பு அதிகமாகி உள்ளது. வெளியாகும் கருத்துக்கணிப்புகளும், நடந்து முடிந்த தேர்தலில், தேர்தல் முடிவு தேர்தலுக்கு பின் கூட்டணி மாற்றங்கள் நடக்கும் எனக் கூறிவருகின்றன.

குறிப்பாக பிஜேபி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி இல்லாத ஒரு மூன்றாவது அணியை அமைக்க புது வேகத்துடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக அவர் அகில இந்திய அளவில் மாநிலங்களில் செல்வாக்கு மிக்க முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக அவர் கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோரைச் சந்தித்துள்ளார். இந்நிலையில் அவர் தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேச உள்ளதாக இரு தினங்களுக்கு முன்பு கூறப்பட்டு அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை அடுத்த பிரதமர் என முதலில் முன்மொழிந்தவர் தி.மு.க தலைவர் ஸ்டாலின்தான். ஆனால், தேர்தல் முடிவு வெளியாக உள்ள சூழலில் மூன்றாவது கூட்டணி அமைக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் சந்திரசேகரராவைச் சந்திப்பது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சியில் ஶ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் முடித்த கையோடு சென்னை கிளம்பிய சந்திரசேகர ராவ் தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியுள்ளார். அந்தச் சந்திப்பில் அரசியல் மாற்றம் குறித்து தி.மு.க சார்பில் பேசிவரும் முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் உடன் இருந்தார். 

இந்த அரசியல் மாற்றங்களையும் சந்திரசேகரராவின் திருச்சி ஶ்ரீரங்கம் வருகையையும் கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் அவர்களின் ஆழமான நம்பிக்கை புரியும். அரசியலில் மாற்றம் வரவேண்டும் என நினைப்பவர்கள் திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு வந்து அரங்கநாதரைத் தரிசனம் செய்துவிட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்குவது வழக்கம். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, மிகவும் பரபரப்பாக ஆட்சி மாற்றம் நடக்கும் எனப் பலரும் விவாதித்து வந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஸ்ரீரங்கம் கோயிலுக்கு நேரில் வந்து, அ.தி.மு.கவின் வேட்பாளர் பட்டியலை வைத்து சாமி தரிசனம் செய்து விட்டுச் சென்றார். அதேபோல கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் முடிவுகள் வெளியாக இருந்த நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி திருச்சி வந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்துவிட்டுச் சென்று முதல்வர் பொறுப்பை ஏற்றார். அந்த அடிப்படையில் திருச்சி வந்து ஶ்ரீரங்க அரங்கநாதரை தரிசனம் செய்து முடித்த கையோடு, சென்னை கிளம்பிய சந்திர சேகரராவ், தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து அடுத்தகட்ட அரசியல் காய் நகர்த்த தொடங்கியுள்ளார்” என்று கூறினார்கள்.

சந்திர சேகரராவின் திருச்சி வருகையும், ஶ்ரீரங்கம் கோயில் தரிசனமும் அடுத்தகட்ட அரசியல் பரபரப்புகளை உருவாக்கியுள்ளது.