`தாய்மாமன் ஸ்தானத்துல பார்க்கப்போறோம்’ - கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுத்த கரூர் சகோதரர்கள் நெகிழ்ச்சி! | Karur Brothers talk about blood donate

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (13/05/2019)

கடைசி தொடர்பு:21:30 (13/05/2019)

`தாய்மாமன் ஸ்தானத்துல பார்க்கப்போறோம்’ - கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுத்த கரூர் சகோதரர்கள் நெகிழ்ச்சி!


 ரத்தம் கொடுத்த சலீம்

கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் சலீம் மற்றும் சாதிக் அலி. சகோதரர்களான இவர்கள் கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். சமூக நோக்கத்தோடு கூடிய செயல்பாடுகளில் அதீத ஆர்வத்தோடு செயல்படுபவர்கள். அடிக்கடி ரத்ததானமும் செய்வார்கள். இது ரமலான் நோன்புக்காலம் என்பதால், இருவரும் கடுமையாக நோன்பிருந்து வந்தனர். இந்நிலையில்தான் கடந்த 11ம் தேதி நள்ளிரவில் நண்பர்கள் ரத்த தான குழுவைச் சேர்ந்த பாலு என்பவர் தொடர்புகொண்டு தாராபுரத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆபரேஷன் செய்து குழந்தையை எடுப்பதில் சிக்கல். அவருக்கு போதிய ரத்தத்தை உடனடியாகச் செலுத்தினால் மட்டுமே, தாயையும், சேயையும் காப்பாற்ற முடியும். பி பாசிட்டிவ் ரத்தம் தேவை எனக் கூறியுள்ளனர்.

நண்பர்கள்

தங்களுக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்துள்ளனர் அவர்களுக்கு நெகட்டிவ் ரீப்ளேகளே வந்துள்ளன. `ஆபத்துக்கு பாவமில்லை' என்று முடிவுசெய்து, பாலுவுக்கு போன் செய்து, `நாங்களே ரத்தம் தருகிறோம்' என்று தெரிவித்துள்ளனர். ஆனால், அதை கேட்ட பாலு, இன்னும் பதறிப்போனார். `ரமலான் நோன்பு இருக்கும் நீங்கள் எப்படி ரத்தம் தரமுடியும்?' என்று மறுத்தார். `கண்ணுக்கு முன்பே கலங்கிநிற்கும் ஒரு உயிருக்கு உதவி செய்யாமல், நோன்பு இருப்பதைப் பார்த்து அந்த அல்லாவே விரும்பமாட்டார். நாங்கள் காலை ஏழு மணிக்கெல்லாம் தாராபுரத்தில் இருப்போம்' என்று சொல்லிவிட்டு, போனை கட் செய்தார்கள். இரவே தாராபுரத்திற்குக் கிளம்பியவர்கள், காலை லோகநாயகிக்கு தேவையான ரத்தத்தை வழங்கி, லோகநாயகியை நலம்பெறச் செய்தார்கள். 

குழந்தை

 

இந்தச் சகோதர்களின் இந்தச் செயல், சமூகவலைதளங்களில் பலரது பாராட்டைப் பெற்றது. இந்நிலையில், இந்தச் சகோதரர்கள் கொடுத்த ரத்தத்தின் உதவியோடு நலமான லோகநாயகிக்கு, இப்போது அழகான ஆண்குழந்தையும் பிறந்திருக்கிறது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் சொல்லி இருக்கிறது.


 

சகோதரர்கள்

 

இதுகுறித்து, சலீமிடம் பேசினோம். ``சாதாரணமா நினைத்து செய்த விசயம் இது. ஆனால், இதனால் எங்களுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் கிடைச்சுருக்கு. இதனால், உற்சாகமிகுதியில் இருக்கிறோம். இன்னும் எங்களை அதிகம் சமூகவிசயங்களில் ஈடுபட வைக்க, மற்றவர்களின்மீது கருணைகொள்ள வைக்க தூண்டி இருக்கு. நலமானதும், தனக்கு ரத்தம் கொடுத்தது இஸ்லாமிய சகோதரர்கள்னு தெரிஞ்சதும், லோகநாயகி ஆனந்தமாயி இருக்காங்க. அவருக்கு ஆண்குழந்தை பிறந்ததும், எங்களை பார்க்க விருப்பப்பட்டு, லோகநாயகியும், அவரோட கணவர் கோபிநாத்தும் எங்களை கூப்பிட்டிருக்காங்க. நாங்க இருவரும் அந்த ஆண்குழந்தையை தாய்மாமன் ஸ்தானத்துல போய் பார்க்கப்போறோம்" என்றார்கள் மகிழ்ச்சியாக.